தலைமை /கணேஷ்ராம்

பாதுஷாக்களும் ஜாங்கிரிகளும் (அக்பரும் தனக்கடுத்த ஷாஜஹானும் சிவப்பு நிறத்தில் கட்டிடங்கள் கட்டியதில், தான் மட்டும் மனைவிகளைத் தவிர யாரையும் கட்டாததால் மனம் நொந்த ஜஹாங்கிர் பெயரில் உருவாக்கப்பட்ட சிவப்பு நிற இனிப்பு தான் காலப்போக்கில் மருவி ஜாங்கிரி ஆனது) வாழ்வாங்கு வாழ்ந்த தில்லியில் தான் கோரா என்கிற கோவிந்தராஜன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் ஆகிறது. சேத்தியாவுக்குதான் இந்தப் பதவி என்று ஊரே ஹேஷ்யம் சொன்னபோது இவரது பெயரும் லேசுபாசாக அடிபட்டது. திடீரென்று ஒரு நள்ளிரவில் சேத்தியா அதுவரைக்கும் தின்று தீர்த்த நெய்யும் பாலும் ஸ்வீட்டும் எங்கிருந்தோ பதுங்கிப் பாய, அவருக்கு பக்கவாதம் வந்து படுத்து விட்டதில் கோரா ஏகமனதாகத் தலைவராகி விட்டார்.

அவர் வழக்கம் போல கொண்டை வைத்த வண்டியில் ஏறும் போது மனைவி அவரிடம் யாரிடமும் எதுவும் அநாவசியமாகப் பேச வேண்டாம், வெறுமனே ராம் ராம் என்று சூயிங்கம் மெல்வது போல ரகசியமாக வாய்க்குள் சொல்லிக் கொள்ளுமாறு கூறினாள். அவளது அத்யந்த ஆன்மீக குரு ஒருவர், ஒரு பிரத்யேகத் தொலைக்காட்சியில் அன்றாடம் காலை நேரங்களில் ஆரூடம் தவிர்த்து ஊர்க்கதை எல்லாம் பேசுபவர், அன்றைய தினம் கோரா ராசிக்கு சந்திராஷ்டமம் என்று கூறியிருந்தது தான் காரணம்.

தில்லி.
லுட்யான்ஸ் நிர்மாணித்த நகரம்.
நிர்மாணிக்கப்பட்ட காலத்தில் அழகாக இருந்திருக்க வேண்டும்.

உள்ளே உச்சகட்டத்தில் ஏசி இயந்திரம் அலுப்பில்லாமல் இயங்குவதில் வெளியே பற்றி எரிவது தெரியவில்லை. கடும் நெரிசலில் விழிபிதுங்கும் சாலைகள். இருமருங்கிலும் அடர்த்தியாக மரங்கள். இருந்தாலும் ஒன்றிலும் பசுமையில்லை. செம்மண் தூசியில் முக்கி எடுத்தாற்போல் எல்லாத் தாவரங்களும் பசுமை இழந்து சிவபிரான் சாம்பலை பூசிக்கொண்டு திரிவது போல் புழுதியைப் ஈஷிக் கொண்டு மூச்சுக்குத் திணறிக் கொண்டு இருந்தன.

யமுனை நதி கழிவுநீரால் எதுக்களித்துக் கொண்டு இருக்க, அதன் கரைகளில் அழுக்கான ஒட்டகங்களும் அவற்றைப் பராமரிப்பவர்கள் அதைவிட அழுக்காகவும் வாழ்ந்து (?) கொண்டு இருந்தனர்.

பத்தடிக்கு ஒரு மேம்பாலம் இருந்தும் எல்லா மேம்பாலங்களும் வாகனங்களால் நிரம்பி வழிந்தன.

ஒரு விதத்தில் கோரா கோடையை விரும்பினார். அவரால் குளிர்காலத்தை சமாளிக்க முடியவில்லை. பூம்பூம் மாட்டுக்காரன் மாடு போல ஏழெட்டு லேயர்களில் உடையணிந்து மூச்சுத் திணறித் தான் அலுவலகம் வரவேண்டி இருந்தது.

திருச்சிராப்பள்ளியில் முழங்கால் வரை வேட்டியும் ஒரு மேல்துண்டும் அணிந்து அன்றாடம் கொல்லையில் துணி காயப் போடுவதில் இருந்து சாக்கடை அடைத்துக் கொண்டால் குத்தி விடுவது வரை ஒண்டி ஆளாக செய்து கொண்டு இருந்த அவரது வயது முதிர்ந்த தந்தை, ஆசையாக தில்லி வந்து, மூன்றே நாட்களில் படுத்த படுக்கை ஆகி, அடுத்த விமானம் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்து விட்டார்.

