“எது உண்மை?”/எம் டி முத்துக்குமாரசாமி

ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஆணையிட்ட பிலாது மன்னன் “எது உண்மை?” என்று வியந்து நகைத்தான் என்பதை நினைத்து நினைத்து முல்லா நஸ்ருதீன் வீட்டின் வெளித் தாழ்வாரத்தில் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு கோபமாக நடை பயின்றார்.

நேற்றிரவு அவர் உருப்படியான தத்துவ நூல்கள் எதையும் வாசிக்கவில்லை; அப்படி வாசிக்காமல் தூங்கிவிட்டால் மறுநாள் காலையில் இப்படி ஏதாவது அவர் மனதைப் பீடித்துவிடுகிறது. நஸ்ருதீன் தான் வசிக்கும் தெருவில் சாமுவேல் பெக்கெட் போல வாழ்ந்துகொண்டிருந்தார். ( அதாவது சாமுவெல் பெக்கெட் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பின்பும் கூட அவர்வசித்த தெருவில் அவர் யார் என்று யாருக்கும் தெரியாது).

ஆகவே அவர் இப்படி தலையை வலப்புறமும் இடப்புறமும் ஆட்டிக்கொண்டு, கோபமாய் விழிகளை விரித்துக்கொண்டும் யாரையோ எச்சரிக்கை செய்வது போல ஆட்காட்டி விரலை ஆட்டுவதுமாய் இருந்தததால் தெருவில் வசிப்போர் அவரைச் சூழ்ந்து அவர் யார் அவருக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்தனர். அவர்களில் பலருக்கும் பிலாது மன்னன் 2023 வருடங்களுக்கு முன் கேட்ட எது உண்மை என்ற கேள்வி இப்போது எதற்கு அவரை ஆக்கிரமிக்கவெண்டும் என்று புரியவில்லை.

முல்லா நஸ்ருதீன் சொன்னார்: “புத்தகக்கண்காட்சிக்குச் சென்றால் முக்கால்வாசி கவிதை நூல்கள் ஸ்டாக் இல்லை ஸ்டாக் இல்லை என்கிறார்கள். கவிஞர்களைக் கேட்டாலோ சல்லிக்காசு ராயல்டி வரவில்லை என்கிறார்கள். எது உண்மை?”