25 பிப்ரவரி, 1983
ஜே. கிருஷ்ணமூர்த்தி

ஆற்றின் அந்தப் பக்கத்தில் ஒரு மரம், பல வாரங்களாக சூரியன் தோன்றுவதற்குச் சற்று முன்பே, அதை நாள்தோறும் நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். சூரியன் மெல்ல எழும்பி தொடுவானத்திற்கு மேலும், மரங்கள் மீதும் வரவும், முக்கியமாக அந்த ஒரு மரம் நொடிப்பொழுதில் தங்கமெனத் திகழ்கிறது. அவ்விலைகள் எல்லாம் உயிர்பெற்று ஒளிர்கின்றன. ‘நீர் பார்த்துக்கொண்டே இருக்கையில் – நேரம் செல்லச் செல்ல அம்மரம் – அதன் பெயர் முக்கியமில்லை அது அழகிய மரம் என்பதே பொருளுடையது. அதன் சிறப்பான தன்மை மண் முழுவதிலும், அந்த ஆற்றின் மேலும் விரிந்திருக்கிறது. சூரியன் சிறிது மேல் நோக்கி எழவும், இலைகள் படபடத்து, அசைந்து ஆடின. ஒவ்வொரு மணி நேரமும் அம்மரத்திற்கு அது வெவ்வேறு தன்மையைக் கொடுத்ததாகத் தோன்றியது.
சூரியன் தோன்றுவதற்கு முன் அதன் உணர்வு அடக்கமுடியதாகவும், அமைதி கூடியதாகவும், சற்று சோர்வுடனும் , தொலைவில் உள்ளதாகவும் கண்ணியம் மிகுந்ததாகவும் இருந்தது, நாள் தொடங்கவும் இலைகள் மீது படிந்த ஒளியின் நடனம் அந்த இலைகளுக்கு தாம் மிக்க அழகுடையவை என்ற ஒரு புத்துணர்வை கொடுப்பதாகத் தோன்றியது. நடுப்பகலில் அதன் நிழல்கள் மிகுந்த அழகுடன் இருந்தன; அம்மரத்தின் தோழமையால், தனிமை என்ற உணர்வேயற்று வெய்யிலில் இருந்து விலகி மரத்தின் அடியில் பாதுகாப்புடன் உட்கார்ந்து இருக்கலாம். அவ்வாறு நீர் உட்கார்ந்து இருக்கையில், மரங்கள் மட்டுமே அறிந்ததான, ஆழ்ந்த நிலைத்ததொரு உறவும், நிலையான பாதுகாப்பும், விடுதலையும் அங்கிருக்கின்றன.
மாலை வரவும் மேல்வானம், சாயும் கதிரவனால் ஒளியிடவும், அந்த மரமும் படிப்படியாகச் சோர்வுற்றும், கருமையடைந்தும் தன்னுள் அடங்கியதாகவும் இருக்கிறது. வானம் சிகப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களுடன் இருந்தது, ஆனால் அம்மரம் இப்பொழுது இரவு வரவும் இளைப்பாறிக் கொண் டிருக்கிறது.
நீர் அம்மரத்துடன் உறவு கொண்டால், அப்பொழுது மனித இனத்துடன் உறவு கொண்டவராவீர் அந்நிலையில் தான் அம்மரத்தின் பொறுப்பும் உலக எல்லா மரங்களின் பொறுப்பும் உங்களுடையதாகிறது. ஆனால் இம்மண்ணின் மீதுள்ள உயிர்களிடம் உறவு முறை இல்லையெனில், உமக்கு மனிதத்தன்மையிடமும் மற்றும் மனித சமுதாயத்திடமும் உள்ள உறவை இழப்பதாகும். உண்மையில் நாம் என்றுமே மாக்கின் தன்மையை ஆழ்ந்து நோக்குவதில்லை; ஒரு பொழுதும் உண்மையில் அதைத் தொடுவதுமில்லை, அதன் உறுதியான தன்மையையும், சொரசொரப்பான அதன் பட்டையையும் தொட்டு உணர்ந்ததுமில்லை. அம்மரத்தின் ஒரு பகுதியான அந்த ஓசையைக் கேட்பதும் இல்லை. அவ்வோசை இலைகளிடையில் ஊடுருவி வரும் காற்றின் ஒலியன்று, இலைகளை சலசலவென செய்யும் இளங்காலை காற்றுமன்று, அம்மரத்திற்கே உரித்தான ஓர் ஓசை, பருத்த அடி மரத்தின் ஓசை, அதனுடைய வேர்களின் மோன ஓசையுமாகும். நீங்கள் அவ்வோசையைக் கேட்பதற்கு மிகவும் மென்னுணர்வு உள்ளவராக இருக்க வேண்டும். இவ்வோசை உலகின் இரைச்சலன்று, சளசளக்கும் மனத்தின் புலம்பலுமன்று, இழிந்த மனித சச்சரவின் சந்தடியுமன்று, மனிதப் போர்களின் முழக்கமும் அன்று, அது படைப்பின் பகுதியான ஓர் ஒலியாகும்.
