ஊர்மிளா/பானுமதி.ந

ஊரே புதிதாகிவிட்டது.  எங்கும் வண்ணத் தோரணங்களும், தென்னங்கூந்தல்களும், பட்டு விதானங்களுமாகக் கண்களைக் கவருகின்றன. கூத்தும், பாட்டும் களைகட்டுகின்றன. இலை மடக்குகளில் ஆவியெழும் கோதுமை அப்பங்களையும், தெள்ளரிசி புட்டினையும், கதலிகளையும் வாங்கிக்கொண்டே மக்கள் நிழல் தரும் விதானக் கூரைகளின் கீழே குழுமி உண்கிறார்கள்.
எங்கிருந்துதான் இத்தனை மலர்கள் வந்தன?               ரோஜா, சாமந்தி, மல்லி, முல்லை, தும்பை, துளசி, அரளி, வில்வம், பவழமல்லி, தாமரை, தாழம் பூ, நாகலிங்கப் பூ, மனோரஞ்சிதம், செண்பகம், மருதோன்றி, மருக்கொழுந்து ஊரே மலர்களின் வாசத்தால் தேவர்களையும் அழைத்து வந்துவிடும் என ஊர்மிளை நினைத்தாள். மறுபக்கம் பார்த்தால் கனிவகைகள் வானை எட்டுவதுபோல் குவிந்து கிடக்கின்றன. அவரவர் விருப்பமானவற்றை எடுத்து சுவைக்கிறார்கள்.  பச்சை உருமால் கட்டிக்கொண்டு வணிகர்கள் ராஜ வீதியையட்டிய சாலை ஓரங்களில் முத்து, பவழம், கோமேதகம், மரகதம், மாணிக்கம், வைரம், வைடூரியம் என அடக்க விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இளங்காளைகள் கன்னியரைக் கவரும் முனைப்புடன் வீர நடை  போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  மிகச் சிறந்த அலங்காரங்களுடன் பெண்கள் அவர்களைப் பார்த்தும், பாராததுபோல் ஆற்றுப் படுகையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இன்று காமன் திருவிழாவுடன் அவர்கள் அன்பிற்குரிய இராமன் பட்டம் சூடி அமர்ந்த பெருவிழாவும் சேர்கிறது. அவர் அரியணை அமர்ந்ததிலிருந்து ஏழு நாட்களாக இதே கோலாகலம்தான். இராமன் இன்று சீதையுடன் அயோத்தி மக்களை சரயு நதிப் படுகையில் சந்திக்கிறார். மக்களின் உற்சாகத்திற்குக் கேட்பானேன்?
‘இன்று இரவு முதல் ஜாமத்தில் வருவேன். நாம் படகில் உல்லாசமாகச் சென்று வரலாம்’ என்று இலக்குவன் சொல்லிச் சென்றதிலிருந்து ஊர்மிளைக்கு நிலை கொள்ளவில்லை.  எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன ஒருவரை ஒருவர் பார்த்து?  தனிப் படகா? என கேட்கத் தவறிவிட்டோமே என அவள் வருந்தினாள்.  அக்காவும், அவள் கணவனும் இவரைத் தனியாகவே விடமாட்டார்களா எனக்கூட அவளுக்குத் தோன்றியது.  ஆக்கப் பொறுத்தோம், ஆறப் பொறுக்க முடியாதா என தன்னையே வினவிக்கொண்டு ஆடியில் பார்த்துக்கொண்டாள்.    நன்றாகத்தான் இருக்கிறேன்.  அவருக்குப் பிடித்த நிறத்தில் சேலை, ஆபரணங்கள்.
வானில் மதி எழுந்துவிட்டது.  தன் பிரிய ரோகிணியுடன் அவன் மலர்ந்து சிரிக்கிறான்.  ஆனால், அவன் ஒளியில் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.  இந்த நியதி ஏன் ஏற்பட்டுள்ளது? அவர் தொலைவில் உள்ள ரோகிணியா? நான் தேய்ந்து வளரும் நிலவா? கூடி இருப்பதுபோல் வெறும் தோற்ற மயக்கங்களா? பதினாங்கு ஆண்டுகள்.  .உண்மையிலேயே நான் உறங்கிக் கொண்டாயிருந்தேன்? அதுதான் முடிந்துபோயிற்றே,  ஏன் அவர் இன்னமும் வரவில்லை? ஒருக்கால், இரவின் முதல் ஜாமத்தில்,  படகில் என்று அவர் சொன்னதாக நானே கற்பனை செய்துவிட்டேனோ?  என் ஆசைகளை கிளறி விட்டுவிட்டு மறைவது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.
