
“எங்க வைச்சு தொலைச்சேன்”என்று காலை முதலே பிருந்தா எதையோ தேடிக் கொண்டிருந்தாள். மணி 8. “என்ன பிருந்தா எதை தேடிட்டு இருக்கே?” என்று கேட்டேன்.
“இந்த பர்ஸ் அது எங்க வெச்சேன் தெரியல காலையிலிருந்து தேடிண்டு இருக்கேன். மார்க்கெட்டுக்கு போனும்” என்றாள்.
கடந்த மூன்று நாட்கள் வெளியூர் பயணங்கள். கார்த்திக் காரில் மாயவரம் வைத்தீஸ்வரன் கோவில் குஞ்சுமேடு எல்லாம் போய் வந்தோம் அலைச்சல். வ
வீட்டில் காய்கறியே இல்லை அதனால் புறப்பட்டாள். பல சமயங்களில் பர்ஸை எங்காவது வைத்துவிட்டு தேடுவாள். கொஞ்ச நேரத்தில் கிடைத்துவிடும் இன்று இன்னும் கிடைக்கவில்லை. ஊரிலிருந்து வந்து நேற்று என் தங்கை கீதாவின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வேறு போனோம். அங்கிருந்து இன்னொரு உறவினர் பானு வீட்டில் கிரகப்பிரவேசம் அதற்கும் போய் வந்தோம். பிருந்தா எங்கே விட்டாள் என்று தெரியவில்லை.
ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்திக் கொண்டேன். எல்லா இடத்திலும் அவள் பர்ஸை திறந்து காசு கொடுத்தாள். காரில் இருக்கலாம். வீட்டில் போய் வந்த பையை எல்லாம் காலி பண்ணி விட்டாள். எதிலும் இல்லை.
நான் மொத்தமாக எடுத்துக்கொண்டு போன பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது அவளிடம் கொடுத்து, அவள் தான் செலவு செய்து கொண்டு வந்தாள். அதை அவள் பர்ஸில் போட்டு செலவழித்தாள்.
நான் யோசித்தேன் என்னால் முடிந்த அளவு அவளுக்கு உதவலாம் என்று நினைத்து ஒவ்வொன்றாக கேட்டுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்து குஞ்சு மேட்டில் அவள் ஒருமுறை எடுத்து பிறகு பையில் வைத்து கார் டிக்கியில் வைத்து விட்டாள்.
பொதுவாக வீட்டில் இரண்டு பீரோக்களுக்கு நடுவில் ஸ்டாண்ட் போட்டு வைத்திருக்கும் கேரம் போர்டின் மீது ஸ்லோக புஸ்தகங்கள், மூக்கு கண்ணாடி, ராமா எழுதும் நோட்டு, பர்ஸ் எல்லாம் வைத்திருப்பாள். சில சமயம் கம்ப்யூட்டர் டேபிளில் வைத்திருப்பாள். சில சமயம் டிவிக்குக்கு கீழே இருக்கும் டேபிளிலும் ரூமில் இருக்கும் டேபிளிலும் வைத்திருப்பாள். எல்லா இடத்திலும் தேடி ஆகிவிட்டது எங்கும் இல்லை.
“அது எப்படி மாயமா போய் இருக்கும்? நான் எங்கேயும் விடல” என்றாள்.
“ஏன் பிருந்தா கீதா வீட்ல ஆர்த்தி எடுக்கும்போது பணம் கொடுத்தாளே அதை எதுல வைச்சே?” என்றேன். கீதா வீட்டில் முதல் மாடியில் ஹோமம் நடந்தது கீழ்தளத்தில் ரூமில் பையை வைத்திருந்தோம்.
“பர்ஸ் கீழே இருந்தது நான் கொண்டு வந்து வச்சேன் ஒருவேளை பானு வீட்டுக்கு போற அவசரத்துல அந்த டேபிளிலேயே வைச்சுட்டேனோ? நீங்க வேணா கீதாவுக்கு போன் பண்ணுங்க” என்றாள். நான் கீதாவுக்கு போன் பண்ணி,” பங்க்ஷன் நன்றாக நடந்தது கீதா, பிருந்தா பர்ஸை அங்கே வைத்துவிட்டாளா என்று பார்த்து சொல்” என்றேன்.
“நான் பாக்கறேன் இருந்தா போன் பண்றேன்” என்று கீதா போனை வைத்து விட்டாள்.
” என்ன சொன்னா? என்றாள்.
“கண்ணுக்கு படலையாம் இருந்தா போன் பண்றதா சொன்னா.”
