அஷோக் ஜெயினின் பிளாஸ்டிக் கை!/ ஆர் கே இராமநாதன்

ஆனந்த் ராகவ் சிறுகதை.!

எழுத்தாளர் ஆனந்த் ராகவ் கிட்டத்தட்ட எல்லா சஞ்சிகைகளிலுமே சிறுகதைகள் எழுதியவர். நாடகங்களும் எழுதியிருக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட தூஸ்ரா, ஹோம் மேக்கர் என ஏழைக்கு மேல் நாடகங்கள் எழுதி அவற்றில் சில ஷ்ரத்தா நாடக குழு மூலம் பல முறை நிகழ்த்தப்பட்டு மேடையேற்றம் கண்ட வெற்றி நாடகங்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்,அவற்றுள் சில பரிசுபெற்ற கதைகள். உயிர்மை பதிப்பக வெளீயிடாக வந்திருக்கிறது இந்த க்விங்க் சிறுகதை தொகுப்பினில் வந்துள்ள தொகுப்பில் உள்ள கதை.

கதை சொல்லி மூலம் கதை நகர்கிறது. பதினாறு பக்கங்கள் உள்ள இந்த சிறுகதை 2002 ஆனந்த விகடனில் முத்திரைக்கதையாக வெளிவந்த சிறப்புடையது.

பரோபகாரியான சர்க்கார் பணியிலிருக்கும் கதை சொல்லிக்கு நிகழும் அனுபவமே கதை. நிகழ்வுகளின் மூலம் அடுத்தடுத்த நகர்வுகளில் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருப்பது கதையின் சிறப்பு. நள்ளிரவில் வரும் தொலைபேசி அழைப்பு தரும் பதட்ட உணர்வை ஒரு பாரா உணர்வுபூர்வமாக சொல்கிறது. பணி நிமித்தமாக வந்திருக்கும் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளவருக்கு உதவி செய்யக் கோரி அகமாதாபாத்திலிருந்து நண்பர் வேண்டுகோள் வைக்க ஆஸ்பத்திரிக்கு உதவ விரைகிறார் கதை சொல்லி .

அறிமுகமே இல்லாத போதும் மொழிப் பிரச்சனையால் தவிக்கும் மார்வாரிக்குடும்பம். உணவு மற்றும் சிறு உதவிகள்.

அபாயகட்டத்தை தாண்டி வார்டில் சேர்க்கப்பட்டாயிற்று அந்த நபர். அவரின் பெற்றோர் குஜராத்தில் இருந்து வந்தாயிற்று. பேஷண்ட்டின் தந்தை பெயர்தான் அஷோக் ஜெயின். இந்தக் கதையின் துவக்கப்புள்ளி அவர் மகனின்
ஆஸ்பத்திரி பராமரிப்பில் உதவி என்று துவங்கினாலும் அஷோக் ஜெயினின் பாத்திரத்தை சுற்றியே ஒரு கட்டத்திற்குப்பின் கதை நகர்கிறது.
அதிலும் குறிப்பாக அவருடைய பிளாஸ்டிக் கை பற்றியது.

படிக்கத்துவங்குகையிலிருந்தே வேகம் எடுக்கிற வாசிப்பை ஊக்குவிக்கிற பாணி சிறுகதை. உரையாடல் பகுதி மிகக்குறைவு. அன்றாடம் பார்க்கும் வாழ்வின் சூழல் யதார்த்த நிகழ்வுகள். எல்லாவற்றிலும் பொது இழையாக மேலோங்கி நிற்கும் மனிதநேயம். இவைதான் ஆனந்த் ராகவ்வின் அ.ஜெ. ப்.கையின் பலம்.
கதை சொல்லி அஷோக் ஜெயினின் பிளாஸ்டிக் கை குறித்து நிறைய கேட்க நினைக்கிறார். அவருக்கோ அவர் மனைவிக்கோ அதற்கான நேரடிக்கேள்விகள் இல்லாது போயினும் ஆர்வம் மட்டும் இருக்கிறது. எதுவரை ப்ளாஸ்டிக் கை அமைப்பு, விபத்தா வேறு ஏதாவது வியாதியின் தீவிரத்தால் கை பறிபோனதா என ஏக மனக்கிலேசங்கள். கூடவே நேரடியாக கேட்பதற்கான தயக்கங்கள்.

ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி அந்த பையனும் அவனின் பெற்றோரும் அவன் உடல் நிலை சீராக்கும் நோக்கிற்காக குஜராத் செல்லும் பயணத்தை சற்று தள்ளிப்போடும் முனைப்பில் சைவ சாப்பாடு பேச்சு மொழி வசதிக்காக கதை சொல்லியின் குடும்பத்தில் தங்க நேர்கிறது அஷோக் ஜெயினின் குடும்பம். இயல்பாக பழகும் அவர்களிடம் கதை சொல்லியின் குழந்தைகள் ஒன்றிவிடுகின்றன .

பெரியவர்கள் கேட்க தயங்கும் கேள்வியை குழந்தை கேட்டு வைக்க அஷோக் ஜெயின் தன் ப்ளாஸ்டிக் கை குறித்து அப்போதுதான் சொல்கிறார்.
கதை அங்கு அதிக முக்கியத்துவமும் சிறப்பும் பெறுகிறது.

கலவரக்காரர்களால் துரத்தப்படும் இலியாஸ் என்ற நண்பரைக் காப்பாற்ற
அஷோக் ஜெயின் தன் வலது கையை இழக்க நேர்கிற சம்பவத்தை கதையின் இறுதிப்பகுதி நிகழ்த்துகிறது . பொம்மைக்கைக்குப் பின்னால் தெரியும் நிஜம் சுடுகிறது. கதைசொல்லியின் பரோபகார உணர்வை நாம் சிலாகித்துக் கொண்டே வரும் வாசகர்களாகிய நாம் அஷோக் ஜெயினின் தியாகத்தால் நெகிழ்ந்து போகிறோம். நல்லோர்க்கு என்றும் வலிகள் அவஸ்தைகள் பொருட்டல்ல. தாங்கள் சார்ந்திருக்கும் மனித உறவுகளும் மனமார்ந்த உதவிகளுமே அவர்களின் வாழ்க்கையை வாழ்தலை உயர்த்திப்பிடிக்கும் என்பதை பட்டவர்த்தனமாக பொட்டில் அறைந்தது போல சொல்கிற கதை இது.

கதையின் திசைமாற்றம் இயல்பாக நிகழ்கிறது. கதையில் கதை சொல்லி அவர் மனைவி குழந்தைகள் உதவி கோரி பேசும் அகமதாபாத் நண்பர் பேஷண்ட் அவர் பெற்றோர் என்று பல பாத்திரங்கள் வந்தாலும் அஷோக் ஜெயின் மற்றும் அவர் நண்பர் இலியாஸ் தவிர வேறு யாருக்குமான பெயர்குறிப்பு இல்லை. அது ஒரு சிறப்பு உத்தி என்றால் கதை நிகழும் காலத்தை கணக்கில் எடுத்தால் (2002) அது கலவரம் எனக்குறிப்பிடும் அந்த விபத்தும் நம் கண்முன்னே நிழலாடுகிறது.

அந்த கலவரத்தைப் பற்றி அஞ்சாமல் அதன் பாதிப்பை மட்டும் கோடி காட்டி அதன் தீவிரத்தை நமக்குள் ஆழமாக கடத்தி வைப்பதில் கதை விகடனில் குறிப்பிடப்பட்டதான முத்திரைக்கதை எனும் சிறப்பு அந்தஸ்தை இயல்பாகவே பெற்றுவிடுகிறது.

One Comment on “அஷோக் ஜெயினின் பிளாஸ்டிக் கை!/ ஆர் கே இராமநாதன்”

Comments are closed.