ராஜாத்தி – சிறுகதை/
நாகேந்திர பாரதி

‘அப்பத்தா, ராஜா வந்திருக்கேன், தாயம் விளையாடலாமா’ . சுருங்கிப் போன அந்த உள்ளங்கையில் அவன் வைத்த தாயச் சோழிகளை , அதுவரை அசைவற்றுக் கிடந்த அந்தக் குச்சி விரல்கள் லேசாக மடக்கிப் பிடிக்க முயன்று தோற்க, குழி விழுந்த கண்களின் ஓரங்களில் இருந்து கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வழிய , வாய் கோணி, கண்கள் அசைந்து தலை சாய்ந்தது.

‘அத்தை ‘ என்று அலறும் அம்மாவோடு சேர்ந்து கூடியிருந்த ஊர்ப் பெண்கள், முந்தானையால் மூக்கைத் துடைத்துக்கொண்டு , குலவையிட்டு அந்தப் பெரிய உயிருக்கு விடை கொடுத்தார்கள். பக்கத்தில் வந்த அப்பா, ராஜாவை அணைத்தபடி, ‘ உன் குரலைக் கேட்கத்தாண்டா இம்புட்டு நாளா அந்த உயிர் துடிச்சுக்கிட்டு கிடந்தது , கேட்டுடுச்சு , போயிடுச்சு ‘ . விம்மலை அடக்க முடியாமல் அப்பாவைக் கட்டிக்கொண்டான் ராஜா. எலும்பும் தோலுமாய்க் கிடக்கும் இந்த உருவமா அந்த அப்பத்தா , ராஜாத்தி அப்பத்தா . வயிற்றுக்குள் ஏதோ கிளம்பி உடல் முழுக்கப் பரவி கண்கள் இருட்ட மயங்கியவனுக்குக் கேட்டது .

‘தம்பியைத் தாங்கிப் பிடிங்கப்பா, தண்ணீ கொண்டு வாங்க ‘ .

ஓங்கு தாங்கான அந்த உருவம் காதுத் தண்டட்டி ஆட நடந்து வரும்போதே ‘டேய் சுப்பு, விறகுக் கட்டையை ஒழுங்கா அடுப்படியிலே அடுக்கி வைக்கத் தெரியாதா , சிலும்பெல்லாம் வாசலில் கிடக்கு பாரு, ராஜா கீழே பார்த்து வரமாட்டான் ,ஓடி வருவான், காலிலே குத்திடுமேடா, ‘ என்று வேலைக்காரனைத் திட்டி விட்டு , குனிந்து அந்த விறகுச் சிறு துண்டை எடுத்தபடி அடுப்படிக்கு ஓடுவாள். அப்போதுதான் பின்னாலே துள்ளியபடி ஓடிவரும் ராஜா ‘ அப்பத்தா’ என்று அவள் முதுகில் ஏறுவதுபோல் பாவனை செய்ய, ‘கருவாப் பயலே, என்னாலே தாங்க முடியுமாடா உன்னை, இறங்குடா ‘ என்று செல்லமாகத் திட்டுவாள்.

அம்மாச்சிக்கு சமையல் வேலை மட்டும்தான். மற்றதெல்லாம் அந்த வீட்டில் ராஜாத்தி அப்பத்தா தான் . மருமகள்களின் மகப்பேறுக்கு மருத்துவச்சி கூட இருந்து உதவி செய்தது . இளவதிலேயே கணவனை இழந்து தம்பி வீடே கதி என்று வந்து .தம்பியின் குடும்பத்திற்காக தன் வாழ்வையே தியாகம் செய்து அவர்களின் குழந்தைகளையும் அவர்களின் குழந்தைகளின் குழந்தைகளையும் வளர்த்து இன்று மண்ணோடு மண்ணாக மாயப் போகிறவள் .

இவன் பிறந்த பிறகு, பால்குடி மறக்கடித்த பின் , இவனுக்கு கொஞ்சம் விவரம் தெரிந்து , அம்மாவை விட்டு வந்து இவள் உடன் ஒட்டிக் கொண்டு , இவனுக்கும் தாத்தா வீடுதான் ..