‘தேவி’ என்று இலக்குவன் குரல் அவளை அழைத்தது.  ‘தேவியென்ன தேவி,  பெயரைக் கூட மறந்துவிட்டார் போலும். ஒருக்கால் வேறு யாரேனும் வந்திருக்கிறார்களோ?’
அவள் நினைத்ததும் சரிதான்.  .ஒளி பொருந்திய முகத்தோடு, தூய துவராடையில் கருணை ததும்ப ஒரு மூதாட்டி இலக்குவனுடன் வந்திருந்தார். அவர் காலில் விழுந்து வணங்கிய ஊர்மிளாவை, “பூரண நிலவென வாழ்க,” என்று அவர் வாழ்த்தினார்.
திகைப்பும், குழப்புமாக அவள் கணவனைப் பார்த்தாள்.         “தேவி, இவர், அகலிகை, ஆம் அதே அகலிகை. உன்னைச் சந்திக்க வந்திருக்கிறார். நான் ‘நித்ரா’தேவியிடம் கொடுத்த வாக்கை இப்பொழுது நிறைவேற்ற வேண்டும். என்னை மன்னித்துவிடு.”
கொதிக்கும் உள்ளத்துடன் அவள் அவனைப் பார்க்கையிலேயே அவன் மஞ்சத்தில் துயின்று விட்டான். மனைவியின் காதலும், தாயின் பரிவுமாக அவள் மனது கடைந்தது. முடிவில் ஆற்றாமையில் அவள் கண்களில் நீர் மல்கியது. அகலிகை அவளை அணைத்துக் கொண்டாள்.
“அழாதே, மகளே! இது வினைப்பயன்.”
‘‘என்ன வினை? யார் செய்தது?’’
“நீதான், ஊர்மிளா”
‘‘என்னது, நானா?’’
“நீ அவன் உறக்கத்தைப் பெற்றுக்கொண்டாய்.   இப்பொழுது அவன் உன் தூக்கத்தை.”
‘‘இல்லை, அப்படியல்ல அவர் சொன்னது. அண்ணனுடன் காட்டுக்குப் போன அன்று இரவு உறக்கத்தின் தேவதை அவரை அணுகியது. ஒரு ஒப்பந்தத்தின் பேரில் நான் இடைவிடாது பதினான்கு ஆண்டுகள் அவருக்காக உறங்கினேன். வனவாசம் முடிந்த பிறகு இந்த உறக்கம் மீள்வது ஏன்?’’
“அப்போ, உன் பங்கு தூக்கம் என்னாயிற்று?”
‘‘பகல் பொழுதின் தூக்கம் எனக்கானது, இரவு அவருக்கானது.’’
“இல்லை, மகளே, நீயே சிந்தித்துப் பார். நாலு நாட்கள் இரவில் தூங்காதிருந்தால் நாம் உறக்கத்தின் வசம் வீழ்ந்துவிடுவோம். ஆனால், நீ அவனாகவே அந்த நாட்களில் தூங்கியிருக்கிறாய். உனக்கான தூக்கத்தை அவன் எடுத்துக்கொண்டுவிட்டான்.”
‘இல்லை, இது நேர்மையில்லை. மரக் கட்டையாகக் கிடந்தவளுக்கு தெய்வங்கள் செய்யும் அநீதி.’
‘நீ மரமாகக் கிடந்தாய்; நான் கல்லாக.’
வெறி பிடித்தவள் போல் ஊர்மிளா சிரித்தாள். அவள் உள்ளே குமுறிய இயலாமையும், கசப்பும் வார்த்தைகளாய் வெடித்தன.
‘‘நீங்களும், நானும் ஒன்றா? நீங்கள் கல்லாக ஆனது உங்கள் காமத்தால்; நான் உணர்வற்ற கட்டையெனக் கிடந்தது காதலால்.’’
“சொல். நீயும் சொல்; சொல்லாதவர் யார் இந்த உலகில்?’’
‘‘உண்மை உங்களைச் சுடுகிறது.’’
“இல்லை மகளே. உணர்வுகளோடு வாழ்ந்தவருக்குத்தான் அந்தந்தக் கணங்களின் உண்மை புரியும்.”
‘‘நேரடியான பதிலில்லை இது.’’
“சரி, நீ அரசகுமாரி. இளவரசியாகப் பிறந்தவள்; அரண்மனையில் வாழப்புகுந்தவள். ஒரு நாளின் எத்தனை நாழிகைகள் நீ அவருடன் இருந்திருப்பாய்? உன் எத்தனை தேவைகளை அவர் அறிந்திருப்பார்? அவரின் எத்தனை செயல்களில் நீயும் பங்கேற்றிருப்பாய்?”
‘‘இது ஒரு அளவீடா?அவரை நான் மறந்ததுமுண்டா?’’
“சரி, இதையே திருப்பிக் கேட்டுப்பார். அவன் உன்னை எப்பொழுதெல்லாம் நினைத்தான் என்று?”
‘அன்பு, காதல் என்பதெல்லாம் சமன் செய்யும் கணக்கு அல்ல.’
“நல்லது. நம்மை இப்படி நம்ப வைத்த ஆண்களைப் போற்றுவோம்!  துலாத்தட்டுக்கள் சமமாகத்தான் இருக்க வேண்டும் பெண்ணே! ஏறு மாடுகள் ஏறத்தாழ இருந்தால் நிலம் உழுதல் என்னாகும்?”
‘‘அப்படியென்றால்?’’
