
அக்கா தையல்கிளாஸ்
பயிற்சியில் அவளது
கிழிந்த ஜாக்கெட்டை தான்
முதன்முதலில் தைத்தாள்.
பின்பு எனது கொக்கியறுந்த
பள்ளிக்கூட டவுசரின் ஊக்கை
எறிந்துவிட்டு கொக்கிவைத்தாள்..
எனது
அரைநாண் கயிறை பல்லால்
கடித்து எறிந்துவிட்டு
டவுசர் பட்டியில் ஐயனார் கண்கள்
போல் இரண்டு பட்டன் வைத்தாள்..
எம்பராய்டரி ஓரளவுக்கு பிடிப்பட்டபோது
அப்பாவின் பீடி புகைத்த
சட்டை துளைகள் மீது
ஒரு இதயத்தை வரைந்துக்கொடுத்தாள்
திருமணமாகி புகுந்தவீடு
போனபோது மாமா
குடித்துவிட்டு அடிக்கும்போதெல்லாம்
ஊரார் பார்த்துவிடாத அளவுக்கு
ஒரு பெரிய திரையை தைத்தாள்
ஏன் முகம் எல்லாம் வீங்கி கிடக்கிறது
என அம்மா கேட்டால்
அழகான ரோஜாப்பூ வைத்து அவள்
தைத்த கைக்குட்டையால்
மறைத்துக்கொண்டே
‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..’
என்பாள்
நான் எங்குப்போனாலும்
‘நீ மலர் தம்பி தானே..
தையலில் கெட்டிக்காரி..’
என கூறும்பொதெல்லாம்
மனதுக்குள் கேட்கிறேன்..
‘அக்கா உண்மையில்
நீ கெட்டிக்காரியா..’
அனிஷாமரைக்காயர்
