வயசு//க நா சு

வாலிப முறுக்கிலே
யார் எது சொன்னாலும்
காதில் போட்டுக் கொள்ளாதிருக்கவே
தோன்றியது
அவனுக்கும் இவனுக்கும்
என்ன தெரியும்
எனக்குத் தெரியாதது என்ன
என்கிற ஒரு மிதப்பிலே
எதையும் நின்று கேட்டுக்கொள்ள
நேரமில்லாமலே
போக்கிவிட்டேன்.

இப்போது
அறுபது ஆகப் போகிறது
இந்த சமயத்தில்
காதில் வாங்க
வேண்டியதையெல்லாம்
வாங்காமல் விட்டுவிட்டேனே
என்று ஆயாசமாக இருக்கிறது.
தெரிந்து கொள்ள
இருந்த சந்தர்ப்பங்களை
யெல்லாம் இழந்து விட்டேனே
என்ன முட்டாள்தனம்
என்று
எண்ணிப் பார்க்கிறேன்.

வாயில் வார்த்தைகள் ஊற
வந்து ஒவ்வொன்றாக
அள்ளித் தெளித்துவிட்டு
நான் சொல்வதைக்
காதில் வாங்காமலே
செல்லும்
இளவட்டங்களைக் கண்டு
பரிதாபப் படுகிறேன்
என் பரிதாபம்
இளைஞர்களுக்கு
எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

ஒன்று தான் வழி
அவர்களுக்கு
அறுபது ஆகும் வரை
காத்திருப்பேன்
ஆனால்
üஅப்போதே சொன்னேனேý
என்று
சொல்ல, சொல்லி ஸ்தாபிக்க
எனக்குக் குரல்
அப்போதிருக்குமா
என்பது தான் தெரியவில்லை.