வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

  1. பிந்திய விளைவுகள்

புதுக்கவிதை தரமான வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருந்த போதே- அந்தக் காரணத்தினாலேயே – அதற்கு எதிர்ப்பும் கிண்டலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் பத்திரிகையிலும் மீண்டும் தலை காட்டின 1966-67ல்.

‘தீபம்’ பத்திரிகை மாதம் தோறும் ‘இலக்கிய சந்திப்பு’ நடத்திய எழுத்தாளர்களிடம் ‘புதுக்கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்வியைத் தவறாது கேட்டுவந்தது. பேட்டி அளித்த இலக்கியவாதிகளும் புதுக்கவிதையைக் குறை கூறியும், யாப்பில்லாக் கவிதை எழுதுகிறவர்களைத் தாக்கியும் கண்டித்தும் தங்களது மேலான அபிப்பிராயங்களை அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு கருத்துக் கூறியவர்களில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி புதுக்கவிதைக்காரர்கள் பற்றி முரட்டடியாக அபிப்பிராயம் தெரிவித்திருந்தார். ‘நான் பார்த்த புதுக்கவிதைகளை எழுதியவர்களுக்குக் கவிதையைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாக இலக்கியத்தைப் பற்றிக் கூட எதுவும் தெரியாது என்பேன். இனி மேலாவது இவர்களுக்கு இலக்கிய அறிவைப் புகட்டமுடியும் என்ற நம்பிக்கையும் கூட இவர்கள் இவரை அளிக்கவில்லை.இவர்களைத் திருத்த முயல்வது வீண் வேலை’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘தாமரை’யும் புதுக்கவிதையின் போக்கைக் குறைகூறி எப்போதாவது கட்டுரைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

அதே சமயத்தில், இப்பத்திரிகைகள் புதுக்கவிதையைப் புதுப்படைப்பாகவோ மொழி பெயர்ப்பாகவோ பிரசுரிக்கத் தயங்கவுமில்லை.

சென்னையில் நிகழ்ந்த இலக்கியக்கூட்டங்களும் புதுக்கவிதை மீது தனிக் கவனம் செலுத்தி வந்தன.

இதனால் எல்லாம், ஜனவரி 1967ல் தனது 97வது ஏட்டின் தலையங்கத்தில் ‘எழுத்து’ பெருமையுடன் குறிப்பிட நேர்ந்தது-

‘புதுக்கவிதை நிலைத்துவிட்டது. புதுக்கவிதை என்பதுக்குப் பதில் தற்காலக் கவிதை என்றே இனி நாம் குறிப்பிடலாம். தமிழை முறையாகப் படித்தவர்கள் யாப்பிலக்கணம் அறிந்தவர்கள் உள்பட புதியவர்களின் கவிதைகள் எழுத்துக்கு முன்னைவிட அதிகமாகக் கிடைக்கின்றன…

சரி. கவிதைகள்பெருகினால் போதுமா, கவிதைகளை ரசிக்கச் செய்ய? போரில் எதிராளியிடமிருந்து இடத்தைப் பிடித்துவிட்ட பின் அடுத்து செய்ய வேண்டிய வேலை, பிடித்த இடத்தை ஆர்ஜிதப்படுத்திக் கொள்வதுதான். அதுக்குப்பின் தான் மேலே முன்னேற்றம். அதேபோல் இலக்கிய சோதனை முயற்சிகள் செய்து வரவும், செய்த அளவுக்கு கணிப்பு செய்வது அடுத்த வேலை’.

அந்த இதழ்முதல் சி. கனகசபாபதி ‘பாரதிக்குப் பின் தமிழில் புதுக்கவிதை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.

அதே இதழில் ‘லகுகவிதை’ என்ற கட்டுரையும் இடம் பெற்றது, அது பூரணமாக நினைவு கூரத் தகுந்தது.

“வெர்ஸ் லிப்ரே என்று பிரெஞ்சு மொழியிலும், ஃப்ரிவெர்ஸ் என்று இங்கிலீஷிலும் கூறப்படுவதின் தமிழ் அர்த்தம் லகுகவிதை சென்ற நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ஜூல்ஸ் லாஃபோர்க் (1860-1887) தான் இந்த வெல்ஸ் லிப்ரே அமைப்பை பிரெஞ்சு மொழியில் கையாண்டவர். அது பின்னால் எஸ்ரா பவுண்டு, டி.எஸ். எலியட் போன்றவர்களால் இங்கிலீஷில் கையாளப்பட்டது. நம் தமிழிலும் இந்த முறைக் கவிதைகள் நிறைய வெளிவந்திருக்கின்றன.

