கவிஞர் பிரமிள் கவிதை

                    ஏடு

புரளும் பக்கம் முழுவதும்
அச்சிட்ட நிழல்கள்.
ஒளி எழும்பி,
உயரத்தப்பி இன்னோர்
உலகுக்ககலுது.
நாட்களோ
இரவில் நேர்ந்த
இடைவேளை.
காலையில்
வீதிவழி ஓடினால்
விரியும் விலா எலும்பு
ஆபீஸ் கட்டடங்கள்.
கோவில் இதய முகட்டில்
சிலுவை அறைந்த பரிதி.
ஒளியை மறைக்கும்
உதிரச் சால்வை.
கண்மூடித்தானா
தியானம்?
இருட்டா
இறைவன் மேடை?
உண்மையில் அது
இன்னொரு திரை!
சொல்லைச் சூழும்
கோது வீழட்டும்.
கண்விதை கபாலத்துள்
கிளையும் வேரும்
பாய்ச்சட்டும்
நெருப்பு போல்.
கேள்,
வளரும் கருவின் குரல்.
அரைக்கண் திறந்த
உச்சித் தீவிழி
முகட்டில் புகையடித்த
மண்ணெண்ணெய்ச் சுடர்,
ஒளியடித்த தூள்,
கணத்தில் மறையும்
துணை – அணு
இவை,
அகண்டத்துள் நோக்க
பொட்டுக் கண்கள்.
கூரைக் கண்ணூடே
பரிதி பதித்த விழி
பார்வைக் கம்பு.
நிமிர்ந்தது சிசு…
கண்டது –
நோக்கின் தொகுப்பில்
பரிதியும் சிசுவும்.
முரசுக் கம்புக்
கதிரின் வீச்சு,
மௌன அதிர்ச்சி,
விழிப்பந்து வளைவில்
காலடி ஓசை,
புல் மலர் மேடையில்
கணங்கள் நர்த்தனம்,
இதழில் சிதறும்
பனித்துளி,
புரளும் பக்கம்
வானவில்.
வர்ணப்பேச்சு
ஓய்வற்று…

          எழுத்து, ஆகஸ்ட் 1963.