வாசலில் வந்து நிற்கிறதுவிரட்டப்பட்ட கனவு/மா. காளிதாஸ்

முதலில் ஒரு செம்பு தண்ணீர் கொடு
அதன் தொண்டைக்குழி
நனையும் சத்தம் கேட்கிறதா?

கைகளை ஆதுரமாகப் பற்றித்
திண்ணையில் அமர வை
வீடு முழுக்கப் பரவுகிறதா
குளிர்ந்த நிழல்?

எங்கிருந்து வருகிறாயென
வாஞ்சையோடு கேள்
ஊற்றுக்கண் ததும்பும்
ஒரு பாடல் ஒலிக்கிறதா?

கன்னத்தில் கை வைத்து
நெற்றித் தழும்பைத் தடவிக் கொடு
இரவின் பொருக்கு உதிர்கிறதா?

கேள்விகளேதும் கேட்காமல்
சற்றுநேரம் கண்ணயர விடு
குறட்டையாக வருகிறதா
நிம்மதிப் பெருமூச்சு?

வழக்கமான பணிகள் தொடர்ந்த பின்
வந்து பார்
ஒரு பூ மலர்ந்து கிடக்கிறதா?

தயங்காமல் தலையில் சூடி
திரியைத் தூண்டு.

திண்ணையாய் விரிந்து
மடியில் உன் தலைகோதுவது
வேறு யாருமில்லையென
நீயே உணர்வாய்.

One Comment on “வாசலில் வந்து நிற்கிறதுவிரட்டப்பட்ட கனவு/மா. காளிதாஸ்”

  1. என் கவிதையை வெளியிட்ட விருட்சம் இதழின் ஆசிரியர் கவிஞர் அழகியசிங்கர் அழகியசிங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    – மா. காளிதாஸ்

Comments are closed.