சிறுவயதில் உடல் முழுக்க சிரங்கு வந்து அவன் சிரமப்பட்ட போதெல்லாம் மருந்திட்டு குணப்படுத்தி சரி செய்து, அந்தத் தாயன்பு அப்பத்தாவிடம்தானே கண்டான். படிப்பிலும் விளையாட்டிலும் வாங்கிய பரிசுகளை எல்லாம் பெருமையோடு பார்த்து , அவனைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து மகிழ்ந்தவள் அவள்தான்.

இரவில் அவனுக்குப் புராணக் கதைகள் சொல்லும்போது தன் சோகக் கதையையும் சேர்த்துச் சொல்லுவாள்.

‘ இருபது வயசிலேயே , முண்டச்சியா, தாலி அறுத்துட்டு , , என் அப்பன் என்னை ஆசையா வளர்த்த இந்த வீட்டுக்கே திரும்பி வந்தாச்சு . என் அப்பன் போனப்புறகும் ,உன் தாத்தன் , என் தம்பி , இன்னை வரைக்கும் நான் சொன்ன சொல்லைத் தட்டாமே , அவன் பொண்டாட்டி வந்தப் புறமும், என் நாட்டாமை தான் இங்கே. ஒரு குறையும் இல்லே. உன் அம்மாவில் இருந்து சித்திமார்கள் வரை இப்ப உன் வரைக்கும் தூக்கி வளர்த்து , இந்த சுகமே போதும்டா சாமி ‘

‘ அப்பத்தா , நான் தான் உன் அப்பாவா ‘
‘ஆமாண்டா, அப்படியே ,அவரை உரிச்சு வச்சு பிறந்திருக்கே. அதனாலே தான் உனக்கும் அவர் பெயர். அவரு எத்தனை கிராமத்தை, நில புலத்தோடு ராஜாவா ஆண்டார். நீயும் பெரிய ஆளாகி , நல்லா படிச்சு ஊரு தேசமெல்லாம் போயி வேலை பார்த்து அவரை மாதிரி ,ஏன் அவருக்கு மேலேயே இருப்படா , செல்லம் ‘

வீட்டு வேலை செய்வதும் கதை கேட்டலும் , தாயத்தில் ஜெயிப்பதும் அவள் சந்தோசங்களில் சில. அவளுக்குள் இருந்த நிர்வாகத் திறமையும் , கதைத் திறமையும், விளையாட்டுத் திறமையும் இந்தத் தலைமுறையில் பிறந்திருந்தால் , அவளை ஒரு நிர்வாக அதிகாரியாகவோ, எழுத்தாளராகவோ , விளையாட்டு வீராங்கனையாகவோ ஆக்கியிருக்கலாம்.

‘பொன்னியின் செல்வன் லைப்ரரியில் இருந்து எடுத்துட்டு வாடா ‘ .

‘எத்தனை தடவை அப்பத்தா, இந்தக் கதை படிச்சுக் காமிக்கிறது ,உனக்கு அலுக்கவே அலுக்காதா’

‘கரிகாலனைக் கொன்னது யாருன்னு தெரிஞ்சுக்கலாம்னுதாண்டா, திரும்ப திரும்பக் கேட்கிறேன் ‘

‘ போங்க அப்பத்தா, அது தெரிஞ்சிருந்தா, கல்கி சொல்லி இருக்க மாட்டாரா ‘

‘ சொல்லி இருப்பாருடா, சூசகமா எங்கேயாவது சொல்லி இருப்பாரு .நீ வாங்கிட்டு வா, அதுக்குள்ளே , உங்க அப்பன் கொண்டு வந்த புளி மூட்டையைப் பிரிச்சு எல்லாப் புளிக்காயையும் அடிச்சுப் பிரிக்கணும் .’

‘நானும் வர்றேன் , அப்பத்தா, ‘

‘வேணாம். கையெல்லாம் காய்ச்சுப் போயிடும்’

“தலையை உலுக்கி கண்களைத் திறந்தவன் எதிரில் இருப்பது அம்மனா .