“ஊர்மிளா. நான் காட்டில் வாழ்ந்தவள். மிக எளிமையாக இருக்கத் தெரிந்தவள். இயற்கையின் பருவ விளையாடல்களை இரசித்தவள். அவற்றினூடாக மனமும், மணமும் வளர்த்தவள். என்னை விட மிக முதிர்ந்தவரை மணம் செய்ய  நேர்ந்ததில் வருந்தாதவள். அவரிடத்தில் எனக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தன. அறிவை வளம் படுத்தும் ஆசானாகவும், விளையாட்டுத் தோழனாகவும், காமக் களியாட்டுக் கணவனாகவும்  அவர் இருக்க வேண்டுமென எனக்குக் கனவுகள்.  ஆனால், நான் ஒரு பணிவிடைப் பெண்ணாகத்தான் பார்க்கப்பட்டேன். ஆனால், அதையும் காதலுடந்தான் செய்தேன். எதிலும் குறைவைக்கவில்லை; எப்பொழுதும் சோம்பியதில்லை.”
‘ஓ..’
“என் கனவுகள் பின்னிப்பின்னி ஒரு நிஜ உருவத்தை ஏற்படுத்தின. அதிலும் இவரே கணவர். ஆனால், அழகர், அன்பானவர், காட்டின் செய்திகளையும், நாட்டின் செய்திகளையும் சிரிக்கச்சிரிக்கச் சொல்பவர்.  காட்டின் உள்ளே அழைத்துச் சென்று நான் அறியா கனிகளைப் பறித்து இருவருமாக அவற்றை உண்போம், தன் ரிஷி நண்பர்களின் குடில்களுக்கு என்னையும் அழைத்துச் செல்வார் என்றெல்லாம் எத்தனை மனக்கோட்டைகள்!”
‘‘இவைகள் பெரும் ஏமாற்றமாகக் கூட இருக்கட்டும்! ஆனாலும், இந்திரனை நெருங்க விட்டிருக்கலாமா நீங்கள்?’
“ஊர்மிளா, நான் முன்னரே சொன்னேன்.  அழுத்தமான கற்பனைகள் ஒருபுறம்; உணர்வுகள் ஒருபுறம். அத்தனையையும் மீறிய தேவை என ஒன்றிருக்கிறது. நீ யாழ் வாசித்திருக்கிறாய் அல்லவா? முறுக்கேற்றி நரம்புகளை விண்ணென்று அதிர வைத்து சுதி கூட்டி அப்படியே வைத்துவிட்டால், சுதி கலையாமலே எப்போதும் அப்படியே இருக்காது, மகளே. மீண்டும் சுதி அமைக்கும் கைகளில் இராகம் எனப் பொங்கிவிடும்.”
“அழகாகப் பேசுகிறீர்கள். ஆனால், ஒழுங்கு மீறலை நியாயப்படுத்த முடியுமா?”
“முட்டாளே!  நீ யாழில்லையடி! உன் உடம்பில் உனக்கு முதல் அதிகாரமில்லயா? கற்பென்பது உடல் சம்பந்தப்பட்டது என்பது பெரும் அபத்தம்.  நான் கற்பித்துக் கொண்ட அந்தப் புனைவோடுதான் நான் புனைந்தேன்.  அதில் தவறொன்றுமில்லை.”
‘‘பின் ஏன் கல்லாகிக் கிடந்தீர்கள்?’’
“அதன்பின் நான் யாரை தண்டிக்க வேண்டும்? எவரையுமில்லை அல்லவா? என் கற்பனைக் காட்சி முடிந்த பின்னர் எனக்கு வேறு நிறைவு வேண்டுமா என்ன?”
‘பின் ஏன் எழுந்தீர்கள்?’
அகல்யா சிரித்தாள். “பெண்ணே! கல்லும் அசைபோடும்; அதில் திளக்கும்; பின்னர் வானத்தில் ஆடும் மயில், குயிலெனத் தோன்றுகையில் முழுதுமாக எல்லாவற்றையும் கடந்துவிடும்.”
‘‘இவர் இப்படி உறங்கினால்..’’
“துருவக் கரடிகளைப் பற்றி அறிந்திருப்பாய்.  அவை மிகக் குளிரில் பல மாதங்கள் உறங்கிவிடும்; ஏனெனில் அந்த மாதங்களில் அவை உண்ண உணவு கிடைக்காது. உறங்குகையில் சக்தியும் அதிகம் தேவைப்படாது. நீ கும்பகர்ணன் உறங்கியதைப் பற்றியும் அறிந்திருப்பாய்.  பெண்ணெனப் பிறந்துவிட்டாய். அரண்மனையின் கட்டுக்கோப்பில் வாழ்கிறாய்.பொறுத்திருக்க உனக்குத் தெரியும். வேறென்ன நான் சொல்ல?”

(103வது இதழ் செப்டம்பர் 2017)

One Comment on “ஊர்மிளா/பானுமதி.ந”

  1. அருமை! அருமை!! அற்புதமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்! நச்சென்ற கருத்துகள்! Super presentation. Congratulations.👏👏

Comments are closed.