இளமையில் கல் /ஏ.ஏ.ஹெச். கே. கோரி

வானளவுக்கு உயர்ந்து நின்றன பனைமரங்கள்.
அலமேலு அண்ணாந்து பார்த்தாள்.
ஆமாம், பனை மரங்கள் வானளவுக்கு உயர்ந்துதான் நின்றிருந்தன.  இவளுடைய வாழ்க்கைதான் அதால பாதாளத்தில் அலங்கோலமாய்க் கிடந்தது. ஆழமாயரு பெருமூச்சை வெளிப்படுத்தித் தன்னுடைய வேதனையில் கொஞ்சத்தை வெளியேற்றினாள்.  அல்லது, அப்படி வெளியேற்றிக் கொண்டதாய் நினைத்துக்கொண்டாள். பெருமூச்சு விட்டு முடித்த பின்னால், பூமியிலிருந்த கூடையை எடுத்துத் தலையில் தாங்கிக் கொண்டாள்.

இவளுடைய கிராமத்தில், இவளுடைய வயதையத்த இளம்பெண்கள், தலையில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், தாழம்பூ என்று சூடிக்கொண்டு, கூந்தலுக்கு மணம் சேர்ப்பார்கள். ஆனால், அலமேலுவுக்கு சூடிக்கொள்ள இந்த ஓலைக் கூடைதான். அவர்கள் கூந்தலில் மணம் சேர்ப்பார்கள், இவள் கனம் சேர்த்தாள். கூடையைத் தலையில் சுமந்தபடி பஸ் நிறுத்தத்தை நோக்கி மெல்ல மெல்ல நடக்க முற்பட்டாள்.
காலையில், வியாபாரத்துக்குக் கிளம்புகிறபோதே சோர்வுக்கு இடங்கொடுத்து விட்டால், பிறகு சோற்றுக்கு இடைஞ்சலாய்ப் போகும், மெல்ல மெல்லவெல்லாம் நடந்து கட்டுப்படியாகாது, எட்டி நடைபோட வேண்டும் என்று உணர்ந்து நடையைக் துரிதப்படுத்தினாலும், சரளைக்கற்கள் பாவியிருந்த சாலையில் செருப்பில்லாத கால்களோடு மெல்ல மெல்ல நடப்பதே சிரமமான சங்கதியாயிருந்தது.
ரெண்டு வாரமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இந்தக் கற்கள். சாலை போடுகிற வேலையை எப்போது ஆரம்பிப்பார்கள் என்று இவளுடைய குலதெய்வத்திடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது, அயர்வையும் வியர்வையையும் மீறி அலமேலுவின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை அரும்பியது. அலமேலுவின் முகத்தில் புன்னகை அரும்பியது அற்புதமான விஷயம் தான், ஆனால், அந்தப் புன்னகை, அவளுக்கு எதிரே வந்து கொண்டிருந்த கள்ளுப்பார்ட்டி நடராஜனின் கண்களில் பட்டுத் தொலைத்துவிட்டது தான் அசம்பாவிதமான விஷயம்.
“என்ன அலமேலு, என்னப் பாத்துப் பல்லக் காட்டிக்கினே போற?” என்று நடராஜன் இவளை வழிமறித்துப் பல்லிளித்தான்.
“ஐயே, ஒன்னப்பாத்து இங்க யாரும் பல்லக் காட்டல” என்று ஆட்சேபித்தாள் அலமேலு.
“இந்தா, வழிய வுடு நா யாவாரம் பாக்கப் போவணும்.”
“ஆமா, பெரிய யாவாரம் பண்ணிக் கிழிக்கிற. நா சொல்றதக் காதுல போட்டுக்க மாட்டேங்கறியே அலமேலு. நா சொல்றதக் கேட்டன்னா ஒனக்கு நல்ல நேரம் பொறக்கும்.”
“ஒன்னோட நல்ல நேரம் நா கால்ல ஒண்ணும் போட்டுக்கல….”
