நினைவுகள் அழிவதில்லை

இந்திர நீலன் சுரேஷ்

காற்றில் கலைந்திருந்த கேசத்தை ஒதுக்கி, பார்க் மர பெஞ்சில் அமர்ந்தேன். மரத்தின் ஊடே புகுந்து வந்த காலைக் கதிர் கண்களில் பட்டுத் தெறிக்கச் சற்றுத் தள்ளி அமர்ந்தேன்.

“நான் இன்னும் ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வர்றேன் ” என்றாள்  மனைவி.

ஒரு மணிநேரம் அமைதிப் படுத்தப் பட்டிருந்த ‘திறன் பேசி’ யை அவன் ஒளியேற்ற, டிஜிட்டல் சுவரில் ‘பேத்தி’ சிரித்தாள், உள் நுழைந்து பல வண்ண ‘காலை வணக்கங்களை’ ஒதுக்கி முன்னேறிய போது,

” ஐ’ம் வைஜயந்தி ” என்ற சொற்றொடர் சிறு கட்டமாய் ‘தகவல் அறிவிப்பை’ தந்தது 

தொடர்ந்து, இது யாரோ ‘உன் தொடர்பு லிஸ்டில்’ இல்லாதவர்.. ‘கொடுக்கவா.. விடுக்கவா..?’ என்றது ‘புலனம் ‘

இத்தனை வருடங்கள் மறக்க இயலாத அந்தப் பெயர்..! ஒருவேளை ‘அவளாக..(!)’ இருக்குமோ..? – திறக்கலாமா..?

ப்ரொபைல் படம் ஏதுமில்லாமல் எதோ ஒரு பூவின் படம் இருந்தது..

‘உன் மனைவி சர்வ சாதாரணமாக இந்த மொபைலையும் பார்ப்பாளே, பரவாயில்லையா..? ‘ – எனத் தலைமைச் செயலகம் வினவ ,

விரல்கள் அதை நிராகரித்து,’ ஹாய் ‘ என்றன..

.. சில வினாடிகளில் “எப்படிடா இருக்க..?” – என்றது பதில்.

தொடர்ந்து,  “நம்ம தெரு ராகவனை பாஸ்டன், ‘கலேரியா மால்’..ல பார்த்தேன்.. அவன்தான் உன் நம்பரைக் கொடுத்தான்.

ஏதோ ஸ்கூல் குரூப்..ல நீங்க இருக்கிறீங்களாமே ..! “

ஆம், அவளேதான்..!! –  பத்தாவது, மற்றும் +2 வகுப்புகளில், மூன்று வருடம் உருக, உருகக் கண்களால் காதலித்த என் தெரு பெண்.

உடன் கால குதிரை பின்னோக்கிப் பறந்தது.. மனத்திரை விரிந்தது

அவளுடைய முதல் பார்வையை அப்பப்பா.. என்றும் மறக்க இயலாது..!

 பொதுவாக ஸ்கூல் விட்டு வந்தவுடன் ஹோம் ஒர்க் முடித்து விடு – என்பாள் அம்மா ;  என் வீட்டு மாடி அறையில் ஒரு பழங்கால மர ஜன்னல் எங்கள் நீண்ட தெரு வாசலைப் பார்த்தபடி இருக்கும். அதன் அருகில் உட்கார்ந்து கொண்டுதான் காற்றோட்டமாகப் படிப்பேன் / எழுதுவேன்

 எதேச்சையாக எனது பார்வை தெரு வாசல் பக்கம் செல்ல – அன்று அவளை முதன்முதலாகப் பார்த்தேன்..!

 ‘ஜெயராஜின்’ பெண்ணோவியம், தடக் எனத் தானே ‘பதிவிறங்கி’, பாதையில் வந்தது போல ஒரு உணர்வு..

>  “நல்லா இருக்கேன்..நீ..?”

