02.11.2021
துளி – 226
அழகியசிங்கர்
நண்பர் பெ.சு மணியின் பிறந்த தினம் இன்று. தமிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும் என்ற தலைப்பின் கீழ் அவருடைய புத்தகம் வந்துள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி.
பாரதிக்கு முந்திய தமிழ்ப்புலவர் மரபு
சங்க காலம் முதல் தமிழரின் சமூக வாழ்க்கையில் தமிழ்ப் புலவர்கள் தனித் தலைமை பெற்றிருந்தனர். இந்த நிலைமை பிற்காலச் சோழர் காலத்திற்குப் பிறகு தேய்வடையத் தொடங்கியது.
தொடர்ச்சியான அந்நிய ஆதிக்கங்கள் தமிழ்ப் புலவர்களின் தாழ் நிலைக்கு காரணங்களாயின. தெலுங்கர், முகமதியர். ஆங்கிலேயர் முதலான அந்நிய ஆதிக்கங்கள் தமிழ்ப் புலவர்களின் சமூகச் செல்வாக்கைத் தேய்த்தன.
18 ஆம் நூற்றாண்டில்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய மண்ணில் வலுவாக காலூன்றியதும், ஆங்கில மொழியின் அரசாட்சிச் செல்வாக்கு, புதிய அலையாகத் தோன்றி, ஏற்கெனவே ஊக்கமும் உள் வலியுமற்ற தமிழ்ப் புலவர்களின் சமூகச் செல்வாக்கைத் தூக்கி எறிந்தது.
அடிமை வாழ்வில் பொது மக்கள் தொடர்பை, தமிழ்ப் புலவர்கள் போற்றியிருந்தால் நிலைமை சற்று சீரடைத்திருக்கும் . இதற்கு மாறாகத் தமிழ்ச் சமூகத்திலிருந்து தங்களைத் தாங்களே அந்நியப் படுத்திக்கொள்ளும் வகையில் இலக்கியங்களைப் படைத்தனர். கலம்பகம், உலா, அந்தாதி, ஏகபாதம், முற்று, மடக்கு, யமகம், திரிபு என்னும் இலக்கிய வடிவங்களில் எழுதிக் குவித்தனர். தங்கள் பொருள்தேடலுக்கும் புகழில் கும் பொதுமக்களை நாடாமல், மடாலயங்கள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடம் புகலிடம் தேடிக் கொண்டனர் தமிழ்ப் புலவர்கள்.
இதோடமையாமல், தமிழ் வழக்கிலும் இரு துருவங்களை தோற்றுவித்தனர். பொது மக்கள் நடைத் தமிழும், புலமை நடைத் தமிழும் இருதுருவங்களாகி விட்டன.
இந்த நிலையில் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்ப் புலவர்கள் நோக்கிலே ஒரு சிறிய மாறுதல் மின்னற்கீற் றெனத் தோன்றியது. செய்யுள் வடிவமொன்றையே வழி பட்டு வந்த தமிழ்ப் புலவர்கள் இந்த நூற்றாண்டில் உரை நடை வடிவத்தின் தேவையையும் உணர்ந்தனர்.
கிறிஸ்துவ மதப் பிரசாரத்திற்காகத் தமிழ் மொழியைக் கற்க வந்த ஐரோப்பியக் கிறிஸ்துவப் பாதிரிகளின் தொடர்பு தமிழ்ப் புலவர்கள் சிலருக்கு ஏற்பட்டது. இவ்வழியில் இத்தாலிய நாட்டு இராபர்ட் தெ நோபிலி (1577-1636) பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் (1680-1747) முதலானோர் தமிழ் உரை நடை வளர்ச்சிக்குத் தொண்டாற்றினர்.
மேற்கும், கிழக்கும் சந்தித்தது; இதன் பயனாக உரை நடை உணர்வும் சிலிர்த்தது.
இந்த நிலையிலும், பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் மொழிக்குக் குறிப்பிடத்தக்கப் புதுத்திருப்பம் தோன்றவில்லை . தமிழறிஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி சிறந்த தமிழ்த் திங்கள் இதழாக வெளி வந்த விவேக சிந்தாமணியில் எழுதிய ஒரு கட்டுரை இங்கு நினைவுகூரத் தக்கது……
எப்போது பார்த்தாலும் எதாவது படித்துக்கொண்டும் புத்தகத்திற்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருப்பார். அவரை ஞாபகப்படுத்தும் விதமாக அவருடைய காணொளியை வெளியிடுகிறேன்.
திரும்பவும் பெ.சு மணியின் பத்து கேள்வி பத்து பதில் கூட்டம்.”” – YouTube
