
இரண்டு தடவை குலுங்கியது இரண்டு தடவை கமறியது பின்….நின்றுவிட்டது.
“ஷிட்”.
இன்னும் அதிகப்படியாக சற்றே காதுகளுக்குப் பழக்கப்பட்ட ஆனால் விரும்பத்தகாத வார்த்தைகள்.அவசரமாக இறங்கி காரை சற்றே ஓரமாகத்தள்ளினான்.தனி ஆளாக அந்தப்பெரிய காரை தள்ளுவது அப்படி ஒன்றும் சுலபமான வேலையில்லை.ஆனால் அவன் பலசாலி.கைகளில் நல்ல வலு.அவன் செல்லும் பல பல இடங்களில் பெண்கள் அவன் கை வலிமையைத்தான் நொந்து கொள்வார்கள்.
கார் நடு ரோட்டில் நின்றது அவனுக்குப்பிடிக்கவில்லை.அதை அப்படியே விடுவது அவன் மனதிற்கு ஒப்பவில்லை,யாருமே அதிகம் வராமல் இருந்த அந்த பாதையிலும்..
கைப்பேசியை எடுத்து இருபத்துநான்கு மணி நேர கார் ரிப்பேர் சர்வீசஸ் நம்பரை அழுத்தினான்.நெட்வொர்க் பலத்தைக்காட்டும் டவர் கோடுகள் சமாதானமாகி மறைந்து போயிருந்தன. மறுபடியும் விரும்பத்தகாத வார்த்தைகள்.
காரை ஜாக்கிரதையாக பூட்டிவிட்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆராய்ந்தான்.ஆளில்லாத அந்த அத்துவான காட்டில் தூரத்தில் தெரிந்த மெல்லிய புகை இலுப்பைப்பூவாக மலர்ந்தது.
வேகமான நடையை அவசரமாக்கினான்.மெல்லிய புகையைக் கக்கிக்கொண்டிருந்த அந்த இருள் சூழ்ந்த கட்டிடத்தின் முன் பக்கம் சற்றே சாய்வாகச் சாய்ந்து நின்ற ” ஹோட்டல் ..ருந்து உங்களை வரவேற்கிறது.” அதில் காணாமல் போயிருந்த வி எழுத்து கீழே பராமரிக்கப்படாத புல் தரையில் எங்கோ விழுந்து காணாமல் போயிருந்தது.
மங்கிய மஞ்சள் விளக்கொளியில் அரைத் தூக்கத்தில் முப்பது வயது மனிதன்.லேசான குறட்டை வழியே சரியாகத் தேய்க்கப்படாத பற்கள் அவன் வெளியே விடும் மூச்சுக்காற்றில் குடலை புரட்டும் வேகத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது.
வேறு வழியில்லை.இந்த இரவை இங்கே தான் கழிக்கவேண்டும்.
லேசாகத்தட்டினான்.அவன் அரைக்கண்களின் மூலம் விழித்ததை உணர்த்தினான்.
“கார் நடு வழியிலே மக்கர் பண்ணிடுச்சு.சரி பண்ணலாம்ன்னு பார்த்தா இருட்டிடுச்சு.நெட் வொர்க்கும் கிடைக்கலை.பக்கத்துலே கார் சர்வீஸ் ஸ்டேஷன் எதுனா இருக்கா?ரா தங்க ரூமும் தேவை.இருக்குதில்ல?”
அவன் மத்தியமாகத் தலையை அசைத்து ரூம் சாவி ஒன்றை விட்டெறிந்தான்.
“இரண்டாயிரம் வாடகை.இருபத்திநாலு அவர் செக்கிங்க் ஒரு நாள் தொகை அட்வான்ஸ்” சாவியை நீட்டினான் உனக்கு வேறு வழியில்லை இங்கே நான் மட்டும்தான் அதனால் நான் சொல்வதை நீ ஏற்கவேண்டியது கடமை எனும் தொனியில்.
பணத்தை எண்ணி வைத்து ” சாப்பிட ஏதாவது இருக்கா? கார் சர்வீஸ் செய்ய ஆள் தெரியுமா?”
” சாண்ட்விச் இருக்கு.சார்ஜஸ் தனி.கார் எங்கே பக்கம்தானே.ஆளைக் காலையில் வரச்சொல்கிறேன்.”
