இலக்கிய இன்பம் 72/கோவை எழிலன்

எண்ணித் துணிக

வில்லி பாரதத்தில் வஞ்சகமாகத் திட்டம் தீட்டி தருமனின் அனைத்து உடைமைகளையும் கவர்ந்து பாண்டவர்களையும் அடிமை ஆக்குகிறான் சகுனி. ஆனால் திரௌபதிக்குக் கண்ணன் அருளியதையும் பாண்டவரின் சபதங்களையும் கண்டும் கேட்டும் அஞ்சிய திருதராஷ்ட்டிரன் அவர்கள் இழந்த அனைத்தையும் அவர்களுக்கே மீண்டும் அளித்து விடுகிறான்.
அப்போது சகுனி வெகுண்டு “ஒரு செயலை எண்ணிப் பார்த்தபின் தான் துவங்க வேண்டும். பாசத்தாலோ காதலாலோ செயலைச் செய்யக் கூடாது. நீர் இங்கு இவற்றைத் திருப்பி அளிப்பதால் பாண்டவரின் வஞ்சம் குறையப் போவதில்லை. நீர் பிழை இழைத்து விட்டீர்” என்று கூறுகிறான்.
‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’ என்ற குறளைச் சகுனி மேற்கோள் காட்டுவது இங்கு குறிப்பிடத் தக்கது. அடுத்த பாடலில் தீயினாற் சுட்டபுண் குறளைச் சகுனி சுட்டிக் காட்டுவான்.

யாதொரு கரும மேனு
மெண்ணியே துணிக வென்றும்
காதலிற் றுணிந்து செய்தால்
எண்ணுதல் கடனன் றென்றும்
ஓதுநூற் புலவர் சொன்னார்
உமக்குள வுணர்வற் றன்றே
பேதுற வடர்த்தும் பின்னை
உருகிநீர் பிழைசெய் தீரே.