“கால்ல போட்டுருந்தா? கயட்டி என்ன அடிப்பியாக்கும்? நீ அடிச்சாலும் சரி அலமேலு, நா ஒனக்கு நல்ல வார்த்த சொல்றத நிப்பாட்ட மாட்டேன்.”
“என்னய்யா நல்ல வார்த்த? இந்த நொங்கு விக்கிறத வுட்டுப்புட்டு கள்ளு விக்ய வான்னு என்னக் கூப்புடற. அது என்னைய்யா பொழப்பு? தூ! அந்தப் பாவப் பொழப்பு எனக்கு வேண்டாம்.”
“பாவம் புண்ணியமெல்லாம் பாத்தா பொயப்பு நடக்காது அலமேலு.”
“ஏன்யா, தெரியாமத்தான் கேக்கறேன், கள்ளு விக்கிறயே நீ, அந்தக் கள்ளுக் கலயத்லக் கொஞ்சம் சுண்ணாம்பத் தடவி வச்சி, பதனியாக்கி விக்யலாம்ல?”
“பயனியா! அத மனுசன் குடிப்பானா? கள்ளுதான் டேஷ்ட் அலமேலு, கள்ளுலதான் காச அள்ளலாம் தெர்மா? இப்ப ஒத்தாசக்கி ஆளில்லாம நா தனியா அல்லாடிட்டிருக்கேன். நீ எங்கூடப் பார்ட்னரா சேந்தின்னா, நம்ம பிஸினஸ் ஓஹோன்னு ஆயிரும். ராவோட ராவா நீ ராணியாயிருவ. வேகாத வெயில்ல இப்டிக் கூடைய சொமந்துக்கினு கஸ்டப்படவே வேணாம். சரி, இப்ப நா தொழிலுக்குப் போறேன், நாளக்கி சாய்ங்காலம் ஒன்ன மறுவாட்டி சந்திக்கிறேன், யோசிச்சி நல்ல முடிவச் சொல்லு.”
கள்ளப்பார்ட் நடராஜன் என்றொரு நடிகர் இருந்ததாய் அலமேலுவுடைய அப்பா சொல்லுவார். “குமுதம், குமுதம்னு ஒரு படம் வந்திச்சி. எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி நடிச்ச படம். அந்தப் படத்ல மாமா மாமா மாமான்னு தூள் கௌப்புற பாட்டு ஒண்ணு. அந்தப் பாட்டுக்குக் கள்ளப்பார்ட் நடராஜன் டான்ஸ் ஆடுவார் பார் அலமேலு, ஒங்கப் பிரபுதேவால்லாம் பிச்சையெடுக்கணும்.”
இந்த நடராஜன், பெயரில் மட்டுமல்லாமல் தோற்றத்திலும் அந்தக் கள்ளப்பார்ட் நடராஜனைப் போலவே இருப்பதாய் அப்பா சொல்லுவார். அந்தத் தோற்ற ஒற்றுமையையும் பெயர்ப் பொருத்தத்தையும் கவனத்தில் கொண்டு, இவனுக்குக் கள்ளுப்பார்ட்டி நடராஜன் என்று அப்பாதான் பெயர் வைத்தார். கள்ளுவிற்கிற நடராஜன், கள்ளத்தனத்திலும் கை தேர்ந்தவனா யிருந்தான். அவனுக்குப் பாத்தியப்பட்டிராத பனை மரங்களிலும் கள்ளத்தனமாய்க் கள்ளிறக்கினான்.
கள்ளச்சாராயம் மாதிரிக் கள்ளக்கள்ளு !
கள்ளுப்பார்ட்டி நடராஜனுக்கு அலமேலுவின் மேல் ஒரு கண்ணு இருக்கிறது என்று அப்பாவுக்கு தெரியவந்தபோது, அவனிடமிருந்து மகளைக் காப்பாற்றுவதற்காக ஓர் அவசரக் கல்யாணத்தை முடித்து வைத்து விட்டு, ஒரு கடமை முடிந்த திருப்தியோடு கண்களை மூடிவிட்டார்.
