
வடசென்னையின் ஆர்மேனியன் தெருவில், அவசர மனிதர்கள் நடுவே நீந்தி அந்த வீட்டு மொட்டை மாடியை மாஸ்டர் மணி அடைந்தபோது கராத்தே கிளாஸுக்கு அனைவரும் வந்திருந்தார்கள். உள்ளங்கைக்குள் மடங்கிய நான்கு விரல்கள் மேல் அழுத்திய கட்டை விரலோடு இடுப்பின் இரு பக்கமும் கைகளை வைத்துக்கொண்டு மடக்கிய கைகளை நீட்டி . வளைத்து மறுபடி இழுத்து மடக்கி குத்தும் பயிற்சியைத் தொடங்கினர் . கைகள் மாறி மாறி இயங்கும் அந்தப் பயிற்சியில் அசைவுகள் விரைவாக வந்துகொண்டிருந்தன. பயிற்சி மகிழ்ச்சி அளித்தது மணிக்கு. .
இந்த வருடம் கண்டிப்பாக கோல்ட் மெடல் வாங்க வேண்டும். சென்ற இரண்டு வருடங்களாக அவனது பசங்கள் மாஸ்டர் வேணுவின் மாணவர்களிடம் சோலார் பிளெக்ஸில் அடி வாங்கி சோர்ந்து போய்த் தோற்றது இனிமேல் நடக்காது. பஞ்சிங் , கிக்கிங் என்று எல்லாப் பயிற்சிகளிலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள் பசங்க.
அடுத்து தடுப்பு முறைகளில் வேகமும் இருந்தது விவேகமும் இருந்தது. ஆனால் பார்வையின் கூர்மையும் பதிலடி கொடுக்க பாய்ந்ததும் சின்ன தடுமாற்றம் தெரிந்தது. கால்களைக் கவனித்துத் திருத்தச் செய்தான். இனியும் தவறு நேரக்கூடாது. இரண்டு இரண்டு பேராக மோதிக்கொள்ளும் பயிற்சிகள் தொடங்கின. வயிற்றின் மேற் புறமும் நெஞ்சுக்கூட்டின் அடிப்புறமும் இணையும் சோலார் ப்ளெக்ஸில் விழுந்த குத்துக்களை மாணவர்கள் தாங்கி அந்த இடத்தைப் பலப்படுத்திக் கொண்டார்கள். இந்தக் குத்துக்களைத் தடுத்து அதேவேகத்தில் திருப்பித் தாக்கிய பயிற்சிகளில் வேகமும் இருந்தது.
வியர்வையைத் துடைத்துக் கொண்டு வந்து அமர்ந்த மாணவர்களுக்கு , தான் கொண்டு வந்திருந்த பிளாஸ்கில் இருந்து சுக்குக் காபியை ஊற்றிக் கொடுத்து விட்டு , அந்தக் கூண்டுக்குள் இருந்த வெட்டுக்கிளியைக் கவனிக்கச் சொன்னான். ‘அதன் கால் அசைவுகளைக் கவனியுங்கள். பறக்கும் வேகம் கவனியுங்கள் என்ன ஒரு வேகம் .இந்த வேகம் இயல்பாக வரவேண்டும். கொஞ்சம் பிசகினாலும் தவறு . கூண்டுக்குள் கால்களை இயக்கி, பறந்து விளையாடிக் கொண்டு இருந்தது வெட்டுக்கிளி. அதேபோல் அலட்சியம் கலந்த சுறுசுறுப்பு தேவை. முழுக்கவனமும் எதிராளியின் அசைவுகளில். ஆசிரியரின் வார்த்தைகளை அப்படியே மனதில் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.
மணியின் செய்முறைப் பயிற்சி , விளக்கப் பயிற்சி முடிந்து வணங்கி விடை பெற்ற மாணவர்களை வாழ்த்தி அனுப்பி விட்டு வீட்டுக்கு கிளம்பினான் . வீட்டில் தலைவிரி கோலமாகக் காட்சி அளித்த அவன் மனைவி, ‘ ஆபீஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு வராம வெட்டியா வெட்டுக்கிளியை வச்சு என்ன கராத்தே சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கு. அதை வச்சு என்ன பைசா கிடைச்சுச்சு. கடைசியில் எங்க அப்பா வாங்கிக் கொடுத்த வேலையிலே தான் ஓடுது . இந்தாங்க சீட்டு, வாங்கிட்டு வாங்க ‘ என்று வேகமான உடல் அசைவோடு கைகளை வீசி அவள் பேசிய பேச்சை உற்றுக் கவனித்ததில் ஒரு வெட்டுக் கிளியின் வேகம் தெரிந்தது. ‘ சபாஷ் ‘ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு , அவன் கையில் அவள் திணித்த மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்கு கிளம்பினான் மணி. வெட்டுக்கிளி , கால்களை மடக்கிக் கொண்டு , கூண்டுக்குள் இருந்து அவனை வெறித்துப் பார்த்தபடி இருந்தது.