சமையலறையின் எக்ஸாஸ்ட் விசிறிகளைக் கூட அடைத்தாகி விட்டது.‌ எங்கிருந்து குளிர் கசிகிறது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை. ஓய்வு நாட்களில் கூட கோராவும் அவர் வேலையாட்களும் பேப்பர், கோந்து சகிதம் பள்ளி சிறுவர்கள் போல எதையாவது ஒட்டிக் கொண்டு திரிந்தனர். கோவிந்தராஜன் கொஞ்ச காலம் கோந்து ராஜனாக உலா வந்த நேரம் அது.

சந்திராஷ்டமம்.

கோரா தனக்குள் சிரித்துக் கொண்டார். சமீபத்தில் அவருக்கு தினமும் சந்திராஷ்டமம் தான்.‌ மனோகர் உபாத்யாயா என்னும் ஒரு மகாபாவியை அவருக்குக் கீழே மேல் மேலிடம் நியமித்ததில் இருந்து.

முதல் ஆறுமாதங்கள் நன்றாகத் தான் கழிந்தன. தனக்குக் கிடைத்த பதவியையும் புகழையும் மதிப்பையும் அவர் நன்றாகவே அனுபவித்தார்.

தனது தென்னிந்தியத் தோற்றத்தில் சற்றே தாழ்வுணர்ச்சி கொண்டிருந்தார் அவர். அதற்குக் காரணம் இருந்தது.

முதலில் தோற்றம். என்னதான் செப்பனிட்டாலும், மாவு கொண்டு அடைத்தாலும், அடுத்த அரை மணியில் அவரது முகத்தின் ஊற்றுக்கண்கள் திறந்து, எப்பவுமே அவரது முகம் லேசாக நசுங்கிய எண்ணெய்த்தூக்கு போலவே தென்படுவதை அவரால் சரி செய்யவே முடியவில்லை.

இரண்டாவது உடை.

தினமும் கோட்டு சூட்டு. சென்னையில் இருந்தவரை அவரது அறைக்குள் ஒரேயொரு அழுக்கான கோட்டை அதன் ஸ்டாண்டில் மாட்டி இருப்பார். எப்பவாவது வீடியோ கான்ஃபரென்ஸில் மேலிடம் கூப்பிடும் போது அதற்குள் நுழைந்து கொண்டு காட்சி தருவார்.

ஆனாலும் அது நாளுக்கு நாள் அழுக்காகிக் கொண்டே வருவதில் அவருக்கு லேசாக ஒரு சந்தேகம்.

மேசையையும் இன்ன பிற உபகரணங்களையும் சுத்தம் செய்கிற பெண் அதற்காகத் தன் கோட்டைத்தான் உபயோகிக்கிறதோ என்று.

தன் சந்தேகத்தைத் தன் உதவியாளரிடம் காட்டமாகத் தெரிவித்ததில், அவர் அந்தப் பெண்ணிடமே சங்கோஜமில்லாமல் கேட்டுவிட்டார்.

அதற்கு அந்தப் பெண் மூஞ்சியில் அடித்த மாதிரித் தலையில் அடித்துக் கொண்டு ” போயும் போயும் அந்தக் கருமத்தைக் கையால் தொடுவாங்களா? கு’ரோகம் வந்துடாது” என்று கூறியதை கேள்விப்பட்டு அந்தப் பெண்ணை வேலையை விட்டே நிறுத்தி விட்டார்.

இங்கே தில்லி கலாச்சாரம் வேறுமாதிரியாக இருக்கிறது. தினம் ஒரு நிறத்தில் கோட்டு சூட்டு போட்டுப் போக வேண்டியதாக இருக்கிறது.

அவர் ஆகிருதிக்கு அது நன்றாக இல்லை என்று அவருக்கே தெரிகிறது. அதன் பொருட்டே, தன்னை யாரும் மதிப்பதில்லையோ என்ற அனுமானத்தில் கீழே இருப்பவர்களை சகட்டு மேனிக்குத் திட்டி வேலை வாங்கினார். அவரது கெடுபிடிகளால் அவருக்கு மரியாதை கூடவில்லை. மாறாக முசுடு என்ற பெயர்தான் கிட்டியது.

இந்த நேரத்தில் தான் மனோகர் உபாத்யாயா லக்கிம்பூர் கேரியில் இருந்து மாற்றலாகி வந்தான். இவருக்கு இரண்டு படிகள் கீழே. இவருக்கு அடுத்து இருந்தவர் வயதாகி ஓய்வு பெற்று விட்டதில், அவர் இடம் நிரப்பப் படாமல் இவனைப் போட்டிருக்கிறார்கள். இதில் ஏதோ உள்குத்து இருக்க வேண்டும்.