கள்ளுப்பார்ட்டியிடமிருந்து மீட்டு மகளைக் கட்டிக் கொடுத்த இடம் ஒரு சாராயப் பார்ட்டி என்பது அப்பாவுக்குத் தெரிந்திருக்கவில்லை.
தகிக்கிற வெயிலில் அலமேலு நின்றிருந்தாள். பாலித்தீன் பைகளில் பேக் செய்யப்பட்ட நொங்குகள் கூடைக்குள்ளே இருந்தன. இவளுடைய கையில் ஒரு நொங்குப் பை இருந்தது. அயனாவரம் ரயில்வே காலனிக்கும், லோக்கோ ஷெட் தொழிற் சாலைக்குமிடையே இருக்கிற, ஆளரவம் குறைந்த சாலை அது. ஆளரவம் தான் குறைவே தவிர, வாகன ஓட்டம் கனிசமாயிருக்கிற சாலை. ரெண்டு சக்கர மூன்று சக்கர, நாலு சக்கர வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. அலமேலு, கையிலிருந்த பையை சாலையை நோக்கி நீட்டியபடி நின்றிருந்தாள். வாகன ஓட்டிகள் எவருக்காவது நொங்குப்பசி எடுத்தாலோ அல்லது சும்மா விலை கேட்டு விட்டுப்போவாம் என்கிற சின்ன புத்தி மேலோங்கினாலோ வாகனம் வேகந்தணிந்து இவளை நோக்கி ஓரங்கட்டும்.
அப்படியிப்படியென்று இருபது நிமிஷத்துக்கொரு பை விற்கும். அதில்லாமல், சின்ன பெண்ணொருத்தி செருப்பில்லாத கால்களோடு சுட்டெரிக்கிற வெயிலில் நின்று நொங்கு விற்றுக் கொண்டிருக்கிறாளே என்கிற இரக்க மேலிட்டால் ஓரங்கட்டுகிற வாகனங்கள் வெகு வெகு அபூர்வம்.
அப்படி அபூர்வமான வாகனமொன்று, ரெண்டு மணிவாக்கில் அலமேலுவுக்கருகில் மெல்ல ஒதுங்கியது. பச்சைக்கலர் மாருதியன்று. தன்னந்தனியாய்க் காரோட்டிக் கொண்டு வந்திருந்தவன் சாலையோரமாய்க் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான் இவளை நோக்கி.
காரில் வருகிறவர்கள் யாரும் வழக்கமாய்க் கீழே இறங்க மாட்டார்கள். கண்ணாடியை மட்டும்தான் இறக்குவார்கள். இறக்கி, விலை கேட்பார்கள், பேரம் பேசுவார்கள், பத்தில் ஓரிருவர், ஒரேயரு பாக்கெட் வாங்கிக் கொண்டு போவார்கள்.
இந்தப் பச்சை மாருதிக்காரன் இறங்கி வந்தது அலமேலுவுக்கு ஆச்சர்யமாயிருந்தது. காரின் கண்ணாடிகள் இறக்கப் பட்டேயிருந்தன. ஏஸி கூட இல்லாத எளிமையான வாகனம், பாவம்.
வந்தவனை நோக்கி அவள் ஒரு நொங்குப் பையை நீட்டினாள்.
“அறுவது ரூவா, மொதலாளி.” வந்தவன், சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு இவளைப் பார்த்தான். “ஸிஸ்டர், நீங்க யார்ட்ட பேசறீங்க?”
“ஒங்ளண்ட தான் பேசறேன் மொதலாளி, அறுவது ரூவா. ஒண்ணு போதுமா, ரெண்டு தரவா?”
“ஒண்ணேயண்ணு வாங்கிக்கிறேன், ஆனா, நா ஒங்களுக்கு மொதலாளியில்லம்மா, நா ஒரு எழுத்தாளன்.”