ஆனால் மற்ற மொழிகளில் அவ்வப்போது இந்தவித முயற்சிகளுக்கு எதிர்ப்பும் கண்டனமும் இருந்தது போலவே தமிழிலும் இன்று காணப்படுகிறது. திட்டவட்டமானதாக கருதப்படும் யாப்பு உருவத்துக்கு மீறிச் செய்வது அடாத செயலாகக் கருதப்படுகிறது. இன்னும் ஏதோ தமிழ் கவிதை ஒன்றுக்குத் தான் மரபான, சத்தான யாப்பு இலக்கணம் இருப்பது போலவும், உலகில் மற்ற மொழிகளுக்கு அப்படி எதுவும் இல்லாதது போலவும் நினைப்பு.

எந்த ஒரு மொழி இலக்கியக் கவிதைக்கும் தன் தனக்கென யாப்பு அமைதி இருக்கத்தான் செய்கிறது. லாஃபோர்க்கைப் பற்றிக் கூறும்போது, அவர் மரபான கவிதை உருவத்தை பெயர்த்து எறிந்து விட்டார் என்றும், ‘சின்டாக்ஸ்’ என்கிறோமே சொற்புணரிலக்கணம், அதை சின்னா பின்னம் செய்து விட்டார் என்றும், துணிச்சலோடு அன்றைக்கு பழக்கத்தில் இருந்த சொற்களைப் புகுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. இதே மாதிரி தான் எலியட், பவுண்டு போன்றவர்கள் இங்கிலீஷ் மொழியில் செய்தார்கள். ஆக, புதுக்கவிதை முயற்சி, தற்கால கவிதைப் போக்கு, தமிழில் செய்யப் படுகிறபோது ஏதோ புனிதம் கெடுக்கும் காரியமாக கருதுவது அர்த்தமற்றதாகும். உலக கவிதை மரபு அறிந்து செய்கிற காரியம். ஆகவே இந்த லகு கவிதை பற்றிய சில கருத்துக்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அமிலோவல் என்பவர். ஆயிரத்து தொளாயிரத்தி பத்துக்களில் இயங்கிய படிம இயக்கத்தில் சம்பந்தப்பட்டவர். அவருடைய கருத்து இது; ‘இலகு கவிதை என்பது பேசும் குரலின் ஒலி நயத்தின் அடிப்படையில் அமைக்கப்படுவது. திட்டமிடப்பட்ட சந்த அமைப்பை கடைப்பிடித்து உருவாக்குவது இல்லை. நம் சுவாசத்துக்கு ஏற்பவும் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை ஒட்டியே டி.எச். லாரன்ஸ் சொல்கிறார்; ‘ ஒலி நயம் என்கிற போது அகலமான இறக்கைகள் கொண்ட ஒரு பறவை வானில் பறந்தும் சறுக்கியும் வழுக்கிப் போவதையுமே நான் நினைக்கிறேன். எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் ஒரு நிறுத்தல், ஓய்வு, உணர்ச்சிக்கு ஏற்ப குரல் சுதாவாக இழுபடுவதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. கவிதையை ஆக்குவது துலக்கமாக உள்ள உருவம் இல்லை. உள்பொதிந்து மறைந்து நிற்கும் உணர்ச்சிப் பாங்குதான்.

லாரன்ஸ் சிறந்த புதுக் கவிதைக்காரர்களுள் ஒருவர். அவரது ‘பாம்பு’ என்ற கவிதை மிகச் சிறப்பாக கருதப்படுவது. அவரைப் போலவே டி.எஸ். எலியட்டும் ஒரு கவி. அவர் கூறுகிறார். ‘உருவத்திலிருந்து விடுதலை பெறுவது தான் லகு கவிதை என்றால் ஒரு மட்டமான கவிதான் அதை வரவேற்பான். அது செத்துப்போன, ஒழிந்த, உருவ வகைக்கு எதிரான ஒரு கலகம். புதிய உருவத்துக்கான ஒரு ஆயத்தம், அல்லது பழசை புதுப்பிப்பது ஆகும். வெளித் தோற்றமான ஒரு ஒருமிப்பு ஒரே மாதிரியாக இருக்கும். அதுக்கு எதிராக உள்ளமைந்த ஒருமிப்பைத்தான் இது வலியுறுத்தும். இந்த உள்ளார்ந்த ஒருமிப்பு ஒவ்வொரு கவிதைக்கு தனி விதமானது’.