அவன் வரும்போதே தடாலடியாக வந்தான். அலுவலகத்தில் முக்கால் வாசிப்பேர் அவனுக்கு வேண்டியவர்கள். மிச்சமிருந்தவர்களையும் தன் வலையில் வீழ்த்தி விட்டான்.

அவனுக்கு நாய்க்குணம் வந்து நாலைந்து வருடங்கள் ஆகியிருக்கும். இவரை விட பத்து வருடங்கள் சிறியவன். இவருக்கு நாய்க்குணம் போயிருந்தது மனோகரைப் பார்த்ததும் திரும்பி விட்டது.

அவன் வடக்குக்கே உரித்தான பட்டுச் சிவப்பில் ஆறடிக்கு ஆஜானுபாகுவாக இருக்கிறான். கோரா அளவிற்கு ஆங்கிலம் போதாது என்றாலும் தைரியமாக உளறுகிறான். அதைவிட எப்படியோ சம்பாஷணையை சுளுவாக இந்திக்கு மாற்றி விடுகிறான். அலுவலகத்தில் இருக்கும் ஒன்றிரண்டு தமிழர்கள் கூட என்னமோ வடக்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் போல இவரிடமே இந்தியில் தான் பேசுகின்றனர். கோராவுக்கு இந்தி தெரியும் என்றாலும் தெரியும் தான். இந்திக்கு இவரைத் தெரியாது.

இவரைப் போல இல்லாமல் மனோகருக்கு எந்த உடையும் எடுப்பாக இருக்கிறது. முந்தாநாள் வெல்வெட் போன்ற துணியில் கத்தரிப்பூ நிறத்தில் ப்ளேஸரும், கரும்பச்சையில் ஒரு பேண்ட்டும் போட்டு வந்தான். நம் ஊரில் சிவாஜி கணேசன் கூட இந்த மாதிரி கோட்டெல்லாம் போட மாட்டார்.

ஆனால், அவனுக்கு அது அப்படி இருந்தது.‌ஆளாளுக்கு அவனை அநாவசியமாகப் புகழ்ந்து சாக்லேட் வாங்கித் தின்றனர்.

இவர் வந்தால் எழுந்து நின்றாலும் எங்கேயோ பார்க்கிற அந்தக் கடங்காரி மாதவி மேனன், வாயில் ஏலக்காய் அடக்கிக் கொண்டு அவன் கோட்டுப் பாக்கெட்டில் உரிமையுடன் ரோஜாப்பூ செருகி விடுகிறாள்.

இதெல்லாம் போனால் போகிறது. அவன் வந்த பிற்பாடு முதல் மரியாதை அவனுக்குப் போய் விட்டது தான் கோராவின் ஆத்திரம்.

வழக்கமாகப் பேசி அளவளாவும் மினிஸ்ட்ரி ஆசாமி, இப்போதெல்லாம் இவரைக் கூப்பிடுவதே இல்லை. இவராக பலவந்தமாக அவரைக் கூப்பிட்ட போது, அவர் “ஓ.. இது பழைய விஷயம் ஜி.. இதைப் பற்றி போனவாரமே மனோகர் தெரிவித்து விட்டானே” என்று பட்டென்று ஃபோனை வைத்து விட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக தான் ஒதுக்கப் படுவதாக நினைக்கவாரம்பித்தார் கோரா.

மறுபடியும் தன் பேரை மாற்றலாமா என்று யோசித்தார்.

அவர் வீட்டில் ஒன்று விட்டு ஒன்று கோவிந்தராஜன். அதே போல் அவர் அப்பா, கொள்ளுத்தாத்தா எல்லோரும் வரதராஜன்.

ஆக இவர் பரம்பரையில் முதல் ஆண் ஒன்று வரதராஜன் கோவிந்தராஜன் அல்லது கோவிந்தராஜன் வரதராஜன்.
இவர் வரதராஜன் கோவிந்தராஜன். இவர் நண்பர்கள் ரமேஷ், மகேஷ், சுரேஷ் என்று நவீனமான பெயர்களோடு திரிய, இவர் மட்டும் முழ நீளத்திற்குக் கேட்பவனுக்குக் கொட்டாவி வருவது மாதிரி பெயரோடு அலைகிறார்.

என்ன செய்வது, இது பரம்பரையாக ஆகி வந்த பெயர்.‌ முதல் பிரகஸ்பதி வரதராஜனா இல்லை கோவிந்தராஜனா தெரியவில்லை.

குத்துமதிப்பாக ஒரு மனக்கணக்கில் இவர் நாற்பத்தி ஏழாம் கோவிந்தராஜன்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். முடியவில்லை. தன் பெயரை இவராகவே கோரா என்று சுருக்கிக் கொண்டு விட்டார்.

