
பெண்ணின் பாலியல் விருப்பம் ஆணை முழுமையாக விழுங்கி விடக்கூடியது. பெண் பாலியலின் வன்மையைக் கண்டு ஆணுக்கு அச்சம் உண்டு. அதனால் அது தேவையற்றது, வீணாவது, புறந்தள்ளப்படவேண்டியதாகக் கருதப்பட்டு வருகிறது. பெண்ணின் முழுமையான பாலியல் வீரியத்தைக் காணும் போது அதை நிறைவு செய்ய முடியாத ஆண் குற்றவுணர்விலும் பதற்றத்திலும் தள்ளப்படுகிறான். அந்தத் தோல்வியை ரகசியமாக வைத்துக் கொள்கிறான்.
அதனால் பெண்ணை ஒரு தாய்மையின் உருவாக மாற்றிப் பார்க்கவே ஆண் விரும்புகிறான். கன்னித்தாயாக பின் தன் குழந்தைகளின் தாயாக, தன்னுடைய தாயாக மாற்றிப் பார்ப்பது பாதுகாப்பானதாக அவனுக்கு இருக்கிறது. மேலும் அந்தத் தகுதியை அவள் அடைவது அவளைப் பாலியலில் வீரியம் குன்றியவளாக்கவும் பயன்படுகிறது என்பதால் ஆணுக்கு அது பாதுகாப்பைத் தருகிறது.
மேலும் பெண் ஒரு பயன்பாட்டு கருவியாகவே ஆண்மைய சமூகம் பார்த்திருக்கிறது. அதனால் ஒரு நுகர்பொருளாக அவளை மாற்றிவிடுவது எளிமையானதாகிறது. ஆனால் இதுவரையிலான எந்த ஓர் அரசியல் கோட்பாடும் பெண்ணின் விருப்பம் குறித்த விடுதலையைப் பேசவில்லை. மார்க்சியம் அதன் முக்கியத்துவம் பற்றி கவனமெடுக்கிறது.
ஆண், பெண்ணுக்கு நிகரில்லாத நிலையில் பெண்ணுக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்கப் பொருளாதாரத்திலும் பிற துறைகளிலும் சம வாய்ப்புகளைப் பெற்றாலும் ஆணுடைய பலவீனம் குறித்த சொல்லாடல் இருபால் உறவு நிறுவனத்தில் வெளிப்படாமலேயே உள்ளது.
(முகநூலில் முபீன் எழுதியது)