“ஒங்கள, எழுத்தாளனேன்னு கூப்புடச் சொல்றீங்களா ?”
“அது நல்லாயிருக்காது. அண்ணா, அண்ணே, அண்ணாச்சி எப்டின்னாலும் கூப்பிடலாம்.”
“சார்ன்னு கூப்புடறேனே ?”
“அப்டியும் கூப்புடலாம், தப்பில்ல.”
“ஆனா சார், நா எதுக்கு ஒங்களக் கூப்புடணும் ?”
“அதானே, நீங்க எதுக்கு என்னக் கூப்புடணும்? நாந்தான் நீங்கக் கூப்புடாமலேயே வந்துட்டேனே!”
அவன் சிரித்தான். அலமேலுவுக்கும் சிரிப்பு வரப்பார்த்தது.
வழக்கமான வாடிக்கையாளர்களைப் போலல்லாமல் இவன் கொஞ்சம் வித்யாசமான ஆசாமியாயிருப்பான் போல. எழுத்தாளன் என்று சொல்கிறான். எழுத்தாளனென்றால் கொஞ்சம் விசேஷமான மனிதனாய்த்தானிருப்பான்.
சரி, இந்த விசேஷமான மனிதனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வியாபாரத்தைக் கோட்டை விட்டுவிடக் கூடாது.
“சார், அறுவது ரூவாய்க்கித் தரவா, நூத்தியிருபது ரூவாய்க்கித் தரவா? மூணு பாக்கெட் வாங்கினீங்கன்னா, ஸேல். பத்து ரூவா டிஸ்க்கவுன்ட்.”
“இங்லீஷ்லயெல்லாம் பேசறீங்க?”
“பேசமாட்டோமா? நாங்களும் டென்ந்த் வரக்யும் படிச்சிருக்கோம்ல!”
“கிரேட், ஸிஸ்டர்! ஸிஸ்டர், நா எப்டியும் ஒரு பாக்கெட் வாங்கிக்குவேன். அதுக்கு முந்தி, ஒங்கக்கிட்டக் கொஞ்சம் பேசலாமா? கைவசம் கொஞ்சம் கேள்விகள் இருக்கு. பயப்படாதீங்க, ஒங்க பிஸினஸ்க்கு எடஞ்சலா இருக்கமாட்டேன். கஸ்டமர்ஸ் வரும்போது ஒதுங்கிக்குவேன்.”
“ஆமா, கஸ்டமர்ஸ் இங்க க்யூல நிக்கிறாங்க ! சும்மாக் கேளுங்க சார், நானும் போரடிச்சிக் கிட்டுத்தானே நிக்கிறேன்.”
“கேள்விகளை நான் கேட்கட்டுமா, அல்லது நீங்கள் கேட்கிறீர்களா?”
“நீங்களே கேளுங்கள் ப்ரபோ. அதுக்கு முந்தி, ஓரேயரு கேள்வி நா கேட்டுக்கறேன். மெட்ராஸ்க்காரங்க நீங்க இதுக்கு முந்தி நொங்கு தின்னிருக்கீங்களா, இல்ல இதுதான் முதல்அனுபவமா ?”
“ஹ! நல்லாக் கேட்டீங்க போங்க! ஒங்களுக்கென்ன இப்ப இருவத்தி நாலு வயசு இருக்குமா?”
“அபாண்டமாப் பேசாதீங்க எழுத்தாளரே, இருவத்தி மூணுதான் ஆவுது.”