ஆனால் அந்த அம்மனின் வாய் இப்போது துணியால் இறுக்கிக் கட்டப்பட்டு , மேலே தலையோடு சேர்த்து இறுக்கி , உடம்பு முழுக்கச் சுற்றப் பட்ட அவளுக்குப் பிடித்த சிவப்பு சேலையில் ஒரு பொம்மை போல , ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கிறாள் . இருக்க மாட்டாளே இப்படி அப்பத்தா .”

எத்தனை வேலைகள் அப்பத்தாவுக்கு. ஒரு நிமிடம் கூட பகலில் படுக்க மாட்டாள். முற்றத்துக் காய்கறித் தோட்டத்தைக் கவனிப்பது, பிஞ்சாய்த் தொங்கும் புடலங்காய்க்கு கல் கட்டி விடுவது . வளர்த்து வரும் கோழிகள், குஞ்சுகளுக்கு தீனி போடுவது , அறுவடைக் காலத்தில், நெல் அவிப்பது , காயப்போடுவது , மில்லில் அரைத்து வரும் அரிசியைப் புடைத்து உமி பிரிப்பது , இதற்கு நடுவில் வரும் பண்டிகைகளுக்கு , கல்யாணம் விசேஷங்களுக்கு பணியாரம் முறுக்கு மாவு அரைப்பது, விறகு அடுப்பில் எண்ணைச் சட்டியோடு நின்று , அவள் எடுத்துப் போடும் முறுக்கில் பாதி அப்போதே இவன் வாயில்

‘ பொண்ணு மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வையிடா’ என்று செல்லத் திட்டல் .

அப்போது தான் அவள் தோலில் வெள்ளையாகத் தெரிந்த திட்டு பெரிதாகி உடம்பு பூரா பரவ, வைத்தியத்தால் குணப்படுத்த முடியாமல் , விட்டு விட , வீட்டுக்கு வந்த சொந்தம் ‘ராஜாத்தி வெள்ளைக்காரி ஆகிட்டு வாரா ‘ என்ற கிண்டலில் மனம் தளர்ந்து கிடந்த அப்பத்தாவுக்கு ராஜாதான் துணை. மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருந்து பேச, ராஜா ஒருத்தன் தான் அவள் மேல் புரண்டு விழுந்து , மடியில் படுத்துக் கிடந்து கூடவே இருக்க ‘ நீ நெஜமாவே, என் அப்பன் தாண்டா ‘ என்று உருகிய அப்பத்தா .

” இப்போது எந்த உணர்வும் இல்லாமல் அந்த சேரில் தூக்கி வைக்கப்பட்டு அமைதியாக இருக்கிறாள். எத்தனை மாலைகள் தோள் மேல். கல்யாணத்திற்குப் பிறகு, எத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது மாலைகள். அதுவும் சேரில் அமர்ந்தபடி . “

அப்பத்தா சேரில் அமர்ந்து பார்த்ததில்லை அவன் . எப்போதும் தரையில் காலை மடக்கி அமர்ந்து தான், வேலை, பேச்சு எல்லாம். வருடங்கள் ஓடி அவன் வெளியூர் சென்று படித்து விட்டு அவ்வப்போது இங்கு வந்து ஒருவாரம் இருக்கும் போது எல்லாமே அப்பத்தாவுடன் தாயம் விளையாட்டுதான். சிறு பிள்ளையில் இருந்தே பழக்கம் . அதுவும், அந்த சோவிகளை விரலுக்குள் உருட்டி வைத்து பன்னிரெண்டு பிடித்து வைக்கும் நுணுக்கம் தெரிந்தவர் அப்பத்தா. பெரும்பாலும் ஜெயிப்பது அவங்கதான். . அழும் பேரனை சமாதானப் படுத்த , ஒரு ஆட்டமாவது விட்டுக் கொடுத்து விடுவாள். அது என்னவோ , அவர் தோற்கும் போது எல்லாம் , முகம் ஒரு மாதிரி ஆகி விடும், அதைப் பார்த்த பிறகு அழ மாட்டான் ராஜா . ‘ நீங்களே ஜெயிச்சுக்குங்க , அப்பத்தா ‘ என்று அவன் சொன்னவுடன் என்ன சந்தோசம் அவங்க முகத்தில் . வாழ்க்கை முழுக்கத் தோற்ற அவளுக்குக் கிடைத்த சந்தோஷங்களில் அதுவும் ஒன்றா . .