மனைவி கூட சொல்லிப் பார்த்தாள் “என்னங்க.. கோரான்னா கோரம் மாதிரி இருக்குங்க”

“சான்ஸே இல்லே… கோரான்னா கோரமாக இல்லாதவனேன்னு அர்த்தம்”

“அப்படீன்னா சரி”

அப்போது எல்லாம் நன்றாக மாறியது இப்போது இந்த மனோகரால் சரியில்லாமல் போய் விட்டது.

ஒரு வருடம் ஆகியும் மண்டி ஹவுஸில் இருக்கும் இவரது க்வார்டர்ஸ் தயாராகவில்லை.‌ அதன் கட்டுமானத்தில் பழுது பார்க்க அரசு அனுபதி கிட்டவில்லை. அவசரப்பட்டு முக்கியமான பாகங்களை இடித்து விட்டதில் திரும்பக் கட்ட முடியவில்லை. நம்மூர் மாதிரி சத்தம் போடாமல் கட்ட முடியாது. காலையில் வாசல் தெளிப்பதற்குள் வந்து பூட்டி சீல் வைத்து விடுவார்கள்.

வேறு வழியின்றி தொலைதூரத்தில் வசிக்க வேண்டி வந்து விட்டது.

தினமும் ஒரு மணி நேரம் அலுப்பூட்டும் பிரயாணம்.

மெட்ரோவில் வருவது சிலாக்கியம். ஆனால், இந்த மாதிரி காரில் கெத்தாக வருவது கிட்டாது.

சென்னையைப் போலல்லாமல் இந்த ஊரில் எல்லோருமே இந்த மாதிரி வாகனத்தில் தான் வருகின்றனர். அதனால் இவருக்கு என்று தனியாக ஒரு விசேஷ கவனம் கிட்டுவது இல்லை என்பதும் தெரிகிறது. ஆனால், யார் தொந்தரவும் இல்லாமல் மிதப்பாக வருவதும், நின்றதும் ஓட்டுனர் பரபரவென்று அப்பிரதட்சணம் செய்து கார் கதவைத் திறந்து விடுவதும் கோராவுக்கு புளகாங்கிதத்தை ஏற்படுத்தும் விஷயங்கள்.

மனோகர் இதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. சமயங்களில் ஓட்டுநருக்கு விடுப்பு கொடுத்து, தானே ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறான்.

இதை இப்படியே வளர விடக் கூடாது. விட்டால் தன் பதவிக்கே ஆபத்து வந்துவிடும்.

எந்த மீட்டிங்கிலும் இவரைப் பேசவே விடாமல் அவனே பேசுகிறான். நிறுவனம் சார்பாக அவனே பேட்டி கொடுக்கிறான். இவரும் ஓரிரண்டு முறை அவனை லேசாக எச்சரித்துப் பார்த்தார்.

ஒன்று புன்னகைக்கிறான். இல்லை, உங்கள் இந்தியை நீங்கள் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் ஜி என்று கத்தையாக நாலைந்து இந்திக் கவிதை புத்தங்களைக் கையில் திணித்து விட்டுப் போகிறான்.‌கோராவிற்கு அந்தப் புத்தகங்களின் புதிய வாசனை மட்டும் தான் பிடிக்கிறது. மற்றபடி ஒரு அட்சரம் புரிவதில்லை.

இது கூட பரவாயில்லை. போன வாரம் நடந்தது தான் உச்சகட்டம்.

மலைமந்திரில் ஏதோவொரு பூஜை. அலுவலகத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். இவருக்கு அதன் ஸ்தாபகர்களில் ஒன்றிரண்டு பேரைத் தெரியும். அர்ச்சகர்களோடு பரிச்சயம் இல்லை.

ஞாயிற்றுக்கிழமை தானே, நம் கோவிலுக்குத் தானே போகிறோம் என்று வேட்டி சட்டையோடு பட்டை எல்லாம் அடித்து மனைவியோடு போனால், அவன் வழக்கம் போல கோட்டு, பளபளவென்று மனைவியோடு (மனைவியும் பளபளதான்) வந்தான்.

இவர் சுதாரிப்பதற்குள், அர்ச்சகர் ஆயியே ஆயியே என்று பலகாலம் பழகினவர் போல அவனிடம் தட்டை நீட்டி சங்கல்பம் பெற்றுக் கொண்டார். அவனும் ஒரு மரியாதைக்குக் கூடத் தான் அதற்கு உரித்தவனில்லை என்று கூறாமல் முதல் மரியாதையை பெற்றுக் கொண்டான்.

பூஜை முடியும் வரை கோரா முருகனை மனதார சபித்தார்.

ஒரு மணி நேரம் தாண்டி நீடித்த பிரயாணம் முடிந்து அலுவலகம் வந்து விட்டார்.

அன்றைக்கு என்று அருகாமையில் இருந்த ஒரு ஹோட்டலில் மூன்றாம் மாடியில் ஒரு முக்கியக் கூட்டம். நிகழ‌ இருக்கும் போர்டு மீட்டிங்கிற்காகத் தையாரி.

