இனிக்கும் தமிழ் – 163/ டி.வி ராதாகிருஷ்ணன்

தித்திக்கும் தமிழ்

திருக்குற்றாலக் குறவஞ்சி

இப்பாடலில் தமிழையும்..சொல்லப்பட்டுள்ள உவமைகள்…சொற்றொடர்கள் ஆகியவற்றை ரசியுங்கள்….

திருக்குற்ற்றாலக் குறவஞ்சி

பந்தாடிய சிறப்பு

வசந்தவல்லி பந்தடிக்கும்போது அவளுடைய செங்கைகளிலேயுள்ள வளையல்கள் கலீர் கலீர் என்றும், செயம் செயம் என்றும் ஒலி முழங்கின. இடைஇனி
நிலைத்திருப்பதே சந்தேகந்தான் என்று சிலம்புகள் புலம்பிக் கொண்டிருக்க,
அவற்றுடன் தாமும் கலந்து புலம்புவது போலத் தன்டைகளும் சேர்ந்து ஒலி
முழங்கின. அவளுடைய இரு கொங்கைகளும் வடிவமைதியிலே தம்மைப் போன்று விளங்கும் கொடிய எதிரியான பந்தினை வென்று விட்டோம்’ என்று குதுகலிப்பனபோலக் குழைந்து குழைந்து குதித்து ஆடிக் கொண்டிருந்தன. இப்படியாக, மலர்களையுடைய பசுங்கொடி போல விளங்கும் நங்கையான, வசந்தவல்லி என்னும் அந்த அழகியானவள் பந்தடித்துக் கொண்டிருந்தாள்.

மிகவும் பெரிய காதணிகளோடு நெருங்கிய கயல்மீன் களையொத்த விழிகள் இரண்டும் புரண்டு புரண்டு ஆடிக் கொண்டிருந்தன. மேகம் போன்ற கூந்தலிலே மொய்த்துக் கொண்டிருந்த வண்டுகள் கலைந்து போதலைக் கண்டு,மதனனின் சிலையிலே நாணாக விளங்கும் வண்டும், அவற்றுடன் கலந்து உடனே போயிற்று. இனி, இங்கு இவள் பந்தடிக்கும் இந்த நிலையினைக் கண்டால், ஆடவர் உலகமானது என்ன பாடுதான் படுமோ? என்று கவலைப் படுவது போல, அவளுடைய இடையும் துவண்டு துவண்டுவாட்டமடைந்தது. மலர்க்கரசாகிய தாமரை மலரிலே வீற்றிருக்கும் திருமகள் போன்ற நங்கையாகிய அந்த வசந்தசவுந்தரி, அவ்வாறு எழிலுடன் பந்தடித்துக் கொண் டிருந்தாள்.

பாடல் –


செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட மலர்ப் பைந்கொடி நங்கைவசந்த
சவுந்தரி பந்து பயின்றனளே. பொங்கு கணங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டாடக் குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
மதன் சிலை வண்டோட இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும்
என்றிடை திண்டாட பங்கய மங்கை வசந்த சவுந்தரி –
பந்து பயின்றனளே.

(செங்கை – சிவந்த முன்னங்கை, வண்டு – கரு வளையல்கள். செயம் – வெற்றி,
சங்கதம் – சந்தேகம். புலம்பு – ஒலி. குழைதல் – துவள்தல். பொங்குதல் –
மிக்கிருத்தல். மண்டுதல் – நெருங்குதல். மங்குல் – மேகம், கூந்தல்,
மதன்சிலை வண்டு -மதனனின் கருப்பு வில்லிலே நாணாக விளங்கும் சுரும்பு,
மலர்ப் பங்கய மங்கை – திருமகள்)