அதே ‘ஜெ..’ யின் நேர்த்தியான தாவணி கட்டு.. நெஞ்சில் அணைத்த ஸ்கூல் புத்தகங்களுடன் யூனிபார்மில் வந்துகொண்டிருந்தாள். கண்ணும் கண்ணும் கலக்க, அவள் நகர்ந்த அந்த ’57 நொடிகள்’ கடக்கும் வரை இருவரும் கண்களை எடுக்கவே இல்லை.

அன்று ஏதோ எதேச்சையாக நடந்தது என்று இல்லாமல் இது, எல்லா (பள்ளி) நாட்களிலும் நடக்கும் விஷயமானது..

அவளது பள்ளி, என்னுடைய ஸ்கூலுக்கு பிறகுதான் விடும் என்பதால், நானும் வந்தவுடன் உடனடியாக மாடிக்குச் சென்று விடுவேன். மாலை நாலே கால் மணியிலிருந்து, நாலே முக்கால் மணிவரை எப்பொழுது வேண்டுமானாலும் அந்த ‘மூன்றாம் பிறை தரிசனம்’ கிட்டலாம் என்பதால் கம்பி ஜன்னல்களில் முகம் புதைத்துக் காத்திருப்பேன்

தினமும் தெருவில் நுழைந்ததுமே, அவள் கண்கள் நேரடியாக மாடி ஜன்னலைத் தேடும்.. உடன் கண்கள் இரண்டும்  கலந்து உள்ளம் கொண்டாடும்..

 ஒரு நாள் வானம் தேன் சிந்தியது..  மழை, துளி துளியாய் பொழிய அவள் தேவதை போல் இருந்தாள்  நான் குடையாக மாறி விடக்கூடாதா.. என ஏங்கினேன்

 ‘உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்’ என யேசுதாஸ் ‘எனக்கே’ எனக்காகப் பாடினார்..

அவள் அப்பாவிற்கு மத்திய சர்க்கார் உத்தியோகம்.. ஹைதராபாத்திலிருந்து தற்போது வந்திருக்கிறார்கள். பூர்விகம் மாயவரம் பக்கத்திலுள்ள பட்டமங்கலம் எனச் செவிவழிச் செய்தி கிடைத்தது.

ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுமியிடம் என் காதுபட.., “படி வாசல் பிள்ளையாருக்கு விளக்கேத்த  போறேண்டி..” – என்றாள் வைஜயந்தி

 பிள்ளையார் எங்களைப் பார்த்து பொறுமை இழந்து கொண்டிருக்க, நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்

 மௌன மட சிறிய சந்தில் திரும்பும்போது இடைமறித்து நான்,

“ஏன் என்னை அப்படி பாக்கற.. ” என்றேன்

“நீ ஏன் பாக்கற..?  என்றவள், ” சரி இனிமே பார்க்க மாட்டேன்”  என்று புறப்பட்டாள்

 “ஐய்யயோ.. பாரு ப்ளீஸ்…”  என நான் பதறச் சிரித்தே விட்டாள்

> “இப்போ பாஸ்டனில் இருக்கேன் .. ‘பேத்தி’ ஸ்கூல் விட்டு வர நேரம்.. இங்கயே  செட்டில் ஆகியாச்சு..நீ என்னப் பண்ணற..?” 

 1970களின் தொடாமல், ( தோழர், தோழியர் கண்ணிகளில்) படாமல், மிகவும் ரகசிய காதல் ; சந்தர்ப்பங்களைத் தேடித்தேடி அலைந்து -தண்ணீர்  பிடிக்கும்போது, கோலம் போடும் போது, சாமி ஊர்வலத்தின் போது, தெருவில் பால் வாங்கும் போது, நவராத்திரி கொலுவில் பாடும் போது – எனச் சின்ன சின்ன ஜாடை மாடைகள்..