அக்கம் பக்கம் இருந்த இவர்களது கிளைகளில் இருந்து அதன் தலைவர்களைத் தருவித்து இருந்தார். வீடியோவில் அழைத்து இருக்கலாம்.

மனோகர் தான் “இல்லை இல்லை.. நேரில் அழைத்துக் கலந்துரையாடினால் தான் நிறைய பாயிண்டுகள் கிடைக்கும்” என்று பிடிவாதமாக ஏற்பாடு செய்து இருந்தான்.

அங்கு மதியம் உணவு நன்றாக இருப்பதாலும், அவன் மற்றவர்களுக்கு அனுகூலம் செய்வதன் மூலமாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும் தான் இது என்று கோரா நினைத்துக் கொண்டார்.‌ ஆனாலும், அவரால் இதை மறுக்க முடியவில்லை.

சந்திராஷ்டமம் மனதில் நெருடியது.

ராம் ராம் என்று சொல்லிப் பார்த்தார். அவருக்கு இதெல்லாம் சரிப்படாது. பெரிய நம்பிக்கையும் கிடையாது.

மீட்டிங் ஹால். வெளியே இருந்த தற்காலிகத் தட்டியில் “வருகை தரும் கனவான்களுக்கு நன்றி” என்று மட்டும் இருந்தது. ஒரு மரியாதைக்குக் கூட இவர் புகைப்படமோ பெயரோ இடம் பெறவில்லை.

நாளை முதல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தி தெரியாவிட்டால் என்ன? ஆங்கிலத்தில் திட்டக் கூடாதா என்ன? இவன்களை உண்டு இல்லை என்று ஆக்குகிறேன் பார் என்று சபதம் ஏற்றுக் கொண்டார்.

மீட்டிங் துவங்கியது.

கோரா சீரியஸாகப் பேசும் போது மனோகர் தன் முன் பரிமாறப்பட்ட முறுக்கு, வறுத்த முந்திரி போன்றவைகளை தடித்த விரல்களால் அள்ளி அள்ளி வாயில் இட்டு “கரக் கரக்” என்று ஒலியெழுப்பியவாறு தின்ன ஆரம்பித்தான்.

அவனைக் கண்களால் எரிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

சிம்பயாஸிஸில் எம்பிஏ படித்ததற்குப் பதில் மலையாளத்தில் மாந்திரீகம் பழகி இருக்கலாம்.

மனோகர் செய்கை தந்த சலுகையில் மற்றவர்களும் பதார்த்தங்களை சுவைக்கத் தலைப்பட்டனர்.

நாலைந்து சீனியர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் அள்ளி அள்ளித் தின்ன, ஓரிரு இளம் அதிகாரிகள் நாசூக்காக யாருக்கும் தெரியாதவாறு ஒவ்வொன்றாக எடுத்து ரகசியமாக இரு உதடுகளைத் துடைக்கிற மாதிரி செலுத்தி சுவைக்கத் தலைப்பட்டனர்.

சீனியர்களை ஒன்றும் சொல்ல முடியாமல் (யாருக்கு என்ன செல்வாக்கோ?) இளைஞர்களைப் பார்த்து, “முந்திரிப் பருப்பு நல்ல பதத்தில் வறுக்கப்பட்டிருக்கின்றன அல்லவா?” என்று கேட்டார்.

அவரது கேள்வியால் பகாசுர படலம் திடுக்கிடலுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எல்லோரும் தத்தம் கிறுக்கல் நோட்டுகளில் கிறுக்கப்படாத பக்கங்களில் தீவிரமாக ஆழ்ந்தனர்.

மனோகர் மட்டும் கவலைப்படாமல், விரலை வாயுள் செலுத்தி அங்கு எசகுபிசகாக மாட்டியிருந்த எதையோ எடுப்பதில் மும்முரமாக இருந்தான்.

கோரா பார்வையை அவனிடமிருந்து விடுவித்து தன் பேச்சைத் தொடர்ந்தார்.

அப்போது ஹோட்டல் சிப்பந்தி ஒருவன் மனோகரை அணுகி ஏதோ கூற அவன் அதை மறுத்து ஏதோ கூறினான்.

ஒரு ஹோட்டல் சிப்பந்தியின் கண்களுக்குக் கூட, தன்னை விட இரண்டு நிலைகள் கீழே இருப்பவன் தான் தலைவனாகத் தெரிகிறான் என்பதில் கோராவுக்குள் ஒரு எரிமலையே வெடித்தது.

பேச்சை நிறுத்தி விட்டு “ஏதேனும் அதிமுக்யமான விஷயமா” என்று மனோகரைக் கேட்டார்.