அவளும் ஒரு பெண் தானே. இளமையில் விதவையாய் தம்பி வீட்டில் வந்து இருந்து . எத்தனை உணர்வுகளை அனுபவித்திருப்பாள். எத்தனை நெருப்பை விழுங்கி இருப்பாள். எத்தனை நீரில் முழுகி இருப்பாள் . வீட்டு வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுச் செய்தது எல்லாம் நினைவுகளை மழுங்கடிக்கத்தானோ . கணவனுடன் வாழ்ந்த வருடங்கள், கொஞ்சம் இன்பமும் , நிறைய துன்பங்களுமாய் , அனுபவித்த கொடுமைகள், சொல்லி இருக்கிறாள் சில கதைகளை. கிணற்றில் தண்ணீர் மொண்டு அண்டா அண்டா வாக நிரப்பியது , எத்தனை துணிமணிகள் கல்லில் துவைத்து துவைத்துப் பிழிந்து காயப் போட்டே காய்த்துப் போன கைகள். அடுப்படி வேலைகள்தான் எத்தனை .தனது அம்மா சொற்படியே இவளை ஆட்டிப்படைத்த, இருபது வயது மூத்த கணவன். அவன் மாரடைப்பில் இறந்து அவள் இங்கு திரும்பியதும் அவளுக்கு நிம்மதியா.

ஆனால் எந்த உணர்ச்சிகளையும் உடனே வெளிக் காண்பிக்க மாட்டாள். தாத்தா , அம்மாச்சியோடு இவன் சினிமாவுக்குக் கிளம்பும்போதும் வரமாட்டாள். வெள்ளைத் தோல் ஆவதற்கு முன்பும் தான். ஆனால் இரவில் அவனைக் கட்டிப் பிடித்து அழ மட்டும் செய்வாள். அவனிடம் கதை கேட்டுக் கொள்வாள். எந்தக் கல்யாண மண்டபத்திற்கும் , வெளியூருக்கும் வந்ததில்லை. தான் அதிர்ஷ்டம் கெட்டவள் என்ற நினைப்பு. எந்த இன்ப விழாக்களிலும் , எந்த இன்ப நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தாள் . தம்பி குழந்தைகளை வளர்த்து மணமுடித்துக் கொடுத்து மூத்தவளின் மகன் ராஜாவின் முகத்தில் தன் பிரியமான, தன்னைத் தூக்கி வளர்த்த, மிட்டாய் வாங்கிக் கொடுத்த , அந்த குழந்தைப் பருவ நினைவைத் தேக்கி விட்டுப் போன, தன் அப்பனைக் கண்டு மகிழ்ந்து அது போதும் என்று இருந்தாளா.

இவள் இந்த நாட்டின் மண்ணோடு மண்ணாகக் கலந்து இந்த கலாச்சாரத்தை வாழ வைத்துக் கொண்டு இருக்கப் போகும் ஜீவன்.இதில் இருந்து முகிழ்த்து வருவார்கள் இன்றைய புதுமைப் பெண்கள் , புரட்சிப் பெண்கள் . அது ஒரு தலைமுறையின் உதாரணம். உதிர்ந்து போன உதாரணம். ஆனால் மறுபடி பூக்க வாய்ப்பில்லா சருகாக அல்ல. பல செடிகளை உயிர்ப்பித்து எழ வைத்து பூக்க வைக்கும் உரமாக . அன்பின் உரமாக , திறமையின் உரமாக..

அங்கே அவளைச் சுற்றி இருந்த மாலைகளில் இருந்து உதிர்ந்த மலர்களில் இருந்தும் வாசம் கமழ்ந்து அந்த வீடு முழுக்க மணம் பரவியிருந்தது .

‘தூக்கறவங்க எல்லாம் வாங்கப்பா ‘ ஒரு குரல் .

அவளுக்கு என்று ஒரு ஆசையும் இருந்தது. சொல்லி இருந்தாள் இவனிடம், அவன் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றபோது.

‘இந்த ராஜாத்தியைத் தூக்கிப் போடவாவது வருவாயாடா ராஜா ‘
‘வந்திருக்கேன் அப்பத்தா ‘