எழுத்தாளர் ஆனந்த் ராகவ் அவர்களின் “ஒரு துளி விஷம்”/சாந்தி ரஸவாதி

எழுத்தாளர் ஆனந்த் ராகவ் அவர்களின் “ஒரு துளி விஷம்” சிறுகதை படித்தேன். மிக எளிய நடையில் உயிர்ப்புடன் எழுதிய கதை.

கதை நாயகி 80 வயதான மூதாட்டி”நானிமா”. வியாதிகள் கரையான் போல உடம்பை அரிக்க குடும்பத்தில் யாருக்கும் வேண்டாத உறுப்பினர் ஆனார். ஆனால் இன்று உற்சாகமாக பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்கிறார். அன்று கும்ப மேளா கிளம்பும் தினம்.
வீடே அமர்க்களமாக கிளம்புகிறது. கிருஷ்ண சந்த் மிஸ்ரா பேத்தி வித்யாவதி குழந்தைகள் ரத்னேஷ் ஜகன்.

மாற்றுத் துணி மாத்திரைகள் தைலம் ஸ்தோத்திரப்புத்தகம் மேத்தி பராத்தா அசார் சகிதம் தயாரானவளை “நானிமா கிளம்பலாமா” என்று பரிவுடன் கேட்ட மிஸ்ரா புதியதாக தெரிந்தார்.‌”புட்டி”கிழவி என்று மற்றவரிடம் குறிப்பிடும் மிஸ்ரா புனிதப் பயணம் கருதி மனது மாறி விட்டார் என்று நினைத்தாள்.

கிருஷ்ண சந்த் அரசு அலுவலக குமாஸ்தா. போதாத சம்பளத்தில் மனைவி வழி மூதாட்டி வேறு. கடன் வாங்கி கும்ப மேளா பயணம்.

வண்டி வந்து விட்டது. மிஸ்ரா அவளைத்தூக்கி உட்கார வைத்தான். செங்கல் மணல் ஜல்லி ஏற்றி செல்லும் வண்டி தான்.‌நெரிசல்.‌ வண்டி அதிரும் போது நானிமாவுக்கு பழைய நினைவுகள்.

18 வயசுல கல்யாணம் 20 வயசுல குழந்தை. சின்னதாக அரும்பிய மீசையுடன் கண்ணில் காதலோடு நெருங்கும் கணவன் நினைவில் வந்து போனான். ஒரு வண்டி விபத்தில் அவளை
விதவையாக்கிப் போனவன்.

கைக்குழந்தையோடு அண்ணன்
தம்பியை அண்டி வாழ்ந்த வாழ்க்கை .‌தையல் மெஷினில் தைய்த்து தேய்ந்து சமையல் வேலையில் சோர்ந்து மகள் ஈஸ்ராவதியை அண்ணி சொன்ன இடத்தில் கட்டி வைத்து அவள் குடிகாரக்கணவனுடன் படும் அவஸ்தைகளை கண்டு கண்ணீர் சிந்திய காலம்.

வண்டி இரண்டு இடத்தில் நின்று இளைப்பாறி நகர்ந்தது. மிஸ்ராவின் உபசரிப்பு புதியதாகவும் தேவையாகவும் இருந்தது..

மீண்டும் பழைய நினைவுகள். ஊரெங்கும் வண்ண மயமாக கொண்டாடும் ஒரு தினத்தில் மகள் தூக்கத்தில் மாரடைப்பால் இறந்தாள். ஒரே பற்றுக்கோடும் அறுந்தது. பக்கத்தில் படுத்து தானும் இறந்து போகத் தோன்றியது.

பேத்தி வீட்டில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஏச்சு பேச்சு அன்பில்லாத சூழல். இவ்வளவு நாள் உயிர் இருப்பதே இந்த கும்ப மேளா பிரயாணத்துக்குத்தான் என்று தோன்றுகிறது…

குழந்தைகளுக்கு கும்ப மேளா கதை சொன்னாள். பாற்கடலைககடைந்து தேவர்கள் அமிர்தம் எடுத்துச் செல்லும் போது ஒரு துளி சிந்திய இடம். இந்த சங்கமத்தில் மூழ்கினால் பாவங்கள் நீங்கும். இனிமேல் செய்யும் பாவங்கள் என்ன ஆகும் என்று குழந்தைகள் கேட்க.”இனி பாவம் செய்யக்கூடாது பேட்டா” என்றாள்.

சங்கமம் வந்து விட்டது. சுற்றி வேத கோஷம், பாண்டு வாத்தியம், சாதுக்கள் ஜிலேபி அகர்பத்தி வாசனை. பரவசமான சூழல்.

கிருஷ்ண சந்த் நானிமாவைத்
தூக்கித்தண்ணீரில்‌
முக்கி முக்கி எடுத்தார். ஒவ்வொரு முறையும் எதோ விடுபடுவது போல இருந்தது நானிமாக்கு.

இந்த முதுகு வலி… விட மாட்டேன் என்கிறது. எதோ கிரியேட்டின் டயாலிஸிஸ் என்று பேசிக்கோண்டார்கள்.

“நானிமா நாங்க சோமேஸ்வர் கோவில் போய் வருகிறோம்.‌
உங்களுக்கு நடக்க முடியாது. இங்கேயே இருங்கள் ” என்று சாப்பிட ரொட்டியும் ‌சாய் கொடுத்துப் போனான்..

நதியையே பார்த்துக்கொண்டு இருந்த நானிமாவுக்குத் தோன்றுகிறது.‌
இவவளவு பாவங்கள் கரைந்த பின்னும் புண்ணியம் பாக்கி இருக்கிறதா.? இந்த பாவங்கள் எங்கே‌ போகும்? கடலில் கலந்து மழையாகி பயிராகி உணவாகி திரும்பி நம்மிடம் வந்து சேருமா?

பசித்தது‌ . ரொட்டியும் சாயும் சாப்பிட்டு வலிக்கும் முதுகை சாய்த்து அமர்ந்தாள்.

இந்த கதை இறந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் ஊடும் பாவுமாக நெய்து அமைத்த அருமையான கதை.‌ எதிர் காலம் என்னவென்று பார்ப்போமா? மிஸ்ரா குடும்பத்துடன் வண்டி ஏறி கோரக்பூர் போய்க்கொணடிருந்தான். நானிமா இங்கு காத்துக் கொண்டு இருக்கிறாள். ஒரு துளி அமிர்தம் சிந்திய இடத்தில் பாவங்கள் தொலைத்து விட்டு ஒரு துளி விஷம் போல் மீண்டும் ஒரு பாவம்.