அவன் லேசாக முறுவலித்து, “அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை.. யாரோ சில பேர் நம்மைப் பார்க்க வேண்டும் என்று தலைவிரி கோலமாகக் காத்திருக்கிறார்களாம்”

நம்மை என்று பன்மையில் சொல்கிறான் பார் திருடன்.

“கையில் சிலம்பு வைத்திருக்கிறார்களாமா”என்று நக்கலாக சிரித்தார் கோரா.

அவன் சற்று குழம்பி, “பார்டன்?”

அவனுக்குக் கண்ணகியைப் பற்றி பாடம் நடத்தும் சமயம் இதல்ல என்று உணர்ந்து, “நீ என்ன சொன்னாய்?”

“முடியாது என்று அனுப்பி விடச் சொல்லி விட்டேன்.. நமக்கு எவ்வளவு முக்கியமான வேலை இருக்கிறது” என்றான்.

“என்ன ஒரு திமிர் இவனுக்கு?” என்று நினைத்துக் கொண்டார் கோரா. இவனுக்கு சரியான பின்புலம் இருக்கிறது என்பது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். தான் இவனிடம் ஜாக்ரதையாக இருப்பதை இவன் நம்முடைய கோழைத்தனம் என்று நினைத்து விட்டான் போலிருக்கிறது. தனக்கும் ஆள் இருக்கிறது என்று இவனை உணர வைக்க வேண்டும். ஆள் இல்லாமல் தன்னால் இந்த பதவிக்கு எப்படி வந்திருக்க முடியும் என்று இவனுக்குத் தெரிந்திருக்காதா என்ன? வேறு ஏதேனும் வலுவான பின்புலம் இருப்பதால் தான் தொடர்ந்து தன்னை மட்டம் தட்டுகிறான். இன்று மீட்டிங்கிற்காக நாற்காலிகள் அமைக்கப்பட்டதையே கூட நான் கண்டித்திருக்க வேண்டும். அவைத் தலைவராகத் தான் இருக்க, தனக்கென்று உயர்ந்த ஆசனம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எல்லோரையும் போல சாதாரணமான நாற்காலி தான் போடப்பட்டு இருக்கிறது. இது எல்லாமே உள்நோக்கம் கொண்ட செயல்கள். இவற்றை நீடிக்க விடுவது பேராபத்தில் முடியும். முதலில் இவன் நம்மை மேக்கரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கோரா தன் கைககளை பலமாகத் தட்டி வெளியேறிக் கொண்டு இருந்த சிப்பந்தியை நிறுத்தினார்.

வந்திருக்கும் நபர்களை உள்ளே அனுப்புமாறு கூறினார்.

அவன் சற்று குழம்பி, பின்னர் சரியென்று கூறியவாறு வெளியேறினான்.

சற்று நேரத்தில் நான்கு பேர் உள்ளே வந்தனர்.

முதலில் வந்தவன் தலை கலைந்து ராக்கெட் விஞ்ஞானி போலிருந்தான். கொஞ்ச காலம் முன் வரை இளைஞனாக இருந்திருக்கிறான். மிகவும் விலை உயர்ந்த நேரு ஜாக்கெட் அணிந்து இருந்தான்.

அடர்த்தியான கருநீலத்தில் லேசாக வரிகள் புடைத்து ஏதோ டிஸைன் போலும். அதன் பெரிய பெரிய பித்தான்கள் தங்க நிறத்தில் மின்னின. நிஜமாகவே தங்க முலாம் பூசியிருக்க வேண்டும். பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை அணிந்து இருந்தான். ரத்தச் சிவப்பில் தொட்டால் கன்னிப் போவது போல இருந்தது அவன் தோற்றப் பொலிவை அதிகரித்தது. அவன் கூட வந்த மூவரும் இளைஞர்கள். அவர்களும் கூட நல்ல விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து இருந்தனர்.

நால்வரும் நல்ல வளர்த்தியில் எடுப்பான புஜங்களோடு இருந்தனர்.

அவன் மூவரும் பின் தொடர‌ உள்ளே நுழைந்து, சற்றே குழம்பி, பொதுவாக “ஹாய்” என்றான்.

வட்டமாக அமர்ந்து இருந்தவர்களை அவசரமாக ஒரு நோட்டம் விட்டு, தலையை அசைத்தவாறு நேராக மனோகரை அணுகி “ஹாய்” என்று இன்னொருதரம் சொன்னான்.

மனோகர் அவனிடம் “ஹலோ… நீங்கள் யார்? என்ன வேண்டும்?” என்றான்.

அவன் பதிலுக்கு, “நீங்கள் தான் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களால் எனக்கொரு காரியம் ஆகவேண்டி இருக்கிறது” என்றான்.

மனோகர் “சொல்லுங்கள்” என்று சொன்னதும் கோராவின் உள்ளம் வெடித்தே விட்டது. அவரது பொறுமையின் எல்லையை மனோகர் தகர்த்தே விட்டான்.

கோபம் தலைக்கேறி, தன்னையறியாமல் எழுந்து நின்றார்.

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று அதட்டும் குரலில் அந்த மனிதனை அழைத்தார்.

“மிஸ்டர்… இந்த நிறுவனத்தின் தலைவர் அவரில்லை… நான் தான்..
நான் மிஸ்டர் கோரா.. தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் தான் கேட்க வேண்டும்.. நீங்கள் அணுகிய அந்த நபன் என்னிடம் வேலை செய்பவன்” என்றார்.

மாநிறமான அவர் முகம் கோபத்தில் இறுகி சிவந்து விட்டது. அவர் கைகள் லேசாக நடுங்கியது. அதைக் கட்டுப்படுத்த முயன்றதில் உடல் நடுங்கியது.

இப்போது அந்த மனிதன் இரு கைகளையும் குவித்து “மன்னிக்க வேண்டும்… மன்னிக்க வேண்டும்” என்று பல முறை இறைஞ்சினான்.

கோராவை அணுகி அவர் அனுமதி இல்லாமல் அவர் கைகளை பற்றிக் கொண்டான். நல்ல வலுவான மனிதன்.

அவன் மறுபடியும் மன்னிப்பு கோரி, “எங்களுக்கு இந்த நிறுவனத்தின் தலைவரால் தான் வேலை ஆக வேண்டியிருக்கிறது… ஊழியர்களால் ஒன்றும் ஆவப்போவதில்லை..
எங்கள் தலைமை எங்களை உங்கள் மாதிரி பெரிய நிறுவனங்களின் தலைவரை மட்டுமே அணுகி சகாயம் கேட்க வலியுறுத்தி இருக்கிறது.. அதை மீறினால் கடுமையான தண்டனை கிடைத்திருக்கும்… காலையில் இருந்து அலைந்து திரிந்து இன்று காலை உணவு உண்ண இந்த விடுதிக்கு வந்த போது உங்கள் நிறுவனத்தின் தட்டியைப் பார்த்தோம்…

விசாரித்த போது நிறுவனத்தின் தலைவர் வந்திருப்பதாகக் கூறினார்கள்..

நம்முடைய தேடல் இப்படி சுலபமாக முடிந்தது என்று நினைத்து அவசரப் பட்டு விட்டேன். பெரிய தவறு நிகழ்ந்து இருக்கும்…
நல்ல வேளை.. பெரிய இக்கட்டில் இருந்து தாங்கள் எங்களைக் காப்பாற்றி விட்டீர்கள்” என்றான்.

அவன் பேச்சும் முகமனும் கோராவை சாந்தப் படுத்தின. இந்த ஆறுமாதத்தில் முதல் முறையாக அவருக்கு உரிய மரியாதை கிட்டி இருக்கிறது. அவரது இந்தத் தலையீடு இல்லையேல் இடம் மாறி இருக்கும். இனிமேல் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

“அன்பரே… நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்” என்றார் அன்பும் கரிசனமும் வழிய.

அந்த மனிதன் யானைத் தந்தம் போலிருந்த தன் கையை ஜாக்கெட் பையில் லாவகமாக நுழைத்து தட்டையாக செவ்வகமாக இருந்த ஒரு சிறு பெட்டி போன்ற ஒன்றை எடுத்தான்.

பழைய சினிமாக்களில் வில்லன்கள் இந்த மாதிரி தட்டையான சிறு பாட்டில்களைத் திறந்து சிறு அளவில் சீமைச்சாராயம் அருந்துவார்கள். அதற்கும் சிகரெட் லைட்டருக்கும் நடுவாந்தரமாக இருந்தது அது. அதில் பேட்டரி கடிகாரத்தின் முள்ளைத் திருகும் பித்தான் போல ஒன்று இருந்தது.

கோரா அதை மிகுந்த சுவாரஸ்யத்துடன் கவனித்தார். காஸினோக்களில் சீட்டு விளையாடுபவர்களுக்கு சீட்டு விநியோகம் செய்வது போல விசிட்டிங் கார்டு விநியோகம் செய்யும் கருவி போலும் என்று நினைத்தார்.

இது எங்கு கிடைக்கும் என்று வெட்கப்படாமல் கேட்டு வைத்துக் கொண்டு, தனக்கும் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த மனிதன் அந்தப் பித்தானை வெகு நாசூக்காக அழுத்த, கோரா விசிட்டிங் கார்டு பெற்றுக் கொள்ளும் நவீன நாகரீகமாக இரு கரங்களையும் இணைத்து அவன் முன் நீட்டினார்.

ஆனால் கார்டு வரவில்லை. மாறாக ஏதோ சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது.

