
எப்போதும் குளத்தோடு பேசும்
அவன் இன்று வரவில்லை…
தவளைக்கல் அவன்
வருகைக்காக தவம் கிடந்தது…
ஆலமரப் பறவைகள்
அவன் பாசமொழிகளுக்காக
காத்திருந்தன…
அவன்வயசு
தோழர்-தோழிகள்
அவனது முங்கு நீச்சல் முகத்தை
தேடி நின்றனர்…
நான்கடிச் சிறுவனே அவன்!
அவன் குளத்தில் வாழ்ந்த
அந்த ஒவ்வொரு மணி நேரமும்
குளம் குழம்பிப் போகாது
குதூகலமாயிருக்கும்…
அவன் வரும் பொழுதுகளில்
நான் இனி
குளமாக வாழ்ந்து கொள்ள
வரம் கேட்கிறேன்
இறைவனிடமல்ல..
அந்த சிறுவனிடம்..
வருவானோ?! வரம் தருவானோ?!