‘பாழ்நிலம்’ என்ற தன் சிறந்த கவிதை உள்பட புதுக் கவிதைத் துறையில் தலைசிறந்த சாதனை காட்டியுள்ளார் எலியட். அவரைப் போலவேதான் எஸ்ராபவுண்டும். அவர் கூறுகிறார்; ஒருவர் எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிற போதுதான் ஒருவர் லகு கவிதை எழுத வேண்டும்; அதாவது தீர்மானிக்கப்பட்ட சந்த முறைகளால் முடிவதை விட அதிக அழகுடன் ஒரு ஒலி நயத்தை பொருளை (கவிதை உள்ளடக்கம்) ஏற்றிக் காட்டமுடிகிற போதுதான். அல்லது விதிமுறையான, மாறாத, ஒலிக்குறி கொண்ட செய்யுளின் அளவை விட அதிக இயல்பானதாக, பொருளின் உணர்ச்சித் தன்மையின் பகுதியாக அதிகம் இருக்கும், அதிக பொருத்தமானதாக உற்றதானதாக அர்த்தம் சொல்லத்தக்கதாக இருக்கிறபோதுதான்.’

எஸ்ரா பவுண்டு தன் ‘கேன்டோ’ கவிதைகள் மூலம் புதுக்கவிதைகளை சிறப்பாக்கியவர். இப்படி லகு கவிதை பற்றி அந்தத்துறையில் சாதனை காட்டியவர்களே கூறி இருப்பதை நாம் பார்க்கிறபோது இந்த முயற்சி ஏதோ யாப்பு தெரியாமல் எழுதப்படுவது என்பதில்லை, யாப்பை மீறவேண்டும் என்பதுக்காக செய்யப்படவில்லை என்பதும் தெரியவருகிறது.

லகு கவிதை எழுதுபவர்களுக்கு ரொம்ப நுண்ணுணர்வுள்ள செவி தேவையாகும். நல்ல வேலை செய்ய விரும்புகிறவனுக்குத்தான் லகு கவிதை சாத்தியம். லகு கவிதையின் ஊடேயும் எளிமையான ஒரு சந்தப்போக்கின் சாயல் பதுங்கிச் சென்று கொண்டிருக்கும். புதுக்கவிதை வாசகர்கள் இவைகளை மனதில் கொண்டால் லாபகரமானதாகும்.” (எழுத்து 97)

புதுக் கவிதைக்கு எழுந்த எதிர்ப்பின் தன்மையையும், அப்படி எதிர்த்தவர்களின் தன்மையையும் சுட்டிக்காட்டி. அவர்களுக்கு பதில் கூறும் விதத்தில், ‘புதுமை தாங்காத கிணற்றுத் தவளைகள்!’ என்ற கட்டுரை 98 வது ஏட்டில் வெளியிடப்பட்டது.

‘எழுத்து’ ஒன்பதாம் ஆண்டில் வழக்கமாக எழுதிக் கொண்டிருந்தவர்களின் புதுக்கவிதைப் படைப்புகள் இடம் பெறவில்லை. சி. மணியின் கவிதை ஒன்று, வ.க. கவிதைள் இரண்டு. எஸ். வைதீஸ்வரன் கவிதைகள் மூன்று, கி.அ. சச்சிதாநந்தம் கவிதைகள் நான்கு. இவைபோக மற்றவை எல்லாம் புதிய படைப்பாளிகளின் கவிதைகள் தான். ஹரி சீனிவாசன், நீல.பத்மனாபன், பூ. மாணிக்கவாசகம், எழில்முதல்வன், இரா. மீனாட்சி முதலியோர் உற்சாகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆற்றலைக் காட்டும் தரமான படைப்புகளாகவே அவை அமைந்திருந்தன.

நா. காமராசனின் ‘புல்’ எழுத்து மே-ஜூன் இதழில் (101-102) வெளிவந்தது.

வால் முளைத்த மண்ணே
வசந்தத்தின் பச்சை முத்திரையே
உடல் மெலிந்த தாவரமே
உன்னை பனித்துளிகளின் படுக்கையறை என்பேன்.
நஞ்சைத் தண்ணீரில் நனைந்து வளர்ந்து
நாள் தோறும் அறுவடையாகும் நாட்டியப் புல்லே
பால் தரும் கால்நடைகளின் தின்பண்டமே
பச்சை நிறத்தின் விளம்பரமே
குசேலரின் உணவுக் களஞ்சியமே
குதித்தாடும் கடல் நீரைக் காதலிக்காமல்
உப்புருசி பெற்று விட்ட
ஓவியப்புல்லே!

மாதம் தோறும் வெளிவந்த ‘எழுத்து’ அதன் ஒன்பதாம் ஆண்டின் பிற்பகுதியில் (மே -ஜூன் முதல் ) இரண்டு மாதங்களுக்கு ஒரு இதழ் என்ற முறையில் தான் பிரசுரம் பெற முடிந்தது, அதன் பத்தாம் ஆண்டில், முதல் மூன்று மாதங்கள் மாசிகையாக வந்தபின், ஏப்ரல் முதல் அது ‘காலாண்டு ஏடு’ ஆக மாறிவிட்டது.

காலாண்டு ஏடு ஆக ‘எழுத்து’ புதுக்கவிதைக்குச் செய்த பணியை தனியாக ஆராயவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன