நினைவுப்பாதை/க நா சு

1

இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
எழுந்துபோய்ப்பார்க்க
செத்துக்கிடந்த தாய்
உருவம் அடியோடு மறந்துவிட்டது.
ஆனால்
‘தாயை இழந்தவன்
அழ வேண்டிய
மாதிரியா நீ அழுதாய்?’
என்று
மறுநாள்
பாட்டி
கேட்டது மட்டும்
பசுமையாய் நினைவில்
பதிந்திருந்தது.

2.

தகப்பன் இறந்தபோது
சாகவயது வந்துவிட்டது
கருமத்தில் கண்ணாக
இருந்தது கண்டு புரோகிதர்
‘என்ன சிரத்தை! என்ன சிரத்தை!’
என்று வைதிகமாய்ப் பாராட்டியது
நினைவில் இருக்கிறது.
குப்பைக்கூட்டி
அப்புறப்படுத்த
உயிரற்ற உடலை
எடுத்தெரிக்க
எத்தனை சடங்குகள்
எத்தனை புராணச் சப்பைக் கட்டுகள்
என்று நினைத்ததும்
நினைவில் இருக்கிறது

3

‘பிள்ளையில்லை
புத்தென்ற நரகத்தில்
பொத்தென்று விழுவான்
இவன்’
என்று
வாழ்வே மாயம்
என்று சொன்னவர்கள்
சொல்வது
நினைவுக்கு வர
புத்தென்ற நரகம்
மெய்யோ பொய்யோ
என்று காணும்
நினைவு பெற்று
இருக்கின்றேன் –
தெரிந்து சொல்வேன்.