
“ஆடிய ஆட்டமென்ன” என்பது அப்பாவின் சமீபத்திய புத்தகம். சென்னை (46வது) புத்தக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம். இதில் இடம்பெற்றுள்ள பத்தொம்பது கட்டுரைகளும் ஐந்து மாத காலத்தில் – பிப்ரவரி – ஜீலை 2006 – எழுதப்பட்டவை.
“கிரிக்கெட் பற்றிய அனுபவப் பதிவுகள்” என்ற வரி புத்தகத்தின் தலைப்பிற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே இக்கட்டுரைகள் கூறவில்லை. இரண்டாம் உலகப்போர், ஹைதராபாத், நிஜாம், தியாகராய நகர், மேற்கு மாம்பலம், குளிர்காலத்தின் கடுமையும் கொடுமையும் மற்றும் மதுபழக்கத்தின் தாக்கம் போன்ற பல விடயங்களைப் பற்றி அவை கூறுகின்றன.
இக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பலவற்றைப் பற்றி அப்பா என்னிடம் கூறியுள்ளார். விவாதித்தும் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் பிடித்தவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சார்ந்த
பிராட்மன். நாற்பது வருடங்களுக்கு முன், “குங்குமம்” குழுமத்தை சேர்ந்த “முத்தாரம்” பத்திரிகை நான் எழுதிய பிராட்மனைப் பற்றியான ஒரு கட்டுரையை வெளியிட்டது.
அக்கட்டுரையில் சில திருத்தங்களை செய்தார். பிராட்மன் தனது கடைசி இன்னிங்ஸில் பூஜ்யத்தில் ஆட்டத்தை இழந்தது நகைச்சுவைத்தன்மைக்கு ஒர் எடுத்துக்காட்டு என்று முடித்திருந்தேன். அந்த வார்த்தை அவருக்கு பிடித்திருந்தது. ஹைதாராபாத்தை சார்ந்த குலாம் அகமது அவருக்கு பிடித்த மற்றொரு கிரிக்கெட் விளையாட்டுகாரர்.
கிரிக்கெட் சம்பந்தமான புள்ளிவிவரங்களைப் பற்றி விவாதிப்பதில் எனக்கும் அவருக்கும் அலாதி பிரியம். அதே சமயம், வாழ்க்கையில் எம்மாதிரியான் வினோதனமான தருணங்கள் வருகின்றன என்பதை கிரிக்கெட்டை முன்மாதிரியாக வைத்தும் கூறுவார். இப்ப்புத்தகத்தில் வரும் “ஒவ்வொரு நாளும் ஞாயிற்றுக்கிழமையல்ல!” என்ற கட்டுரை இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. பல ஜாம்பவான்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகளை 1948-ல் மும்பையில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் மாட்ச்சில் இந்தியா தோற்கடிக்க நெருங்கிக் கொண்டிருக்கும்பொழுது நடுவர் நேரம் கருதி ஆட்டத்தை நிறுத்திவிடுவதைப் பற்றி கூறும்பொழுது அதில்லுள்ள ஒரு “மென்மையான” சோகத்தை நம்மால் உணரமுடியும். இக்கட்டுரையிலும் கூட.
அவருடைய சிறுகதைகளிலும் கிரிக்கெட் பல இடங்களில் வந்துள்ளது. “நூலகத்துக்குப் போகும் வழியில்….” என்ற 1974-ல் வெளியான சிறுகதை முழுக்க முழுக்க கிரிக்கெட்டைப் பற்றியானது. அதில், எவ்வாறு முகங்கூடத் தெரியாத ஒரு சிறுவனின் மீது “இலேசான துவேஷம்” ஏற்பட்டுவிட்டதைப் பற்றி குறிப்பிட்டிருப்பார். மிகவும் நேர்மையான எழுத்து! சாமர்த்தியமானவர்கள் அவ்வாறு எழுதியிருக்கமாட்டார்கள்.
அப்பாவின் நகைச்சுவைத் தன்மை இந்தப் புத்தகத்திலும் ஏராளமாகவே வெளிப்படுகின்றது. “கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த ஆட்டமும்” என்ற கட்டுரையில் வருகின்ற சில வரிகள் என்னை குலுங்க குலுங்க வைத்தன. “ராமநாதன் பந்து வீசுவதின் சிறப்பு அவன் ஒடிவரும் திசைக்கும் பந்து போகும் திசைக்கும் சம்பந்தம் இருக்காது. அத்துடன் ஒருமுறைகூடப் பந்து மட்டை பிடித்திருப்பவன் பக்கம் போகாது…ராமநாதன் இப்படி என்றால் நாரயண் வேறொரு மாதிரி. எந்தவிதப் பெளதிக விதிக்கும் உட்படாமல் அவன் வீசும் பந்து தரையில் பட்டு அப்படியே வேகமாக உருண்டுவரும்.”
கிரிக்கெட்டை ஆடியதைப் பற்றியும் ஆடப்பட்ட விதத்தைப் பற்றியும் அனைத்து விதமான கிரிக்கெட் வீரர்களைப் பற்றியும் – தெரு விளையாட்டு வீரர்களிலிருந்து சர்வதேச ஆட்டத்தில் சிறந்து விளங்கியவர்கள் வரை – உணர்வுபூர்வமாக மட்டுமில்லாமல் சிந்திக்கின்ற வகையிலும் எழுதப்பட்டவைதான் “ஆடிய ஆட்டமென்ன”-வில் உள்ள கட்டுரைகள்.
