குறை கூறல்

க.நா. சுப்ரமண்யம் 1964ல் ‘இலக்கிய வட்டம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
அதன் 17வது இதழ் ‘தமிழ் இலக்கியத்தில் சாதனை’ யை அளவிடும் விசேஷ மலராகத் தயாராயிற்று. 1947-64 கால கட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் குறித்து, தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், தி.க.சிவசங்கரன், ரதுலன், வெ.சாமிநாதன். ஆர். சூடாமணி, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோர் அவரவர் நோக்கத்தில் அபிப்பிராயங்கள் அறிவித்து கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.
தி.க. சிவசங்கரன் ‘பதினேழு ஆண்டில் இலக்கியம்’ என்ற தலைப்பில், சிறுகதை, நாவல், கவிதை, புதுக்கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனம், நாடகம் என்று பகுத்து, விரிவாகத் தனது கருத்துக்களை அறிவித்திருந்தார். அதில் புதுக்கவிதை பற்றி அவர் கூறியது இங்கு எடுத்துச் சொல்லப்படவேண்டிய கருத்து ஆகும்–
“புதுக்கவிதை குறித்து என் கருத்து யாது?”
புதுமை, சோதனை என்ற முறையில் நான் புதுக்கவிதையை வரவேற்கிறேன்; திறந்த மனத்தோடு புதுக் கவிஞர்களின் படைப்புகளைச் சுவைக்கிறேன்.
புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், கே.ராமநாதன் ஆகியோரின் புதுக்கவிதைகளை ‘கலா மோகினி’, ‘கிராம ஊழியன்,’ ‘சிவாஜி’, ‘நவ சக்தி’ ஆகிய இதழ்களில் அவை வெளிவந்த காலம் தொட்டு வாசித்து வருபவன் நான்.
அண்மையில் ஆறு ஆண்டுகளாக ‘எழுத்து’ இதழ்களிலும், பின்னர் ‘இலக்கிய வட்ட’த்திலும் இடைவிடாது படித்து வருகிறேன்.
‘எழுத்து’ ஏட்டின் தோற்றத்திற்குப் பின்னால், தமிழில் புதுக் கவிதை எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது. ஆனால் அதன் தரம் பெருகியிருக்கிறதா என்பது சந்தேகம்; விவாதத்திற்குரிய விஷயம்.
என்னைப் பொறுத்தவரையில் இன்று எழுதப்பெறும் பழைய (மரபுக்) கவிதையைப் போலவே புதுக்கவிதையும் எனக்குச் சலிப்பூட்டுகிறது.
புதுக்கவிதையின் புதுப் பாதையை, அதன் சொல்லாட்சியை, படிமச் சிறப்பை, உருவ நயத்தை நான் ரசிக்கிறேன். இப்படியும் கவிதை வரவேண்டியதுதான் என்று உணர்கிறேன். ஆயினும், புதுக்கவிஞர்களின் குரல்களை என்னால் ரசிக்க முடியவில்லை.
வெறுமை, விரக்தி முனைப்பு, மனமுறிவு ஆகிய குரல்கள் பல புதுக்கவிதையின் அடிநாதமாக ஒலிக்கின்றன.
நவீன பட்டினத்தார்களாகவும், பத்திரகிரியார்களாகவும் திருமூலர்களாகவும், திகம்பரச் சித்தர்களாகவும் சில புதுக் கவிஞர்கள் மாயாவாதம் (மிஸ்டிசிசம்) பேசுவது, அதுவும் இந்திய வரலாற்றின் முக்கியமான இக்கால கட்டத்தில் அழுது புலம்பிக் கையறு நிலையில் கை விரல்களைச் சொடுக்குவது, எனக்கு மிகவும் பிடிபடாத சங்கதி.
இந்தக் கவிஞர்கள் தமிழ்ச் சொல்லை முறிக்கட்டும் மனித மனத்தை ஏன் சிரமப்பட்டு முறிக்க வேண்டும்? அது தான் தெரியவில்லை. ஐயோ பாவம் இவர்களுக்கு என்ன சுகக்கேடு, நோய்?
புதுக் கவிஞர்களின் இந்த மனமுறிவு (மனமுறிப்பு) விவகாரம் பற்றி ‘எழுத்து’ ஆசிரியர் சி.சு. செல்லப்பா, 62வது ஏட்டில் வரைந்திருப்பது இங்கு நன்கு சிந்திக்கத் தக்கது.
‘மாடர்னிட்டியும் நம் இலக்கியமும்’ என்னும் 1964 பிப்ரவரி தலையங்கத்தில் சி.சு.செ. கூறுகிறார்:
‘மனமுறிவு-ஃபிரஸ்டிரேஷன்- ஒரு மோஸ்தர் (ஃபாஷன்) இல்லை. இன்னொரு இலக்கிய நோக்கைப் பார்த்து இமிடேட் செய்வதுக்கு; அந்த இடத்து அந்த நாளைய வாழ்வைப் பொறுத்தது. மேற்கே இன்றைய வாழ்வு அதுக்கு உணவூட்டலாம். நம் வட்டாரத்தில் நம் வாழ்வில் அது தொனித்தால் ஒழிய, இலக்கியத்தில் தொனிக்காது. இமிடேட் செய்து தொனிக்கச் செய்தால், அதில் உண்மை இருக்காது.
ந. பிச்சமூர்த்தி இது பற்றி ஒரு சம்பாஷணையில் சொல்லியது. ‘மேற்கே டிஸ்சின்டக்ரேட்டிங்- அதாவது உதிர்கிற நிலை. நம்முடையது; ஷேப்பிங் அதாவது, உருவாகிற நிலை, எனவே மனமுறிவு நம் இலக்கியத்தின் பொதுத் தொனியாக இருக்கமுடியாது.’
ந.பி. வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்துப் பார்க்க முற்படாதவர். ஏன், இலக்கியத்தை விட வாழ்க்கையையே மேலானதாகக் கருதபவருங்கூட, ந.பி. சொன்னது ஆணி அடித்த கருத்து…
ந.பிச்சமூர்த்தியின் ஆணி அடித்த கருத்தை, அதை அடியொற்றிக் குரல் எழுப்பும் செல்லப்பாவின் கருத்தை, ஏனைய புதுக்கவிஞர்கள்-மாயாவாத மனமுறிவுக் குரல் கொடுக்கும் புதுக்கவிதைத் தம்பிரான்கள்-ஏற்றுக் கொள்வார்களா, அல்லது மனமுறிவு (மனமுறிப்பு)த் தத்துவம் தான் இன்றைய புதுக்கவிதையின் பொதுக்குரலாக விளங்குமா என்பது பொறுத்துப் பார்க்க வேண்டிய விஷயம்.
நான் உணர்ந்த வரையில், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மயங்க வைத்தல் ஆகிய சீக்குகள் புதுக் கவிஞர்களிடமும் மலிந்து காணப்படுகின்றன. இந்நோய் விரைவில் அகலக் காலதேவன் அருள் புரிவானாக!