“அபாண்டத்துக்கு மன்னிக்க வேண்டும் மேடம். என்ன சொல்ல வந்தேன்னா, நீங்கல்லாம் இந்த லோகத்ல பொறக்கறதுக்கு முந்தியே நா எங்கப் பாளையங்கோட்டைல நொங்கு தின்னுக் கொட்டை போட்டவனாக்கும்! ஓ, நொங்குல கொட்டை கெடையாதோ? பரவாயில்ல, பனம்பழம். பனம்பழம் தின்னுக் கொட்டை போட்டவன் நான். பாளையங்கோட்டைல எங்கப் பாட்டி வீடு. பாட்டி வீட்ல பெரியத் தோட்டம். பெரீய்யத் தோட்டத்ல நெறைய்யப் பனைமரம். நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, தகன்….”
“பதனி?”
“அது வேற இலாக்கா. எங்கத் தெரு முனையில டெய்லி சாய்ங்காலம் ஒரு பதனிக்கார அம்மா பதனிப் பானை, முழுப் பனங்காய் எல்லாம் வச்சிக்கிட்டுக் குத்தவச்சிருக்கும். சைடு டிஷ் மாங்கா. பனையோலையில ஒரு பட்டை புடிச்சி அதுல பதனிய ஊத்தி உறிஞ்சிக் குடிக்கணும். வெறும் பதனி பத்துப் பைசா. அதுல நொங்கு நோண்டிப் போட்டா பதினஞ்சி பைசா. மாங்காயும் நறுக்கிப் போட்டா இருபது பைசா. ஆஹா!”
எழுத்தாளன், பதநீர்ப் பரவசத்தில் மெய்ம்மறந்திருந்தபோது, பக்கத்தில் வந்து நின்றது ஒரு ஹோண்டா ஸிட்டி. அந்தக்கார் கிளம்பிப் போன பின்னால், ‘என்ன எழுத்தாளரே, பனைமரத்து உச்சியிலயிருந்து கீழ எறங்கி வந்துட்டீங்களா?” என்று சிரித்தாள் அலமேலு.
‘நா எறங்கி வந்துட்டேன், அந்தக் கார்லயிருந்து யாரும் எறங்கி வரலியா?’ என்றான் எழுத்தாளன்.
“நா ஒங்க பிஸினஸ்க்கு எடஞ்சலா இருக்கேனோ ஸிஸ்டர்?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். அது தெனமும் வர்ற கார்தான். கண்ணாடிய எறக்குவாங்க. இன்னிக்கி என்ன ரேட்னு விசாரிப்பாங்க, கண்ணாடிய ஏத்திட்டுப் பறந்துருவாங்க.”
“ஓ! சரி ஸிஸ்டர், நா பேட்டிய இன்னும் ஆரம்பிக்கவேயில்ல.” “ஆரம்பிங்க எழுத்தாளரே.” “இது, வந்து, ஒங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சா ஸிஸ்டர் ?” “இது, வந்து, எதுக்குக் கேக்கறீங்க எழுத்தாளரே?”
“கல்யாணம் ஆயிருந்தா ஒங்க வீட்டுக்காரர் ஒங்கள இப்டி கஷ்டப்பட விட்டிருக்க மாட்டாரேன்னு கேட்டேன்.”
“கல்யாணம் ஆனதுனாலதான் கஷ்டமே. இருவது வயசுல கல்யாணமாச்சி. இருவத்திரெண்டுல புண்ணியவான் போய்ச் சேந்துட்டார்.”
“ஐ ம் ஸாரி ஸிஸ்டர். ஹார்ட் அட்டாக்கா ?”
“கிராமத்துல ஹார்ட் அட்டாக்கெல்லாம் சின்ன வயசுல வராது. அதெல்லாம் பட்டணத்துக் காரங்களுக்குத்தான் வரும். கிராமத்துல சின்ன வயசுல செத்தாங்கன்னா அதுக்கு வேற காரணம் இருக்கு : கள்ளச்சாராயம்.”
“அகெய்ன் ஐம் ஸாரி ஸிஸ்டர்.” “சரி, எம்புருஷனப்பத்திக் கேக்காதீங்க சார், டாப்பிக்க மாத்துங்க.” “ஒங்க கிராமத்தோட பேர் என்னவோ?”
