பேஞ்சு கெடுத்த மானம்

நாகேந்திர பாரதி


‘போன வருஷம் காஞ்சு கெடுத்த மாதிரி இந்த வருஷம் பேஞ்சு கெடுக்குது இந்த மானம் ‘ வெறுப்போடு வார்த்தைகளைஉதிர்த்தான் வேலு. ‘இந்தக் காத்து வேற, பாதி கூரையைபிச்சுகிட்டு போயிடுச்சு. அடுத்த காத்திலே மீதியும் போயிட்டாகணக்குப்பிள்ளை வீட்டுக்குத்தான் போகணும். அவர் சம்சாரம்ரொம்பவே அலட்டிக்குவா’ கவலையோடு ராமாயி.

இந்தச் சிரமங்களைப் பற்றி யோசிக்காமல், கூரை வழி வந்துவிழும் மழைத் தண்ணீரை உள்ளங்கையில் வாங்கி வைத்துவிளையாடிக் கொண்டிருந்தாள் ஆறுவயது சிவகாமி. அவர்கள் மகள். ‘இப்பதான் காய்ச்சல் வந்து ஊசி போட்டு வந்துருக்கு. அறிவுகிடையாது ‘ மகளின் கையைப் பிடித்து இழுக்க அழுதாள். ‘சின்னப்பொண்ணு விளையாட்டுப் புத்தி . அன்பாய்ச் சொல்லுவியா, இப்படியா அடிக்கிறது கைசுளுக்கிக் கிட்டா என்னசெய்யுறது’ வாஞ்சையோடு பேசிய அப்பாவின் அருகே சென்றுகட்டிக்கொண்டாள் . அழுகையும் நின்றது.

அன்பான வார்த்தைகளுக்கு ஏங்கும் குழந்தைக்கு அதுகிடைக்கும்போது அந்த முகத்தில் எவ்வளவு அழகு. அந்தஅழகைப் பெருமையோடு பார்த்து தாய் ராமாயி ரசித்தாள். ஒரேமகள் ஆச்சே. அவளுக்கு மட்டும் பாசம் இல்லையா. ‘பெரிய கம்மாஒடைஞ்சிடுச்சு , எல்லாரும் ஊரை காலி பண்ணிட்டு ஓடுங்க பக்கத்தூரு கம்மங்குடிக்குக் கிளம்புங்க’ என்று கத்தியபடி ஓடும்கணக்குப்பிள்ளை மகன் கருப்பன் குரல்.

‘ என்னடி இது இப்படி ஆகிப் போச்சு’ என்று அலறியபடி ஊரு சனம்எல்லாம் சட்டிபானை, அரிசி, பருப்பு, பாய், தலையணைஎல்லாத்தையும் சுத்தி எடுத்துத் தலையிலும் இடுப்பிலும்ஏந்திக்கொண்டு ஊரைவிட்டு ஓடும் ஓட்டம். இயற்கையின் கோரக் காட்சி.

ராமாயி இடுப்பில் சிவகாமி. வேலு தலையில் சுமையோடு. வீட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போகும் நேரம், வெள்ளையானையாக வெறிபிடித்து வந்து பெரிய கண்மாய் தண்ணீ அவர்கள்கண்முன்னே வீட்டை முக்காடு போட்டு மூடி வந்தது.

கொட்டும் மழையில் தண்ணீரின் இரைச்சலோடு ‘குய்யோமுறையோ’ என்று அலறியடித்து ஓடும் அந்த கூட்டத்தின் மேலும்பாய்ந்து வேகமாக அமுக்கிய தண்ணீரின் வெறி பிடித்த வேகம். மறுநாள் மழை ஓய்ந்து தண்ணீர் இறங்கி அங்கே கிடந்தஉடல்களுக்கு நடுவே நெளிந்து கொண்டு விசும்பியபடி கிடந்த சிவகாமியின் விரல்களைப் பற்றியபடி விறைத்துப்போய்க் கிடந்தனர் வேலுவும் ராமாயியும் .

நாகேந்திர பாரதி