அஞ்சியது நடக்கிறது /ரமேஷ் கல்யாண்

அஞ்சியது நடக்கிறது ! ஓசூரில் ஏரியின் பரப்பை ஆக்கிரமித்து இரட்டை சாலை போடப்பட்டது. சாலை அவசியம்தான். ஆனால் ஏரியின் ஆன்மா சமரசம் ஆகிப் போனது. குறிப்பாக ஏரிக்குள் இருந்த பல நூற்றாண்டு கால குமிழித் தூம்பு – அதாவது ஏரியின் ஓரத்தில் நிரம்பும் ஏரி நீரின் அளவை கண்காணிக்க வைக்கப்படும் கருங்கல் அமைப்பு. அது ஒரு அளவீட்டு உத்தி. அதன் மூலம் சிறிய துவார அமைப்பு மூலம் நீர் கசிந்து வெளியேறி, ஏரி உடைப்பை தவிர்க்கும்.

ஏரியை ஓரத்தில் தூர்த்து ஜேசிபி க்கள் வேலை செய்தபோது அவர்களிடம் சென்று இந்த தூம்பு அமைப்பை இடித்து விடுவீர்களா என்று கேட்டபோது அதெல்லாம் அப்படியேதான் இருக்கும் என்றனர். அங்கே வேலை செய்தவர்கள்.

ஒரு நாள் காலை அந்த தூம்பையே காணவில்லை. பதறிப் போனது மனம்.

இனி எந்த காலத்திலும் ஏரிக்கு நீர் வராது. வந்தாலும் நிறையாது. இனி பெருமழையே எந்த காலத்திலும் வராது என்ற எண்ணம் போல – அந்த குமிழி தூம்பையே உடைத்து பெயர்த்தனர். பதறியது மனம்.

ஏரிக்கு நீர் வரத்து வரும் இடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்புகள். ஆகவே நீர் வர முடியாமல் போகும். ஏரிகள் நிரம்பாது என்ற பெரும் நம்பிக்கை. ! மனிதனுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை !!

பிறகு அந்த அமைப்பு ஏரியின் ஆரம்பத்தில் – அதாவது ஏரியை மறித்து போடப்பட்ட சாலையின் முகப்பில் – ஒரு நினைவுச்சின்னம் போல வைக்கப்பட்டது. இதை வைக்கவேண்டும் என்று பல அமைப்பினரும் தனியரும் கேட்டு மன்றாடியதைப் பற்றி பிறகு கேள்விப்பட்டேன். இப்படி இருக்கிறது நமது மன அமைப்பு.

இன்று தர்கா ஏரியின் அருகில், மழைநீரில் வெள்ளத்தில் வீடுகள் நீரில் தவிக்கின்றன. காரணம் என்னவென்றால் ராஜகால்வாய் – என்று சொல்லப்படும் நீர் வெளியேற்ற கால்வாய்கள் – அடைபட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. சில வருடங்களுக்கு முன்பு அவை கண்டுபிடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வழி செய்யப்பட்டன. இப்போதும் மழைக் காலத்துக்கு முன்பு கால்வாய் சரிசெய்யும் அந்த பணிகள் நடக்கின்றன. ஆனால் பல இடங்கள் அப்படி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இந்த வெள்ள நிலைமை.

இதற்கெல்லாம் என்ன காரணம்? அனுமதியோ, அங்கீகாரமோ தரப்படாமல் யாரும் வீடு கட்டுவதில்லை . அப்படி என்றால் அனுமதி அளிக்கும் அதிகார அமைப்பில் குளறுபடி. பலியாவது சாதாரண மக்கள்.

முடியாட்சி கால அரசர்கள் நீர் மேலாண்மை விஷயத்தில் தொலை நோக்கோடு நீர் நிலை பராமரிப்புகள், ஏரிகள், குளங்கள், சிற்றணைகள், மதகுகள், பெரிய அணைகள் என்று செயல்பட்டார்கள்.

மக்களாட்சி அரசுகள் நீர் நிலைகளை சமாதி ஆக்கிக் கொண்டிருக்கின்றன. சமூகமோ அரசன் என்ன ஜாதி என்று பேசித்திரிகிறது.

ஆற்றில் வெள்ளம் வந்தால் அது மழையின் பொறுப்பு.
ஊருக்குள் வெள்ளம் வந்தால், அதற்கு நாம்தான் பொறுப்பு.
இத்தனைக்கும் இது அதிக எண்ணிக்கையில் ஏரிகள் உள்ள ஊர்.