மணிரத்னம் செய்த ஒரே தவறு/ஜெயதேவன்

மணிரத்னம் செய்த ஒரே தவறு ‘ புத்தகம் ரொம்ப பிரபலம் ; ஆகவே வாசித்தவர்களைக் கண்டிப்பாகத் திருப்திப்படுத்த வேண்டும் ‘ என்கிற நினைப்பில் நாவலை அப்படியே எடுக்க முயன்றதுதான்..சம்பவங்கள் துண்டு துண்டாக மனதில் பதிகின்றன..திரைக்கதைக்கான தொடர்ச்சியே இல்லை..

கதாபாத்திரங்களுக்கான ஆள் தேர்வும் , இசையும் மட்டுமே படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது..இடைவேளைக்குப் பின் கொஞ்சம் பரவாயில்லை ( குறிப்பாக கடல் காட்சிகள் )..பலரும் கேட்டுக் கேட்டு ரசித்த பாடல்களை முழுமையாகக் காட்டாமல் கொத்து புரோட்டோ போடுகிற கொடுஞ்செயலை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் மணி?..பல திரையரங்குகளில் நல்ல ஒலியமைப்பே இல்லை..அது கூடுதல் எரிச்சலூட்டுகிறது.. தாய்மார்கள் வேறு கைக்குழந்தைகளோடும் , சிப்ஸ் & பாப்கார்ன் மூட்டைகளோடும் வந்து கல்லறையில் இருக்கும் கல்கியையே காதை மூடிக் கொள்ள வைத்து விடுகிறார்கள்..பல கணவர்கள் அழும் குழந்தைகளை கையில் வைத்து முறைத்தபடி வாசலில் நின்று கொண்டே மணிரத்னத்தையும் , லைக்காவையும் சபித்துக் கொண்டிருக்கிறார்கள்..

படத்தில் கதாபாத்திரமாக நின்றவர்கள் எனில் வந்தியத்தேவன் , ஆதித்த கரிகாலன் , நந்தினி மட்டுமே..மற்றவர்கள் தோற்றத்தில் சரியாக இருந்தாலும் அவர்களை வெளிப்படுத்துவதற்கான அழுத்தமான காட்சியமைப்புகளே இல்லை..முகநூலில் பலரும் போற்றிப் பாடியதைப் போல் ‘ த்ரிஷா ‘ ஐஸை வெல்ல முடியவில்லை என்பது மட்டுமில்லை ; அவரால் ஐஷூக்கு ஈடு கொடுக்கக் கூட முடியவில்லை..ஐஸ் முகத்தில் தெரியும் முதிர்ச்சியை மணி தொழில்நுட்பத்தின் உதவியால் சமாளித்து விட்டார்..மணிக்கு பிடித்த ‘பெட்ரோமாக்ஸ் லைட்’ என்பதால் ஆயிரமாயிரம் விளக்குகள் ஐஸ் முகத்திற்கு முன் ஒளிர்கின்றன..மணியே மிக முக்கியப் பாத்திரமான குந்தவையை ரொம்ப டம்மியாகக் காட்டியிருக்கிறார்..சிற்றரசர்களுக்கு தூண்டில் போடும் ஒரு இடத்தில்தான் குந்தவை தெரிகிறார்..மற்ற இடங்களில் கொண்டை அவிழ்ந்து விடக்கூடாதென்கிற பதட்டத்தை சிரித்துச் சமாளிக்கும் ‘நகை விளம்பர மாடல் த்ரிஷாவாகவே’ மனதில் பதிகிறார்..

கார்த்தி தன் வழக்கமான நூல் விடுதலை த்ரிஷாவிடமும் விட்டுப் பார்க்கிறார்; அவ்வளவுதான்..அங்கு காதலே நிகழவில்லை..இடையில் த்ரிஷாவும் , ஜெயம் ரவியும் சந்திக்கவுமில்லை..அதற்குள் ஜெயம் ரவி ‘ என் சகோதரியோடு நீ மாலையும் கழுத்துமாக நிற்பதற்கான ஒத்திகை என்கிறார் ? என்ன மணி சார் இது ? மாமன்னன் ராஜராஜ சோழனை ‘ கண்ணெதிரே தோன்றினாள் ‘ கரண் ரேஞ்சுக்கா காட்டுவது ?

இறுதிக் காட்சியும் , அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமும் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டிருக்கின்றன..படத்தில் வரும் ஒவ்வொரு ஒளித்துணுக்கும் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அளவிற்கு அழகாக இருக்கிறது..இசை வேகமெடுத்து , நிதானித்து , மௌனித்து , நம்மை ஆக்ரமிக்கிறது..( திரையில் ரஹ்மான் பெயர் வருகிற போதுதான் உற்சாகமான சத்தங்களோடு அரங்கு நிறைந்த கை தட்டல்) இத்தனை சிறப்புகளையும் ‘ மைய வலுவில்லாத திரைக்கதை ‘ உதவாப் பண்டமாக விசிறியடித்து விடுகிறது..

ஆனால் படம் வணிக ரீதியாக பெரு வெற்றி விடும்..காரணங்கள் இவைதான்

  1. தொடர் விடுமுறை
  2. தமிழர்களின் போலித்தனமான அரைகுறை வரலாற்றுப் பெருமிதம்
  3. எல்லோரையும் சென்றடைந்த விளம்பரம் & பாடல்கள்
  4. பிரபலமான நட்சத்திரப் பட்டாளத்தை மொத்தமாகப் பார்க்கப் போகிறோம் என்கிற மனதின் குறுகுறுப்பு
  5. தொடர் அலையென மாறி மாறித் தொட்டு மொத்த தமிழர்களையும் ‘ குடும்பத்தோடு படம் பார்த்தேயாக வேண்டும் ‘ என்கிற நிர்பந்தத்தை உருவாக்கிய பொதுப் புத்தி..

