வீரப்பன் ஆவணப்படம்…../பா.ராகவன்

நெட்ஃப்ளிக்ஸில் வந்திருக்கும் வீரப்பன் ஆவணப்படம் குறித்துப் பலர் எழுதுவதைப் பார்க்கிறேன். நான் பார்க்கவில்லை; எப்போது பார்ப்பேன், பார்ப்பேனா என்றும் தெரியாது. ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் கோபால் முதல் முதலில் வீரப்பனைச் சந்தித்துவிட்டுத் திரும்பியபோது அவரைச் சந்தித்துப் பேசி அவரது அனுபவங்களைத் தொகுத்துக் கல்கியில் ஒரு சிறிய தொடரை எழுதினேன். ‘வீரப்பனும் நானும்’ என்ற தலைப்பில் வெளியான அத்தொடர், நக்கீரனில் வந்த வீரப்பன் நெடுந்தொடருக்கெல்லாம் முன்னால் வந்தது.

அச்சில் வெளியானவற்றுக்கு அப்பால் கோபால் பகிர்ந்துகொண்ட பல தகவல்கள் ஆச்சரியமானவை; திடுக்கிடச் செய்பவை. அவற்றில் சிலவற்றைப் புனைவாக அல்லாமல் வேறு எவ்வகையிலும் எழுத முடியாது என்பது ஒருபுறம் இருக்க, வீரப்பனைக் குறித்து அவர் தெரிவித்த பல தகவல்களினும் வீரப்பன் விஷயத்தில் அவருக்கு இருந்த நிதானமும் தெளிவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஊர் உலகம் மொத்தமும் அன்றைக்கு அவரை ஒரு சூப்பர் ஹீரோவைப் போல வியந்து பார்த்துப் பேசியதை நினைவுகூர்கிறேன். ஆனால் ஒரு பத்திரிகையாளராக, ஒரு கிரிமினலைச் சந்திக்கச் சென்றோம், அந்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறோம் என்பதைத் தாண்டி அவருக்கு அதில் ஒரு பெருமிதமும் இல்லை. அந்தத் தொடர் முழுதும் ஓரிடத்தில்கூடத் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல்தான் அவர் பேசினார். அப்படியேதான் அது வெளிவந்தது. பின்னாளில் நக்கீரனில் வெளியான வீரப்பன் கட்டுரைகளின் தொனி குறித்து எனக்குத் தெரியாது. நான் படித்ததில்லை. கோபாலின் நேரடி அனுபவங்களைக் குறித்து மட்டுமே இங்கே சொல்கிறேன்.

மரணத்துக்குப் பிறகு வீரப்பனை ஒரு தமிழ் தேசியப் போராளி முகமாக முன்னிறுத்தும் முயற்சிகளெல்லாம் நடந்தன. ஒரு கிரிமினலை க்ளோரிஃபை செய்வதற்குப் போலிஸ் தரப்புப் பிழைகளையும் பிசிறுகளையும் ஊதிப் பெரிதாக்கும் உலகு தழுவிய புராதன முயற்சிகள் வீரப்பன் விஷயத்திலும் மேற்கொள்ளப்பட்டன. என்ன ஊதினாலும் ஒரு கிரிமினல் கிரிமினல்தான். வேறு எதுவும் இல்லை.