மேலோர் வாழ்வில்:ஸ்ரீ மா ஆனந்தமயி/அரவிந்த் சுவாமிநாதன்

மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. அப்படி ஒரு யோகினிதான் ஸ்ரீ மா ஆனந்தமயி.

தோற்றம்
மா ஆனந்தமயியின் இயற்பெயர் நிர்மலா சுந்தரிதேவி. இவர், 1896 ஏப்ரல் 30ஆம் நாளில், வங்காளத்தில் உள்ள கேவ்டா என்ற ஊரில், பிபின் பிஹாரி பட்டாசார்யா – மோக்ஷதா சுந்தரிதேவி தம்பதியினருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். பிறந்த குழந்தை அழுவதற்குப் பதிலாக, இந்தக் குழந்தை பிறந்தவுடன் சிரித்ததைக் கண்டு பெற்றோர் வியந்தனர். இது சாதாரணக் குழந்தை அல்ல; தெய்வீகக் குழந்தை என்பதை நாளடைவில் உணர்ந்துகொண்டனர். அதற்கேற்ப நிர்மலா சுந்தரி தேவி இளவயது முதலே ஆன்மீக நாட்டம் கொண்டவராக இருந்தார். மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்வதும், பூஜை, பிரார்த்தனை செய்வதும் இவரது வழக்கமாக இருந்தது. மரம், செடி, கொடிகளுடன் உரையாடுவது தொடங்கி பல்வேறு சித்தாற்றல்கள் அப்போதே அவருக்கு வசப்பட்டிருந்தன.

திருமண வாழ்க்கை
1918-ல் நிர்மலாவுக்கு, ரமண்மோஹன் சக்ரவர்த்தியுடன் திருமணம் நிகழ்ந்தது. மணமான பின்னரும் இவரது ஆன்மீக சாதனைகள் தொடர்ந்தன. இவரது தெய்வீக நிலையை அறிந்த கணவர் ரமண் மோஹன், அவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அவர்களது இல்லறம் தெய்வீக இல்லறமாக இருந்தது. நிர்மலாதேவியை அவர் ‘மா’ என்றே அழைத்தார். ‘ஆனந்த மயி’யும் அவரை ’போலோநாத்’, ‘பிதாஜி’ என்று அழைத்தார்.

தியான வாழ்க்கை
நாளடைவில் தீவிர தியான நிலைக்குச் சென்றார் நிர்மலா தேவி. தன்னை மறந்து சதா ஆனந்த மோன நிலையில் இருப்பதும் வழக்கமானது. அவரை அறியாமலேயே அவரது வாயிலிருந்து பல்வேறு மந்திரங்கள் வெளிப்பட்டன. விரல்கள் பல்வேறு முத்திரைகளைக் காட்டின. உடல் பல்வேறு ஆசனங்களில் அமர்ந்தது. எப்போதும் பரம்பொருளுடன் ஒன்றிய நிலையில் இருந்தார். உண்பது குறைந்தது என்றாலும் அன்றாடக் கடமைகளை அவர் தவறாமல் செய்து வந்தார்.

ஆன்மீக சக்திகள் வளர வளர, மக்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக அவரைத் தேடி வந்தனர். இரண்டாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்றிருந்தாலும் தன்னை நாடி வருவோரிடம் பல்வேறு தத்துவங்கள் குறித்து உரையாடுமளவுக்கு அவர் அறிவாற்றல் பெற்றிருந்தார். நாடி வருவோர் சொல்லாமலே அவர்களது வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்து, நல்வழி கூறி ஆற்றுப்படுத்தினார். பலரது நோய்களை நீக்கினார்.

இறைவனை வழிபடும் முறையை அம்மா பக்தர்களுக்கு போதித்தார். ஆழ்ந்த பாவசமாதி நிலையில் மூழ்கி இருப்பதும் பரவசத்தின் ஆழ்நிலைகளில், இறைவனைப் புகழ்ந்து பாடுவதும், நாம பஜனை செய்வதும் அவர் வழிமுறைகளாக இருந்தன. பக்தர்களும் அவ்வாறே அம்மாவைப் பின்பற்றி ஆனந்த பரவசத்தை எய்தினர்.

கேட்க:
http://www.tamilonline.com/thendral/playaudio.aspx?aid=15287

படிக்க:
http://tamilonline.com/thendral/article.aspx?aid=15287

மேலோர்வாழ்வில் #ஸ்ரீமாஆனந்தமயி #தென்றல் #தமிழ்ஆன்லைன் #thendral #tamilonline