நாவலுக்கு இந்த அளவிற்கான நியாயம் கூட மணியால் மட்டுமே செய்ய முடியும் என்பதை ‘ நாவல் வெறியர்கள் ‘ புரிந்து கொள்ள வேண்டும்..ஏனென்றால் சிறுகதை மட்டுமே படமாக்குவதற்கு உகந்தது ; நாவல் அன்று..மணி அவர்களை மறந்து விட்டே படமெடுத்திருக்க வேண்டும்..ஆனால் சரளமாக வாள் வீசும் வந்தியத்தேவன் தண்ணிக்கு பயப்படுவது மாதிரி அவர் இவர்களுக்குப் பயந்து விட்டார்..

நாவலின் ஒரு வரி கூடத் தெரியாதவர்களுக்கு படத்தின் கதை புரியவே செய்யாது..ஆனால் ஈராயிரக் குழவிகள் ஒன்றிரண்டு காணொளித் துண்டுகளின் வழி கேள்விப்பட்ட பெயர்களை உளறியபடி கதை புரிந்து விட்ட மாதிரியே தம் ஆதார இயல்புப்படி பயங்கரமாக நடிக்கிறார்கள்..படத்தில் வரும் பாத்திரங்களைத் தாண்டி’ இவர்களின்’ நடிப்பால்தான்’ படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது..

பாகுபலி முதல் பாகம் சில காட்சிகளைத் தவிர எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை..ஆனால் இரண்டாம் பாகம் மிகவும் பிடித்திருந்தது..அதே விதிப்படி வரலாறு மீண்டும் திரும்ப மணிரத்னம் ரசிகனாக வேண்டிக் கொள்கிறேன்.. அவ்வளவுதான் என்னால் இயலும் மணி சார்

  • மானசீகன் *.Maanaseegan

4 Comments on “மணிரத்னம் செய்த ஒரே தவறு/ஜெயதேவன்”

  1. திரைப்படம் தொடங்கும் போதே மணிரத்னம் அவர்கள் தெளிவாக வெளிக்கி விட்டார், மூல கதை மட்டும் கல்கி என்று. இந்த திரைப்படத்தை திரைப்பட நோக்கில் மற்றும் வணிக நோக்கில் அனுக வேண்டும்.
    விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வசனம்.
    திரைக்கதை ஓட்டம், அருமையான காட்சி அமைப்பு.
    மணிரத்னம் அவர்கள் அருமையான வெற்றி பெற்று இருக்கிறார்.

    அது என்ன “தமிழர்களின் போலித்தனமான அரைகுறை வரலாற்றுப் பெருமிதம்”.

    எப்போதும் தூற்றி கொண்டு இருப்பவர்கள் தான் இப்போதும் தூற்றி கொண்டு இருப்பவர்கள்.

    1. ஒரு ரசிகன் எதற்க்கு வணிக நோக்கில் அணுக வேண்டும்..! தயாரிப்பாளர், தியேட்டர்
      ஓனர், வினியோகஸ்தர்தாம் வணிக நோக்கில் யோசிக்க வேண்டும்..

      ஒரு நல்ல வரலாறு.. அதை வைத்துப் புனைந்த ஒரு சுவாரசியமான கதை.. ஒரு நல்ல இயக்குனர்
      இதை ஒரு மிக நல்ல படமாக உருவாக்கி இருக்க இயலும்.. மணி கோட்டை விட்டு விட்டார்..

      நல்ல படமாகவும் வணிக ரீதியில் வெற்றியாகவும் ஆகியிருந்திருக்கும்.. ஹ்ம்.. அவ்வளவு
      ரசனை இருந்தால் ஏன் இந்த மண்ணில் நல்ல தமிழில் எழுதிய பலர் பட்டினியால் இறந்திருப்பர்..
      வாழ்க தமில்.. வளர்க தமிழர்தம் ரசனை..

  2. படம் மோசம் என்று யாரேனும் சொன்னால் நம்பாதீர்கள்.. படம் மோசமில்லை.. படு கேவலம்.. படு மோசம். வடக்கில் வரலாற்றுப் படங்களை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. (பாஜிராவ், பத்மாவத்).. அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்களாம்.. அல்லது அவர்களை வைத்து எடுத்திருக்கலாம்.. தெலுங்கில் கற்பனைக் கதைகளை வரலாறு போல் எடுக்கிறார்கள் PS1 வரலாற்றைக் கற்பனை போல் எடுக்க முயன்று தோற்றிருக்கிறார்கள்.. வரலாற்றுப் படங்களில் இசைக்கு மிக அதிக ஸ்கோப் உண்டு.. நம் ஊரில் பாடல்கள் கட்டாயமென்பதால் அது கூட இசைக்கு ஒரு வரமே.. ஆனால் இவ்வளவு மோசமான பின்னணி மற்றும் திரையிசைப் பாடல்கள் .. என்னைப் பொறுத்த வரை இதை விட விஜய் நடித்த சுறா ஒரு நல்ல படம்..

Comments are closed.