பூம்புகார் /க நா. சுப்ரமணியம்

மேகங்காள்! உங்களுடைய
நிறைக் கர்ப்பங்களில்
எத்தனை வெள்ளங்கள்
காத்துக் கொண்டிருந்தன?
புயலும் மழையும் இடியும்
மின்னலும் மின்னலும்
இடியும் மழையும் புயலுமாக
எத்தனை மனிதர்கள்
பண்ணிய எத்தனை
பாபங்களைத் தண்ணீரில்
அடித்துப் போகக் கடல்
எழுந்து கொந்தளித்து
உயிருள்ள மனிதர்கள்
வாழும் நகரத்தில் பேய்
நடை நடந்து ஆவேசமாக
உறிஞ்ச பரவித்
திரிந்து, நுரையும்
நங்குமரகக் கடலில் மறுபடி
வடிய கட்டிடங்கள்
வண்டிகள் பொருள்கள்
மனிதர்கள் பூதச் சதுக்கம்
கோயில் கோபுரங்கள்
சமணச்சரகம், மாதவியின்
மாளிகை கோவலனின்
கொட்டாரம், ஆனைகள்
மாடுகள், ஆடுகள்
ஆண், பெண், குழந்தைகள்
பூ, பிஞ்சு, கனி
எல்லாம் சேனைகள்
வீரர்கள், ராஜாக்கள்
ராஜகுமாரர்கள்
ராணிகள், நல்லவர்
கெட்டவர், நல்லவரும்
கெட்டவரும் அல்லாதவர்
தருமங்கள் தழைத்த
வீதிகள் தருமங்களே
அறியாத வீதிகள்
எல்லாமே கடலுக்குள்
அடித்துப் போகப்பட்டன.
எத்தனை அடி
உயரம் எழுந்தது அலை?
ஒரு தென்னைமர
உயரம் இருக்குமா?
ஏதற்காக நீ பூம்புகார்
என்கிற பெருமையை
அழித்தாய் நீரே!
உனக்குத் தெரியுமோ?
தெரிந்தாலும்
எனக்கு மட்டும்
சொல்ல வல்லாயோ?