
எனக்கு முன்னே எத்தனையோ பேர் இருந்தாரப்பா-பேச்சாளர்
என்று பெரும் பெயர் சொல்லி. ஆனால் என்னைப்போல
வேறு ஒருவரை நான் யாங்கணுமே, என்றும் கண்டதில்லை,
கேட்டதில்லை.
பாராட்டா, கண்டனமா? நினைவுநாள்தானா? பாரதி பிறந்த
விழாவா? கலைமகள் நூலிழந்த நாளா? எதுவானால் என்ன?
பேசுவதற்கோ என்னிடம் விஷயமுண்டு-சொன்னால் அடியேன்
தயார், தயார்.
முருகன் புகழ் பாட வேண்டுமா? சைவ ஞான சாரந்தன்னைக்
கசக்கிப் பிழிந்து உருத்தெரியாது ஓட்டி உருட்ட வேண்டுமா?
நாராணன் புகழ்தான் நவில வேண்டுமா? எதுவேண்டும் உமக்கு,
சொல்லும், சொல்லும்.
அமிழ்தென்னும் தமிழின் தொன்மை பறைசாற்ற வேண்டுமா?
முன்னென்றும் பின்னென்றும் எதைப் பற்றி யார் அறிவர்?
போட்டுப் புரட்டி ஒரு நேரம் ஓட வைக்க வல்லேன் கண்டாய்
நானே வல்லேன்.
மாலையை ரெடி பண்ணி வையும். பெரியவர் நாலு பேரைக்
கூட்டும் – சபை திரட்டும். ஐந்தரை மணிக்கூட்டத்துக்கு ஆறு
மணிக்கெல்லாம் வண்டியை ஞாபகமாய் அனுப்பிவிடும்.
நான் தயார்.
மேடைப்படி யேறும்போது ஆர்த்தசபைத் தரமறிந்து பேச
வல்லேன்; கவலையே வேண்டாம், கைதட்டாதவர் எவரும்
வெளியேற முடியாது. எத்தனையோ அப்ளாஸ் வாங்கி எனக்குப்
பழக்கமுண்டு.
குறள் பத்து பாடமுண்டு. கீதையிலும் ஒன்றிரண்டு
தெரியும். பாரதியார் பாடல்களில் ஆங்காங்கே சில மனப்
பாடமுண்டு. வேறுபல நூல்களும் நான் பார்த்ததுண்டு –
பார்த்ததுண்டு.
ராமனும் கண்ணனும் நம் பொதுஉடமை காண் – எடுத்து
வீசலாம். என் போன்றவருக்கு அவர்களைப் போல உதவுபவர் யார்?
எத்தனையோ கதைகள் நான் கேட்டதுண்டு, நீரும் கேட்டிருப்பீர் –
மீண்டும் கேளீர்.
பிறருக்கு எடுத்துரைக்க நீதிகளுக்கு தானா இந்தத் தரும
நாட்டிலே பஞ்சம்? ஊருக்கு நல்லது சொல்லவும் தெரியாதா?
எதை எப்படி எழுத வேண்டும் என்று புத்தி சொல்ல என்னைப்போல்
வேறு யாரே?
இலக்கியக் கூட்டமானால் மிகச் சுலபம். கம்பனும் என்னிடம்
பாடம் கற்றுச் செல்லலாம். ஆரம்பித்து விட்டால் ஓய
மாட்டேன். தொல்காப்பியத்தில், சங்க நூலில் இல்லாதது என்ன-
யாரே கண்டார்?
அரசியல் பிரசங்கமோ தண்ணிபட்ட பாடு, நேற்று பாகிஸ்
தானில் நடந்ததற்குக் கம்ப ராமாயணத்திலிருந்து மேற்கொள்
ஆதாரம் என்னால் காட்ட இயலும் – ஆதாரம் ஆயிரம்
உண்டு உண்டு.
ஆர்த்த சபைக்குக்கந்தது சொல்லத் தெரியும். அத்துமீறாது
பேசி, பழக்கப்பட்ட ஹாயிசங்களுக்கு அப்ளாஸ்கள்
ஓராயிரம் வாங்கிடுவேன். சபை விரும்புவதையே சொல்வேன்
சொல்வேன்
சபையொன்று கூட்டும். என்னைப் பேச நீர் அழையும். உமக்கும்
லாபமுண்டு. சுலபமாகவே பெரிய மனிதனாகிவிடலாம். ஆயிரம்
ஜோடிக் கைகள் தட்டி டேப்ரிகார்டுகள் என்னிடம் இருபது
உண்டு, உண்டு.
என்பேச்சை யாரும் ரிகார்டு செய்ததில்லை அந்தக்கை
தட்டல்தான் எனக்குத் தன்னம்பிக்கை யூட்டும் என்று நானே
எடுத்து வைத்திருக்கிறேன். அடிக்கடி போட்டுப் பார்ப்பேன்.
கேளும்! கேளும்!
‘சரஸ்வதி’
25.10.1958

க.நா.சு.வின் புதுக்கவிதை நன்றாக,தற்காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது.க.நா.சு.வின் கவிதைகள் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளதா என்று அறிய விரும்புகிறேன்.ஆம் எனில், பதிப்பகம் மற்றும் தொடர்பு எண் விபரங்களைப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.