இரண்டாவது தளத்தில் கோடியிலிருந்த அறையின் பக்கம் இவனுடைய அறை.எதிர்பார்த்ததைப்போலவே மிகவும் அழுக்கான தலையணை படுக்கை .அதைவிட அழுக்காகக் கரைகள் படிந்த போர்வை.ஆங்காங்கே காய்ந்து போயிருந்த சிவப்பு மஞ்சள் கறைகள்.ஆனால் கண்களை உறுத்தாத மஞ்சள் விளக்கு மட்டுமே ஆறுதல்.
உள்ளே நுழைந்த கையோடு தூக்கக்கலக்கத்துடன் கவுண்டர் ஆள் இரண்டு சாண்ட்விச்சை கடமைக்காக உள்ளே வந்து அழுக்கு டேபிளில் வைத்துச்சென்றான்.
அவன் கதவை தாழ்ப்பாள் போட்டுப் பத்திரப்படுத்தினான். பர்சில் இருந்த சில பல ஆயிரங்களுக்கு அப்போது தான் பாதுகாப்பு.
அவன் சாண்ட்விச்சை முதல் கடி கடித்தபோது அந்த சுகமான இசை அவன் காதுகளில் விழுந்தது.
அந்த அரதல்பழசான மோட்டலில் அவனைத்தவிர யாரும் இருக்கமாட்டார்கள் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்வான்.அப்படி என்றால் மிக அருகில் கேட்கும் இந்த இசை?
அவன் அறைக்கும் பக்கத்து கடைசி அறைக்கும் நடுவே இருந்த கதவின் சிறிய விளிம்பின் வழியே இசை வழிந்து வருவது போல் தோன்றியது.அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மெல்லிய சலங்கைச்சத்தம்.
யாரோ பாடலுக்கு நாட்டியம் ஆடுகிறார் போல் இருக்கிறதே.
கதவின் அருகில் சென்று மிகச் சிறியதாக இருந்த சாவி துவாரம் வழியே பார்த்தான்.
அழகிய….இல்லை மிக அழகிய பெண் ஒருத்தி சிகப்பு நிற உடை அணிந்து நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அவள் முகம் தெரியவில்லை.பின் அழகு…?
அவன் முகத்தை என்றும் பார்ப்பதில்லை. வளவு சுளிவுகள் அழகின் நேர்த்தியை அவனுக்குக் காட்டிவிடும். அதை வைத்து பார்த்தால் இவள் நூறுக்கு நூற்றிபத்து வாங்கிவிடுவாள்.
நாட்டியமாடியபடியே குனிந்தாள்.
“ஐயோ” அவன் உணர்ச்சி மிகப்பட்டுக் கத்திவிட்டான்.
அவளுக்குச் சத்தம்.கேட்டிருக்கும் போல் இருக்கிறது.லேசாகத் தலையைத்திருப்பி கதவு இருந்த பக்கம் பார்த்தாள். இருட்டில் அவள் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அதில் சிரிப்பு இருந்ததை அவனால் உணர முடிந்தது.
அப்படி என்றால்?
லேசாகக் கதவைத் திறக்க முற்பட்டான். அவள் பக்கம் தாளிடப்பட்டிருக்கவில்லை.ஆனால் அவன் திறக்க முற்படுவதனால் ஏற்பட்ட சத்தம் சற்றே அதிகமானதாக இருந்தது.
மறுபடியும் சாவி துவாரம் வழியே பார்த்தான். சிகப்பாகத் தெரிந்தது. ஓ இனிய நாட்டியக்காரியே….கதவின் அருகில் வந்து நிற்கிறாயா….உன் உடையின் சிகப்பை நான் பார்த்துவிட்டேன்.இதோ வருகிறேன்..நீ எதிர்பார்த்ததையும் எதிர்பார்க்காததையும் அள்ளித்தருகிறேன்…..
கீழே கவுண்டரில் வேறு இருவர்.
” ரூம் கிடைக்குமா? வண்டி பஞ்சர்”
மற்றவன் அங்கே சுற்றி ஒட்டி இருந்த போட்டோக்களை பார்த்தபடி இருந்தான்.அதில் ஒரு மூலையில் கண்ணாடி பாதி மறைத்தும் மறைக்காமலும் இருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த ஒரு பத்திரிகையின் கட்டிங்.அதில்
” அவள் பிரபல நாட்டியக்காரி.ஆனால் ஹோட்டல் அறையில் தனிமை தாளாமல் நேற்று தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். மிக அதிசயமான கண்கள் அவளுக்கு. அவை எப்போதும் சிவந்தே இருக்கும் என்று கூறப்படுகிறது.”