“அரக்கோணம் பக்கத்ல அனுவாதியம்பேட்ட சார். அங்கயிருந்து அரக்கோணத்துக்கு பஸ் புடிக்கணும். அரக்கோணத்ல ரயில் ஏறி, கூடையோடக் கக்கூஸ் பக்கத்ல நெரிசல்ல நின்னுக்கிட்டே வந்து பெரம்பூர்ல வந்து எறங்கணும். பெரம்பூர் ஸ்டேஷன்லயிருந்து இந்த ஸ்பாட்டுக்கு நடக்கணும். சாயங்காலம் நாலுமணி வரக்யும் கால்கடுக்க வெயில்ல நின்னா, ஒரு இருவது பை விக்யும். ஒரு பை வித்தா பத்து ரூவா லாபம்.”
“மத்யான சாப்பாடு?”
“ஏன், லஞ்ச்ன்னு இங்லீஷ்ல கேட்டா எங்களுக்கு வௌங்காதோ?”
“ஸாரி, நீங்க டென்த்த்ங்க றத மறந்துட்டேன், சரி சொல்லுங்க, லஞ்ச் காலைலயே கொண்டாந்துருவீங்களா ?”
“பாட்டில்ல தண்ணியிருக்கு. ரொம்பப் பசிச்சா, ரெண்டு மூணு நொங்க முழுங்குவேன். ஈவ்னிங் வீட்டுக்குப் போய்த்தான் ஒல வக்யணும்.”
“இதுக்கு நா சரின்னு சொல்லவா, ஸாரின்னு சொல்லவான்னு தெரியல ஸிஸ்டர்”
சரியா ஸாரியா என்று எழுத்தாளன் குழப்பத்திலிருந்தபோது சிகப்புக்கலர் கார் ஒன்று வந்து நின்றது. கண்ணாடி இறக்கப்பட்டது, ஆனால் அலமேலு அந்தப்பக்கம் திரும்பவேயில்லை. கண்ணாடியை ஏற்றிக்கொண்டு கார் போய் விட்டது. ஏன் இப்படி விற்பனையில் கவனமில்லாமல் இருந்து விட்டாள் என்று எழுத்தாளன் துணுக்குற்றபோது, ‘அதுவும் ரெகுலர் கஸ்டமர் தான்’ என்று ஒரு விரக்திப் புன்னகையை வெளிப்படுத்தினாள் அலமேலு.
“ரெகுலர் கஸ்டமர்ங்கறீங்க, நொங்கு வாங்காமப் போறான் அவன்?”
“நொங்கு வாங்க வர்றவனில்ல அவன், பொண்ணு பாக்க வர்றவன்.”
“பொண்ணு பாக்கன்னா ?”
“எழுத்தாளர்ங்கறீங்க, இதுகூடப் புரியலியே சார்! அவன் ஸைட் அடிக்க வந்தவன். அது ஒரு ஜொள்ளுப் பார்ட்டி சார்.”
“அடப்பாவி!”
“இவன விடப் பெரிய பாவி ஒருத்தன் எங்கள் ஊர்லயே இருக்கான். பெரிய பேஜாரு சார்.”
“இந்த பேஜார்களையெல்லாம் புறமுதுகிடச் செய்ய ஒரு வழியிருக்குமான்னு யோசிச்சிட்டிருக்கேன் ஸிஸ்டர். நா கௌம்பறேன். ஒரு நல்ல மேட்டரோட நாளக்கி வர்றேன். கூடைக்குள்ள எத்தன பாக்கெட் கெடக்கு?”
“ஒரு நாலு பை கெடக்கும் சார். கைல ஒண்ணு. மொத்தம் அஞ்சு.”
‘அந்த அஞ்சையும் இந்தப்பக்கம் தள்ளிட்டு நீங்க அரக்கோணத்துக்கு ரயிலேறுங்க’ என்று ஓர் ஐநூறு ரூபாய் நோட்டையெடுத்து அவளிடம் நீட்டினான்.