“அங்க இருக்குன்னு சொன்னா பிளாட் பிள்ளையாருக்கு 10 ரூபாய் போடறேன்.”என்று வேண்டிக்கொண்டாள்.
“ஏன் பிருந்தா பானு வீட்டுக்கு போகும்போது வழியில ஆப்பிள் வாங்கினோமே, ஒருவேளை அந்த கடையில பணம் கொடுத்துட்டு பர்ஸை வெச்சிட்டியோ?
இல்ல இல்ல நீங்க தானே எனக்கு பணம் கொடுத்தேள்? ஐநூறு ரூபா குடுத்து அவன் சில்லறை இல்லைன்னு அப்புறம் உங்க கிட்ட இருந்து 200 ரூபாய் வாங்கிட்டு போனேன். ஞாபகம் இருக்கு நான் பர்ஸை எடுத்துக்கொண்டே போகல” என்றாள்.
” ஒருவேளை பானு வீட்டில் வைத்து விட்டாயோ நான் வேணா போன் பண்ணட்டுமா?” அதற்குள் கார்த்திக் “இல்லப்பா அங்க வரும்போது அம்மா கையில பர்சு இல்ல” என்றான்.
“எவ்வளவு ரூபா இருந்தது?”
” ரூபாய பத்தி எனக்கு கவலை இல்லை அதுல தான் என் ஆதார் கார்டு உங்க ஆதார் கார்டு என் PAN கார்டு அப்புறம் டைலர் எலக்ட்ரீசியன் போன் நம்பர் எழுதின நோட்டு விபூதி குங்கும பிரசாதத்தை கட்டி வைத்த பொட்டலங்கள் எல்லாம் இருக்கு .”
அய்யய்யோ பிருந்தா ஆதார் கார்டு PAN கார்டு இல்லேன்னா ரொம்ப கஷ்டம் மறுபடியும் அப்ளை பண்ணி வாங்கணும் எதுக்கும் நல்லா தேடு என்றேன். கிடைக்கவில்லை.
எனக்கு கொஞ்சம் மறதி அதிகமாக இருக்கிறது அவள் 200 ரூபாய் எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு போனாள். கார்த்திக் கார் துடைக்க போனான். நான் யோசிக்க ஆரம்பித்து ஒவ்வொன்றாக நினைவு படுத்தினேன் திடிரென்று
மின்னல் போல் ஒரு நினைவு ஏதோ ஒரு இடத்தில் நான் முன்சீட்டில் இருக்கும் போது பிருந்தா என்னிடம் பர்ஸை கொடுத்து டேஷ் போர்டில் வைக்கச் சொன்னதாக நினைவு வந்தது. ஒரு வேளை அதில் இருக்கலாம்.
சிறிது நேரம் கழித்து பிருந்தா மெதுவாக படி ஏறி வந்தாள்.
என்ன எங்கேயாவது தேடினேளா கிடைத்ததா அப்படி என்றாள்.
“இல்ல பிருந்தா நீ கார்ல ஒரு சமயம் ஐ திங்க் பானு வீட்டுக்கு போகும்போது பர்ஸ் என்கிட்ட கொடுத்து டேஷ்போர்ட்டில் வைக்க சொன்னதா ஞாபகம்.” பிருந்தா பிரகாசமானாள். “ஆமாமா இப்ப ஞாபகம் வந்துடுத்து அங்க தான் இருக்கணும் உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி.என்று எனக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தாள்.
“அப்பா இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு, நீங்க சொல்ற மாதிரி அங்க தான் இருக்கணும்.”
கார்த்திக் வந்தவுடன் அவனை மறுபடியும் அனுப்பி காரில் இருக்கிறதா என்று பார்க்க சொன்னேன் அவன் போய்விட்டு அங்க இல்ல என்று சொன்னான்.
நன்னா பார்த்தியாடா என்றாள் பிருந்தா.
அவன் சிரித்துக் கொண்டே காணாமல் போன அந்த பர்ஸை கையில் காட்டினான். பிருந்தாவுக்கு சந்தோஷம் “முதல்ல கீதாவுக்கு போன் பண்ணி பர்ஸ் இருக்குன்னு சொல்லுங்கோ” என்றாள் நான் கீதாவுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டேன். நல்லவேளை பர்ஸ் கிடைத்து விட்டது.

அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவம்
உங்கள் கூட இருந்து நானும் பிருந்தாவின் தொலைந்த பர்ஸை தேடிய அனுபவம். சரள நடை.