இயற்கையுடனும், சிறு பூச்சிகளிடமும், தாவிப் பாயும் தவளைகளுடனும், குன்றுகளிடையே துணையை நோக்கி அகவலிடும் ஆந்தைகளிடமும் நமக்கு உறவு இல்லாதது ஒரு விந்தையே! நமக்கு என்றுமே உலகின் எல்லா உயிரினங்களிடமும் உணர்வு இல்லை எனக் காண்கிறது. நாம் இயற்கையுடன் நீடித்த உறவு உள்ளவராக இருந்தால், ஒருக்காலும் எந்த ஒரு விலங்கையும் நம் பசியை ஆற்றிக் கொள்வதற்காகக் கொலை செய்யோம்; ஏதொன்றுக்கும் கேடு விளைவிக்க மாட்டோம், அன்றி நம்முடைய நன்மைக்காக குரங்கு, நாய், சிறு முயல்கள், பன்றி இவை போன்றவற்றை பரிசோதனைக்குட்படுத்தித் துன்புறுத்தோம் . நம்முடைய காயங்களுக்கும் உடல் நோய்களை தீர்வுகாணவும் கொடுமையற்ற வேறு வழிகள் நாடுவோம். மன நோயை நலப்படுத்துதல் என்பது முற்றிலும் வேறானது. நாம் இயற்கையுடன் இருக்கும் பொழுது மனநலம், நோயற்ற நிலை படிப்படியாக உண்டாகின்றன, அந்த ஆரஞ்ச். மரத்துடனும், சிமெண்டைத் துளைத்து வரும் புல்லின் தாளுடனும் மஞ்சு சூழ்ந்த குன்றுகளுடனும் அந்நிலை தானாகவே ஏற்படுகிறது.
நாம் இவ்வாறு கூறுவது உணர்ச்சி வசமானதாலும், மனவெழுச்சியினாலும் அல்லது நம்ப முடியாத கற்பனையாலும் அன்று, ஆனால் இம்மண்ணில் உயிர்வாழ்ந்து இயங்கும் எல்லா உயிரினங்களிடமும் உறவு உள்ளது என்பது உண்மை. மனிதன் ஆயிரக்கணக்கான திமிங்கலங்களைக் கொன்றிருக்கிறான். இப்பொழுதும் அக்கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றைக் கொலை செய்வதால் மனிதனுக்கு கிடைக்கும் நலமானது, கொடுமையற்றப் பல்வேறு வழிகளிலும் நமக்குக் கிடைக்க கூடும். ஆனால் மனிதனுக்குக் கொலை செய்வது விருப்பமானதாக இருக்கிறது, துள்ளி ஓடும் மானையும், வனப்பும், மென்மையும் கூடிய சிறு மான்களையும், பெரியதோர் யானையையும் கூடக் கொலை செய்வதில் விருப்பமுள்ளவனாக இருக்கிறான். மனிதனை மனிதன் கொலை செய்வதும் நமக்கு விருப்பமானதே. மற்றும் மனிதர்களை கொலை செய்வதை நாம் தடை செய்யவில்லை என்பதை மனித வாழ்க்கையின் வரலாறு முழுவதிலும் காணலாம். நம்மால் முடிந்தால், மற்றும் நாம் கட்டாயமாகச் செய்ய வேண்டியது – இயற்கையுடனும், மரங்களுடனும், புதர்களுடனும், மலர்களுடனும், புல்பூண்டுகளுடனும், விரைந்து செல்லும் மேகங்களிடமும், ஆழ்ந்து நிலைக்கும் உறவை ஏற்படுத்திக் கொண்டால், நாம் எக்காரணத்தை முன்னிட்டும், மற்றொரு மனிதனைக் கொலை செய்யமாட்டோம். மனிதனால் திட்டமிட்டு செய்யப்படும் கொலையே போர் என்பதாகும். ஆனால் குறிப்பிட்ட போர் ஒன்றை எதிர்த்தும், அணுசக்தியை எதிர்த்தும் பலவித போராட்டங்கள் செய்த போதிலும் நாம் போர் என்ற ஒன்றை எதிர்த்து ஆர்பாட்டங்களை நடத்தியது இல்லை. ஒரு மனித உயிரைக் கொல்வது உலகின் மிகப் பெரியதொரு பாவம் என்று நாம் கூறியதும் இல்லை .
* இப்புத்தகத்தில் கிருஷ்ணமூர்த்தி அவரைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் – நீர், உமது என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