“ஐயோ, என்ட்ட சில்ற இல்லையே சார். நீங்க வர்றதுக்குக் கொஞ்சம் முந்திதான் ஒரு ஆள் ஒரேயரு பை வாங்கிட்டு, ஐநூறு ரூவா நோட்டக் குடுத்துட்டு இருந்த சில்றயையெல்லாம் அள்ளிக்கிட்டுப் போய்ட்டார்.”
“சில்ற வேண்டாம் எனக்கு. நீங்க இதப் புடிங்க. ஓ, ஒங்களுக்கு ரயிலுக்கு பஸ்ஸுக்குச் சில்ற வேணுமில்ல. இந்த நூறு ரூவாயையும் வச்சிக்கோங்க. நா நாளக்கி இதே டைமுக்கு வர்றேன்.”
அறநூறு ரூபாயை அதிரடியாய் அலமேலுவுடைய கைகளில் திணித்து விட்டுக் கிளம்பியவன், சொன்னமாதிரியே அடுத்த நாள் திரும்பவும் வந்தான்.
சிநேக பூர்வமாய் அவனை நோக்கி சிரித்தபடி, சார் இன்னிக்கி ஒண்ணா, ரெண்டா, மூணா, நாலா, அஞ்சா, ஆறா என்று அடுக்கிக் கொண்டே போனவளை இடைமறித்து எழுத்தாளன், ஒரு பார்சலை அவளிடம் கையளித்தான்.
“நேத்து நீங்க எனக்கு ஆறு பாக்கெட் குடுத்தீங்க, இன்னிக்கு நா ஒங்களுக்கு ஒரேயரு பாக்கெட் தர்றேன். பிரிச்சிப் பாருங்க.”
பிரித்துப்பார்த்த அலமேலு முகம் மலர்ந்தாள். ஒரு ஜோடி புத்தம் புதிய செருப்பு!
‘நீங்க வெறுங்காலோட வெயில்ல நிக்கிறது எனக்குக் கால் சுடுது. கால்ல போட்டுக்கோங்க ஸிஸ்டர்” என்றான் அவன்.
‘தாங்க்யூ பிரதர்’ என்றாள் இவள். “நாளக்கி நல்ல மேட்டர்ன்னு நேத்து ஒரு புதிர் போட்டுட்டுப் போனீங்களே, இது தானா ?”
“ஐயே, இது சும்மாக் கொசுறு. நல்ல மேட்டரச் சொல்றேன். ஒங்க ரெகுலர் கஸ்டமர்ஸ் வர்றதுக்கு முந்தி சொல்லி முடிச்சிர்றேன். கவனமாக கேளுங்க ஸிஸ்டர்.”
“சொல்லுங்க பிரதர்.”
“எழுத்தாளனாயிருந்து கதை கட்டுரை எழுதறதோட நா அப்பப்ப சமூக சேவையும் செய்றேன். ஸிஸ்டர்.”
“அதாவது, சோஷல் ஸர்வீஸ்.”
“கரெக்ட். நா நேத்து இந்தப் பக்கம் வந்தப்ப நோட் பண்ணினேன். இந்த ரோட்ல ஒங்களப் போலவே இன்னும் எட்டுப் பொம்பளைங்க நொங்கு வித்துக்கிட்டு நிக்கிறாங்க. இதே மாதிரி மெட்ராஸ்ல வேற வேற ஏரியாலயும் நிப்பாங்க.”
“ஆமா, நிக்கிறாங்க. ”
“அத்தனப் பொம்பளைங்களும் ஒங்க ஊர்தானா ?”
“எங்க ஊர்ப் பொம்பளைங்களும் உண்டு, பக்கத்து ஊர்ப் பொம்பளைங்களும் உண்டு.”
“ஆனா, எல்லாரும் அரக்கோணத்லயிருந்து ஒரே ரயில்லதான் வருவீங்க, போவீங்க.”
“பெரும்பாலும் அப்டித்தான்.”
