தாய்மை/குமரன்

“ஆச்சி, இங்கே வா” என்று திண்ணையிலிருந்து குரல் கொடுத்தார் கதிரேசன். அவர் எதிரில் சுப்பு, அவன் மனைவி , மாரி, கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் சாப்பிடாத ரேகையும் கவலையும் அப்பியிருந்தது.
சுப்பு ஒரு நெசவாளி. முக்கால்வாசி நெசவாளிகள் லுங்கிதான் தயாரிப்பார்கள். லுங்கி மொத்தத்தையும் கம்பெனியில் போட்டு விட்டு, அவர்கள் கொடுக்கும் ஒரு ரசீதை கொண்டு வந்து கதிரேசனிடம் கொடுத்து பணம் வாங்கிக்கொள்வார்கள். அவரும் அந்த ரசீதுகளை வைத்துக்கொண்டு ஒரு மாதம் வட்டிப்பணம் பிடித்துக்கொண்டு பணத்தைக் கொடுப்பார். ஒரு மாதத்திற்கு பிறகு அவர் லுங்கி கம்பெனியில் அந்த ரசீதுகளை கொடுத்து மொத்தமாக பணம் வாங்கிக்கொள்வார் . இப்படித்தான் அவர் தொழில் நடந்து கொண்டிருந்தது. கதிரேசன் ஒரு மென்மையான நாணயமான மனிதர். இரக்கக்குணம் கொண்டவர்.

உமையாள் ஆச்சிக்கு அவர் கூப்பிட்டது காதில் விழவேயில்லை. அவள் மும்முரமாக தொம்பையில் எந்த அளவு நெல் உள்ளது என்று அதற்குள் எட்டிப்பார்த்து கொண்டிருந்தாள். இன்னும் சில நாளைக்குத்தான் வரும் என்ற உண்மை அவளுக்கு சொரேர் என்று உரைத்தது.

அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். எங்கும் போரைப்பற்றிய பேச்சு. ஜப்பான்காரன் குண்டு போட்டுடுவானே என்ற பயம். பிரிட்டிஷ் அரசு அமைதியாக இருக்கிறதோ என்ற ஐயம் மக்களுக்கு. பிரிட்டிஷ் அரசோ அனைத்து வித உணவுப்பண்டங்களையும் அநியாய விலையில் கொள்முதல் செய்து டில்லிக்கும் அவர்களது வெவ்வேறு ரெஜிமண்டுகளுக்கும் அனுப்பிக்கொண்டிருந்தது. இது தவிர, வியாபாரிகள் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அநியாய விலைக்கு விற்று பணமாக்கிக் கொண்டிருந்தனர். அதனால் மதராஸ் மாகாணத்தில் அனைத்து இடத்திலும் உணவு தட்டுப்பாடு. பஞ்சம்.

சரி கதைக்கு வருவோம். கதிரேசன் என்ன என்று உடனே பதில் கொடுக்கும் மனைவி குரல் கொடுக்க வில்லையே என்ற பதட்டத்துடன் மனைவியை தேடி உள்கட்டுக்கு வந்தார். வந்தவர் தொம்பைக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த மனைவியை மெதுவாக அழைத்தார். ஆச்சி உடனே தலையைத்தூக்கி கணவரைப் பாரத்தவுடன் கீழிறங்கினாள்.
“என்னங்க, என்ன வேணும்” என்று கேட்டாள். கதிரேசன் தயக்கத்துடன், “ஒன்னுமில்லை நம்ம சுப்பு வந்திருக்கான், அவன் வீட்டிலே அரிசியே இல்லையாம்” என்றும் ” உனக்கே தெரியும் , அவனுக்கு நண்டும் சிண்டுமா நாலு குழந்தைங்க” என்றவர் தொடர்ந்து, ஒரு மரக்கால் அரிசியை கொடேன்” என்றார்.
உமையாளுக்கு, என்ன இவர் நாட்டு நடப்பு தெரிந்தவரே இப்படி பேசுகிறாரே என்ற வருத்தத்துடன், ” நமக்கே ஒரு நாலு மரக்கால் அரிசிதான் இருக்கும்” என்று இழுத்தவள், ஏன் உமக்குத்தெரியாதா, உங்க அண்ணன் குடும்பம் பர்மால சம்பாதிச்சதையெல்லாம் வழியில் எல்லாம் பிடுங்கனது போக ஒன்னுமில்லாமதானே வந்திருக்காக, அவங்களுக்கு வேற கொடுக்கனுமே” என்றாள். அவள் கூறிய உண்மை நிலை புரிந்ததால் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை, “சரி சரி நீயே போய் சொல்லிவிடு” என்று சொல்லி விட்டு சோர்வுடன் கட்டிலில் போய் சார்ந்து கொண்டார்.

வெளியில் எட்டிப்பார்த்த உமையாள், என்ன நினைத்தாளோ, உள்ளே திரும்ப வந்து இருந்த நாலு மரக்கால் அரிசியில் ஒரு மரக்கால் அரிசியை வெளியில் நின்று கொண்டிருந்த மாரியம்மாவிடம் கொடுத்தாள். நீ மகராசியா இருக்கனும் என்று வாழ்த்தின அவர்களை ஈரக்கண்களோடு வழியனுப்பினாள். வியப்புடன் பார்த்த கதிரேசனை, “ஆமா, மாரி கைல இருந்த சிண்டைப் பாரத்தவுடன் கொடுத்துடனும்னு தோணிச்சு, நமக்கென்ன, இரண்டு பேர்தானே, பாத்துக்கலாம்” என்று கண்ணீருடன் சென்றாள் , குழந்தை குட்டி இல்லாத அந்த தாய்.