கால தாமதத்திற்கு என்ன இழப்பீடு?/அம்ஷன் குமார்

ரயில் பயணத்தில் ஏற்படும் காலதாமதம் இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் பழகிப்போன ஒன்று.  அதனால் ஏற்படும் சங்கடங்களை நாம் பெரிதாகப்  பொருட்படுத்துவதில்லை.  ஏனென்றால் நம்மால் அது குறித்து எதையும் செய்யமுடியாது என்பதால். ஒருமுறை முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு கோடை விடுமுறை காலத்தில் விடப்பட்ட ஸ்பெஷல் ரயிலில் திருச்சியிலிருந்து புது தில்லிக்கு இருபத்தி நான்கு மணி நேர காலதாமதத்துடன்  சென்ற அனுபவம் எனக்குண்டு. வெளிநாடுகளில் வினாடி துல்லியமாக ரயில் வண்டிகள் வருவதும் புறப்படுவதுமாய் இருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த பிரமிப்பாக இருக்கும்.  ஜப்பானில் அத்தகைய பிரமிப்பு ஏற்பட்டது.  ஆனால் காலந்தவறாமையைப்  போற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிற ஆங்கிலேயர்களின்  அரசாங்க லண்டன் ரயில் போக்குவரத்தும் காலதாமதத்திற்குரியதுதான்  என்பதை நேரில் அனுபவித்தபோது கஷ்டமாக இருந்தது என்பதை விட நஷ்டமாக இருந்தது என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். 
இவ்வளவிற்கும் லண்டன் மெட்ரோ ரயில், பயணிகளின் நலன்களைப் பல கோணத்திலும் பார்த்து நடைமுறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுமியால் லண்டனிலிருந்து ஒருகோடியிலிருந்து மறுகோடிக்கு ரயிலில் சுலபமாகப் பயணம் செய்ய முடியும்.  பயணத்தின்போது தரப்படும் அறிவிப்புகள்,  வரை படங்கள் அட்டவணைகள் ஆகியன பயணத்தை வெகு எளிதாக ஆக்கிவிடும்.  அவற்றையெல்லாம்  ரசித்துக்கொண்டிருந்தகையில்   திடீர் திடீரென ரயில் பயணங்களில் மாற்றங்களை அறிவிப்புகள் மூலம் கேட்கையில் மனம் துணுக்குறும்.. பெரிய அளவில் எதுவும் பாதிப்பு ஏற்படாத வகையில் பயணங்களில் மாற்றங்கள் இருந்தபடியால் அது தந்த சிறப்புகளே என் மனதை நிறைந்திருந்தன. 
ஆனால் ஒரு சம்பவம் என்னைப்  புரட்டிப்போட்டது.

2015 மே மாதம் லண்டனிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோவிற்கு நானும் எனது நண்பரும் ஒன்றாகப் புறப்பட்டோம். எங்களது விமானம் கேட்விக் விமான நிலையத்திலிருந்து காலை 11.05க்கு புறப்படவிருந்தது. கேட்விக் விமான நிலையத்தையட்டியுள்ள கேட்விக் ரயில் நிலையத்தை முப்பது நிமிடங்களில் அடைய விக்டோரியா ரயில் நிலையத்திற்கு 8 மணிக்கு சென்றோம். ரயில் டிக்கெட் விலை நபருக்கு முப்பது பவுண்டுகள். எங்களை பதினெட்டாவது பிளாட்பரத்திற்கு போகுமாறு கூறினார்கள். அங்கே சென்றவுடன் ரயில்வே ஊழியர்கள் உடனே 14ஆம் பிளாட்பாரம் செல்லுமாறு பணித்தனர் ரயில் 8.20க்கு புறப்பட்டது.
ஆனால் ரயில் நடுவழியிலேயே சிக்னல் கிடைக்காததால் நின்று விட்டது. இதோ கிளம்புகிறது இதோ கிளம்புகிறது என்றெல்லாம் அறிவிப்புகள் வந்தனவேயழிய ரயில் நின்ற இடத்தைவிட்டு நகரவில்லை. நேரமாகிக்கொண்டே இருந்ததால் எங்களுக்கு கவலை ஏற்பட்டது. ரயிலிலிருந்து இறங்கி தெருவுக்கு வந்து டாக்ஸி பிடிக்கலாம் என்றால் அதுவும் சாத்தியமில்லை. ஏனெனில் அங்கே இருப்புப் பாதைகளின் இருபுறமும் வேலிகள் போடப்பட்டிருந்ததால் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினால்தான் வெளியே செல்ல முடியும். இறுதியாக ரயில் க்ளாப்ஹாம் நிலையத்திற்கு முக்கிக்கொண்டு வந்து நின்றது. ரயில் திரும்பவும் விக்டோரியா ரயில் நிலையத்திற்கே செல்லப்போகிறது என்ற அறிவிப்பு கிடைத்தவுடன் நாங்கள் அதிலிருந்து இறங்கினோம். அப்போது மணி 10.20. உடனே ஒரு டாக்ஸியில் ஏறினோம். டாக்ஸி விமான நிலையத்தை அடையும்போது மணி 11. விமானம் புறப்படவில்லை. ஆனால் முன்னரே பயண முன்சோதனைகள் முடிந்து விட்டதால் எங்களை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. கட்டாயம் டொரண்டோ செல்ல வேண்டும் என்றிருந்ததால் நாங்கள் அங்கிருந்தபடியே மறுநாளுக்கான விமான டிக்கெட்டை வாங்கினோம். மீண்டும் இதே போன்று நடந்து விடக்கூடாது என்பதால் விமான நிலையத்திற்கு அருகேயுள்ள ஒரு நண்பரின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் குறித்த நேரத்திற்கு அங்கே சென்றோம். பழைய டிக்கெட் ரத்தானதால் வாங்கிய புதிய டிக்கெட்டின் விலை நானுற்று அறுபத்தியெட்டு பவுண்டுகளாகும். அதாவது நாற்பத்திஆறாயிரத்து எண்ணூறு ரூபாய்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் இழப்பு

(விருட்சம் 103வது இதழ் – செப்டம்பர் 2017 )