
நீல.பத்மநாபன் அவர்களின் இந்தக் கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை எழுத நான் மூன்று முறை முயன்றும் கவிஞர் இந்த மெலிந்த நூல் மூலம் எனக்குள் கடத்தியிருந்த அவசங்கள் மனதில் அடர்ந்து கவிந்து எழுத விடாமல் பாதித்தது நிஜம். உணர்ச்சிகளைக் கழற்றி வைத்து விட்டு எழுத மட்டுமாக வாசித்தது உருவெடுத்தது இப்படி :
நீல.பத்மநாபன் என்றாலே தமிழுக்கு அணி செய்யும் ’தலைமுறைகள்’, ’பள்ளிகொண்டபுரம்’, ‘உறவுகள்’ போன்ற நாவல்களின் ஆசிரியர் என்று நினைவில் வரலாம். அல்லது அவரது நூற்றுக்கணக்கான சிறுகதைகளையோ, ’சிந்தா முட்கள்’, ’சாயங்கால மேகம்’, ’நகுலம்’ போன்ற கவிதைத் தொகுப்புகளையோ நினைவு கூரலாம்.
இவை அனைத்தோடும், அவருடைய வாசகர்களுக்கு, கர்மயோகியாக அவர் சதா ஆற்றும் மரபுத் தொடர்ச்சி பேணுதல் என்ற இலக்கியக் கடமையாற்றலும் நினைவு வராமல் போகாது.
பத்து வருடம் முன்பு அவரை நேர்கண்டு, அவருடைய படைப்பு இலக்கியத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் பற்றி விரிவாகப் பேசிவர நானும் என் நண்பர் கமல் ஹாசனும் ஒரு வேனல் தினத்தில் திருவனந்தபுரம் போயிருந்தோம். நீண்ட உரையாடலில் நீல.பத்மநாபன் சொன்னார் – ”இந்தக் காலப் பிள்ளைகள் எதையும் படிப்பதில்லை. படித்தால் தான் இலக்கியத்தில் மரபுத் தொடர்ச்சி இருப்பது தெரியும். எனக்கு முன்னோர் எழுதியது என் படைப்பில் எதிரொலிக்க என் எழுத்து எனக்கு அடுத்த தலைமுறை எழுத்தில் பயின்று வரும். வர வேணும்”.
மரபுத் தொடர்ச்சியை அழுத்தமாகச் செய்வது அவருடைய புதிய கவிதைத் தொகுப்பான ’இரவில் விரிந்த மலர்கள்’. இந்தத் தலைப்பு உவேசாவின் ’நிலவில் மலர்ந்த முல்லை’ கட்டுரைத் தொகுதித் தலைப்பை நினைவு படுத்தி மரபுத் தொடர்ச்சியை அடையாளப்படுத்துவது.
’விட்டகுறை தொட்ட குறை போல் கவிதை என்னை விட்டு விலகவில்லை. கவிதையை விட்டு என்னால் விலகிட அகல முடியவில்லை. வலுக்கட்டாயமாக விலக்க அகற்ற எனக்கும் ஏனோ தோன்றவில்லை” என்கிறார் கவி. அவருடைய சிறுகதை ஆக்கத்தின் நீட்சி நாவலாகவும், நாவலின் நீடித்தல் கவிதையாகவும் இருக்க, கவிதையோடு மட்டும் எப்படி உறவு உண்டாகும்? சொல்லப் போனால், இந்தப் புத்தகத்தில் உள்ள இருபத்தைந்து கவிதைகள், நூறு சிறுகதைகளுக்கும் இன்னும் பத்து நாவல்களுக்கும் தூண்டுகோலாகும்.
தேர்ந்த கைகள், எளியனவாகக் காட்சிக்குத் தோன்றும் செறிவு மிகுந்த கவிதைகளை அழுத்தமாக நெய்வதை விட்டு விலகி நிற்பதில்லை என்று சொல்கிறவை இக்கவிதைகள்.
எழுத்தாணி மழுங்கியும் சளைக்கவில்லை
எழுதாமல் இருக்கவும் முடியவில்லை
எழுதிய எழுத்துக்கோ கணக்குமில்லை
எழுதாமல் அணைந்தவை கொஞ்சமில்லை
சுவடியைத் தூக்கிநான் அலையவில்லை
சுருள் நிமிர்த்திப் பார்க்கவோ நாதியில்லை.
ஷெல்லி போல சுயம் சார்ந்து, பிலிப் லார்கின் போல் அமைதியின்மையில் கால்கோள் கொண்டு, கவி மனதிலிருந்து பெருகும் இக் கவிதைகளின் தீவிரம் அசாத்தியம்.
கிட்டே கிட்டே வந்து கௌவிடாமல்
எட்ட எட்டப் போய்விடும் துட்ட நாய்
நாய்க்கும் பேய்க்கும் கூட
வேண்டாத இப்பாவ ஜன்மம்
இன்னும் எத்தனை நாள்
சர்வேசா
மென்மையான ஆன்மீகமும் சித்தர் பாடலின் அகப்பயண அனுபவமும் வெளிப்படுத்தும் கவியுணர்வு, அண்மைக்காலப் பெருந்தொற்றில் மையம் கொண்டு, ’கொரோனா காலத்தில் வந்த பிறந்தநாள்’ என்று தற்காலத்தை எழுத எத்தனை பேருக்கு வாய்த்துள்ளது?
தன்வீட்டில் கிழவனும் கிழவியும் மட்டும்
குழந்தைகள் எல்லாம் வெளியூர்களில்
நாகம் தீண்டியவன் தலையில் இடியும் வீழ்ந்ததுபோல்
பழுதுபார்க்க எடுத்துச் சென்ற வாஷிங் யந்திரத்தை
சரிபண்ணிய பின் திரும்ப வீட்டுக்குக் கொண்டுவர
போலீஸ் அனுமதி வழங்காததால்
குனிந்து நிமிர்ந்து துணிதுவைக்கும் வேலைவேறு புதுசாய்
நீண்டு கொண்டிருக்கும் லாக் அவுட் காலம்.
’இறுதிச் சிறுகதையை எழுதி விட்டேன், இறுதி நாவலை எழுதிவிட்டேன் ஆனால் இன்னும் கவிதையோடு மட்டும் எப்படியோ ஒரு உறவும் பிடிப்பும் இருக்கிறது’ என்று நீல.பத்மநாபன் சொல்வதில் தட்டுப்படும் சோகம் அவர் எழுத்தை நேசிக்கும் வாசகர்களைப் பாதிப்பது.
நீல.பத்மநாபன் போன்ற உன்னதமான படைப்பாளிக்குப் படைப்பின் பொறி மனதில் தட்டுப்பட்டு மகத்தான இலக்கியமாக சர்வேசன் அருளால் வயது ஒரு தடையாக இல்லாதிருக்கட்டும். முதுமை இனிதே என்றாகட்டும்.
இரவில் விரிந்த மலர்கள் கவிதைத் தொகுப்பு
நீல.பத்மநாபன் எழுதியது
விருட்சம் வெளியீடு
அலைபேசி 09444113205, 09176613205
விலை ரூ 80/
அந்திமழை செப்டம்பர் 2022 பிரசுரமானது

நீல. பத்மநாபன் அதிகம் கவிதை எழுதாவர். ஆனால் இந்த சர்வேசன் கவிதை மிகவும் மனத்தைப் பாதிக்கிறது