
நான் ஒரு முக்கோணம் வரைந்தால்
அது ஒரு அறு கோணமாய் போகிறது
நான் ஒரு சதுரம் வரைந்தால்
அது ஒரு செவ்வகமாகமப் போகிறது
ஒரு நட்சத்திரத்தை வரைந்தால்
ஒரு பச்சை தவளை வந்து நிற்கிறது
ஒரு நதியை வரைந்தால்
ஒரு குட்டையே எஞ்சுகிறது
என் பேச்சை
என் விரல்களே கேட்பதில்லை யென்றால்
மனது கேட்குமா?
என் ஓவியங்கள்
என்னவாக வரையப்பட வேண்டுமென்று
அவை அவைகளே
தீர்மானித்துக் கொள்கின்றன போலும்
சரி இதை
ஒரு சிறிய கவிதையிலாவது
சொல்லிவிடலாமென்றால்
மொழி ஒரு நாய்க்குட்டியை போல
என்னை தரதரவென்று
அறியாத தெருப் புழுதிகளின் வழியே
இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது
உண்மையிலேயே
இதை சங்கிலி போட்டு கட்டி
ஒரு நாய்க்குட்டியாக
வசக்கி வைத்திருப்பவர்
யாரென்றும் தெரியவில்லை
அதனால் தான் சில நேரம்
பொத்தாம் பொதுவாக
குரைத்து வைக்கிறது போலும்
கழுத்தை சங்கிலியால் கட்டியவனை
கண்டு பிடிக்க்கா விட்டால் கூட பரவாயில்லை
ஆனால் அதோடு
சுற்றி வரும்போதே
தன்னை சர்வ சுதந்திரமானவாக
கற்பனை செய்வதை தான்
சசிக்க முடியவில்லை
என் உயிரையும் உடலையும்
ஒரு நடமாடும் கணினியாக்கி
எவன் புரோகிராம் (நிரல்)
எழுதுகிறானோ?
அல்லது என்னை
ஒரு பிளம் கேக்காக
என்னை மாற்றி
வியாபாரத்திற்காக
எந்த வியாபரி
கண்ணாடி டப்பாவிற்குள்
அடைத்து வைத்திருக்கிறானோ
யார் கண்டது?