சைனா மேக் என்று நினைத்து உள்ளூர நகைத்துக் கொண்டார். இதைப் போய் வாங்க வேண்டும் என்று நினைத்தோமே என்று அவரை அறியாமல் இளநகையொன்று அவரிடத்தில் வெளிப்பட்டது.

உங்கள் உபகரணம் பழுதாகி விட்டது போலிருக்கிறது என்றார்.

அவன், “யார் சொன்னது? இதோ சிவப்பு விளக்கு எரிகிறது பாருங்கள்”

“ஆனால் கார்டு விழவில்லையே”

“இது நீங்கள் நினைப்பது போன்ற கருவி இல்லை. இது ஒரு உயிர்க்கொல்லி.. நீங்கள் குனிந்து உங்கள் மார்பைக் கவனித்தால் அதில் இந்த சிவப்புப் புள்ளி குடிகொண்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள்” என்றான்.

கோராவிற்கு தூக்கி வாரிப் போட்டது. அதிர்ச்சியில் நாக்குழறி “இது இது என்ன நவீன‌ரக துப்பாக்கியா” என்றார்.

“இவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவர் நீங்கள்… உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளத் தவறி விட்டீர்களே… இது துப்பாக்கி அல்ல.. துப்பாக்கி என்றால் சுட வேண்டும்.. ரத்தம் வரும்… எனக்கு ரத்தம் என்றால் அலர்ஜி.. மயக்கம் வரும்… அது தவிர என் விலையுயர்ந்த உடை பாழாகும். அதற்காக பிரத்யேகமாக எனக்கென்று ஒரு லேசர் கருவியை வடிவமைத்துக் கொண்டேன்.. இந்த பட்டனை இன்னொரு முறை அழுத்தினால் போதும்…
நீங்கள் காந்திஜி போல மரணிக்கும் போது ராம் என்று கூறி உயிரை விட முடியாது… ரா என்று சொல்லி முடிப்பதற்குள் உங்கள் இதயம், நெடுநாள் தரை துடைக்கும் கந்தல் துணியை கொடியில் உணர்த்துவது போல, உங்கள் மார்புக் கூட்டின் எலும்புகளில் கிழிந்து தொங்கும் ” என்றான்.

“ஐயையோ.. என்னை ஏண்டா மகாபாவி” என்றார். அவரை அறியாமல் அவருக்குக் குரல் உடைந்தது.

“நான் முன்னமே சொன்னது தான்… எங்கள் கொள்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராக எல்லோரும் சதி செய்கிறார்கள்… நாங்கள் யார் என்று நிரூபிக்கும் தருணம் வந்ததால் பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்துகிறோம்… சமீபத்தில் ஊரை உலுக்கிய நிகழ்வு நாங்கள் ஏற்பாடு செய்தது தான்… ஆனால், அதில் நாங்கள் எதிர்பார்த்த அளவு அழிவு நிகழவில்லை. மாறாக, எங்கள் சகாக்களில் ஐந்து பேர் மாட்டிக் கொண்டுவிட்டார்கள்.
அவ்வளவு பெரிய விஷயத்தை நிகழ்த்திவிட்டு தப்பிப்பதற்கு, குறைந்த பட்ச அவகாசம் கூட அளிக்காமல் போலீசார் மனிதாபிமானமற்று எங்கள் ஆட்களை சூழ்ந்து பிடித்துக் கொண்டு விட்டனர்.

அவர்களை விடுவிப்பதற்கான உபாயத்திற்காக நாங்கள் தீவிரமாக நேற்று இதே நேரம் இதே ஹாலில் யோசித்தோம்.

அதன்படிதான் ஒரு உயரதிகாரியைப் பிடித்துக்கொண்டு போய் பணயக்கைதியாக ஐந்து நாட்கள் வைத்திருந்து, எங்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை விடுவிக்கா விட்டால், பணயக்கைதியை போட்டுத் தள்ளி விட்டு, அடுத்த உபாயத்தை அணுகலாம் என்று திட்டமிட்டது.

அந்த வகையில் சூட்டிகையாக இருந்த இந்தப் பையனை பிடித்துக் கொண்டு போய் எங்கள் திட்டம் தவிடு பொடியாக ஆகியிருக்கும். நல்ல வேளையாக உங்கள் பெருந்தன்மை எங்களைக் காப்பாற்றிவிட்டது. உங்களுக்கு எங்கள் குழுமத்தின் சார்பில் பலநூறு வந்தனங்கள்” என்று கூறியவாறு மற்றவர்களுக்கு சமிக்ஞை செய்ய, மற்ற மூவரும் கோராவை பலவந்தமாக எழுப்பி வெளியே நெட்டித் தள்ளிக் கொண்டு போனார்கள்.