அவ்வப்போது ‘ஹிஸ்டரி புத்தகத்தை’ அவள் தங்கை மூலம் எனக்கு அனுப்புவாள் ( அதற்கு அர்த்தம் சில நிமிடங்கள், மௌன மட சந்தில் சந்திக்கலாம்..) ; ‘அந்த கால’ சமூக இடைவெளி விட்டு உட்கார்ந்த பொழுதுகளில், அந்த மெல்லிய நேரமும் பார்வைகளிலேயே கரையும்..

அங்கு கிடைக்கும், ஓரிரு தனிமையில் வைஜயந்தி பரவலாகச் சொன்ன வார்த்தை’ சீக்கிரம் போகணும்’

>” நானா.., பேங்க் பென்ஷன், ஒரே பொண்ணு ஆஸ்திரேலியாவில்.. வைஜயந்தி, கடைசியாக நாம் சந்தித்த போது நான் என்ன கொடுத்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா..?”

அன்று ‘ஹிஸ்டரி புக்’ கிடைத்ததும், உல்லாசமாக அவளை பார்க்கப்போன போது, அழுகையால் வரவேற்றாள். அப்பாவிற்கு தில்லிக்கு ட்ரான்ஸ்பர். இன்னும் ஒரே வாரத்தில் வீட்டை காலி செய்து கொண்டு பயணம் -என அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்தாள்..!

அந்த கடைசி ஒரு வாரமும் விடாமல் தினம் அந்த சந்தில் சந்தித்தோம்.

“இதெல்லாம் லவ் கிடையாதாம் – ‘அடலசன்ஸ்..ஸாம்’,, படிச்சு வேலை கிடைச்சால் இதெல்லாம் நாம சுத்தமா மறந்துடுவோமாம்..,’ சி.பா ‘ நாவல்ல படிச்சேன்..” – ஒற்றை விரலில் தாவணி நுனியைச் சுழற்றி, விழி ஓரத்தில் துளிர் விடும் நீரைத் துடைத்தாள்

கடைசி நாள் கிளம்பும் போது, இந்தா இதை என் நினைவாக வைத்துக்கொள் வைஜயந்தி, என்று மண்டபத்தூணில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு ‘சிறகை’ பிரித்து எடுத்துக் கொடுத்தேன்..

அவளை வழியனுப்பும் திறன் எனக்கில்லை ; அவள் வீட்டிலிருந்து கிளம்பிய வண்டியை மாடியிலிருந்து பார்த்தேன்..பார்த்தோம்..

> ‘கிளிங் ‘.. என அந்த படம் வந்து விழுந்தது..

அந்த ‘வெள்ளைச் சிறகு’- அதே வெள்ளைச் சிறகு, மனதைக் கவ்வியது..

( ஏன் .. இன்னும் அதை அவள் பாதுகாத்து வைத்திருக்கிறாள்..? )

– கண்ணை மூடி அந்த நொடியில் ,’அவள் முகம், அதே முகம்’ தெளிவாகத் தெரிந்தது..

ன்னங்க..” – என்ற குரல் , 50 வருடங்களை நொடியில் முன் நோக்கி நகர்த்தியது

இந்த ‘வெள்ளை சிறகு’ வழில கிடைச்சது. உங்களுக்குப் பிடிக்குமே..ன்னு கொண்டு வந்தேன். எங்க கண்டாலும் உடனே எடுத்துப்பீங்களே..” – என்ற குரல் என்னை எழுப்ப, இரு கரம் நீட்டி மனைவியிடமிருந்து வாங்கிக்கொண்டேன்..

அந்த ‘வெள்ளை தேவதை’, வீசிய தென்றலில் மெல்லியதாக அசைந்து கைகளிலிருந்து உயரெழும்பியது..

அதைப் பத்திரப்படுத்தி நெஞ்சில் வைத்துக்  கொண்டேன்.

3 Comments on “நினைவுகள் அழிவதில்லை”

Comments are closed.