“மொத்தம் எத்தனப் பேர் இருப்பாங்க ?”
“ஒரு இருவது லேடீஸ் இருப்பாங்க.”
“அந்த இருபதுலயும் இளம் பெண், யங் ஆந்த்ரப்ரனர் நீங்க தான் ஸிஸ்டர்.”
“ரொம்ப என்னப் புகழ்றீங்க பிரதர்.”
“நா ஸீரியஸ்ஸாப் பேசிட்டிருக்கேன் ஸிஸ்டர்.”
“ஸாரி பிரதர், மேல சொல்லுங்க.”
“அந்த லேடீஸ்ட்டயெல்லாம் நீங்க பேசுங்க.”
“பேசி ?”
“ஒவ்வொருத்தரும் தனித்தனியாக் கூடைகளச் சொமந்துக்கிட்டு வந்து, தனித்தனியா வெயில்ல நின்னு, தனித்தனியா பிஸினஸ் பண்றத விட, எல்லாரும் சேந்து கூட்டுறவு முறையில், பெரிய லெவல்ல பிஸினஸ் செஞ்சா எப்டி ஈஸியாவும் லாபகரமாயும் இருக்கும்னு அவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க.”
“நானா?”
“நீங்கதான், நீங்களே தான் ஸிஸ்டர். ஒங்களால முடியும். நீங்க யங், நீங்க ஸ்மார்ட். நீங்க டென்ந்த். ஒங்களால மட்டுந்தான் இது முடியும். இந்த ரோட்லயே நீங்க ஒரு கடை போடலாம். நொங்கு மட்டுமில்லாம, பதனி மார்க்கெட் பண்ணலாம். பனங்கிழங்கு ஸீஸன்ல அதையும் விக்யலாம். பனம்பழத்தக் கண்ணாலயே பாத்தறியாத இந்த மெட்ராஸ்க்காரங்களுக்குப் பனம்பழத்த அறிமுகப் படுத்தலாம். இந்த ரோடு ரயில்வேக்காரங்க ரோடு. அகலமான ரோடு, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் ஸ்பேஸ் நெறைய்ய இருக்கு. இங்கயே நீங்க ஒரு கடை போடலாம். ரயில்வேல பேசி, ஒங்களுக்கு ஒரு எடம் ஒதுக்க நாட்ரைபண்ணிப் பாக்கறேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒங்களுக்கு இருக்கா ஸிஸ்டர் ?”
‘இருக்கு பிரதர், எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று நாத் தழுதழுத்தாள் அலமேலு. முகத்தில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளையும் மீறி ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் படர்ந்தன.
ஒளிமையமான எதிர்காலத்தைக் குறித்த புதிய நம்பிக்கையோடு அரக்கோணத்துக்கு ரயிலேறி அலமேலு, அவளுடைய கிராமத்துக்குக் காலிக் கூடையோடு பஸ்ஸில் வந்து இறங்கி, சரளைக் கற்கள் பாவியிருந்த சாலையில் செருப்புக்காலோடு நடைபயின்று கொண்டிருந்தபோது, அவளுக்கு அறிமுகமாயிருந்த ஆண்குரல், ‘அலமேலூ’ என்று பின்னாலிருந்து இரைந்தது.
“நா நேத்து சொன்னத யோசிச்சியா அலமேலூ?”
பார்வையைத் தாழ்த்தி அலமேலு தன்னுடைய கால்களைப் பார்த்தாள்.
வேண்டாம். புத்தம் புதிய செருப்பை இந்த துஷ்டன் மேலே பிரயோகித்துப் பாழ்படுத்த வேண்டாம்.
அலமேலு குனிந்தாள். குனிந்து, சாலையிலிருந்து செம ஸைஸிலிருந்த கல் ஒன்றைக் கையிலெடுத்தாள்.

(நவீன விருட்சம்108 – டிசம்பர் – பெப்ரவரி 2019)