நயாகரா ஆறும், கிரேட் ஜார்ஜ் ரயில்வேயும்! (கனடா -2)/ஜெ.பாஸ்கரன்

சின்னப் பெண் வீட்டிலிருந்து ஒரு மணி நேரக் கார்ப் பயண தூரத்தில் இருக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி! ஒரு சனிக்கிழமை மதியம் சென்று வந்தோம். முன்னமேயே பார்த்திருந்தாலும், நயாகரா பார்க்காமல் கனடா பயணம் நிறைவாய் இருக்காது என்பதால் இம்முறையும் சென்றோம்.

முதலில் White water walk (வெண்மை நிற நீர் நடைபாதை) சென்றோம்.

நயாகரா ஆறு கனடாவின் மேற்கே மானிடோபா எல்லையிலிருந்து, அமெரிக்காவின் வடக்கு மினிசோட்டா வரை பாய்கின்றது. ‘எர்ரீ’ ஏரியிலிருந்து வெளிவரும் நீர் அதைவிடத் தாழ்வான இடத்தில் அமைந்துள்ள ஒண்டாரியோ ஏரியில் வந்து சேர்கிறது. நொடிக்கு சுமார் 200,000 கன அடி நீர் பாய்கின்றது. இதில் பாதி அளவு நீரில், சுற்றுப்புறம் மாசு படாமல், 40 லட்சம் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மீதி பாதி நீர் 35 அடி ஆழமான நதியாகப் பள்ளத்தாக்கில் பாய்கின்றது. ஆற்றில் நீர் மணிக்கு சுமார் 48 கி.மீ. வேகத்தில் பாய்வதாக, ஒரு குறிப்பு உள்ளது. இந்த வேகத்தில் நீர்ச் சுழல்கள் 15 முதல் 38 மீட்டர் ஆழத்திற்கு உருவாகின்றன.

நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்த தண்ணீர், கீழே ஒரு பள்ளத்தாக்கில் ஆறாகப் பாய்ந்தோடுகின்றது. ஆற்றின் கரையில், சுமார் இரண்டு கி.மீ தூரத்திற்கு அழகான மரப்பாலம், தகுந்த பாதுகாப்புத் தடுப்புகளுடன் உள்ளது. மேலே சாலையிலிருந்து, ஒரு லிஃப்டில் கீழே சுமார் 500 அடிக்கு இறங்கி, ஒரு அழகான உலோகக் கூண்டுக்குள் நடந்து, வெளியே மரப்பாலத்திற்கு வர வேண்டும்! வலது கைப்புறம் நயாகரா ஆறு, சலசலப்புடன்,சுழித்துச் செல்லும் அழகைப் பார்த்தபடி நடக்கலாம். அண்ணாந்து பார்த்தால், இரண்டு புறமும் பாறைகள் – தூரத்தில் மேலே கரைகளை இணைக்கும் பாலம்!

ஆற்றினைப் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு குறிப்பு: 1935 ஆம் ஆண்டு, பள்ளத்தாக்கில் ஏற்பட்ட உடைப்பில் சுமார் 5000 டன் பாறைகளும், கற்பலகைகளும், நீரும் வெளியே பாய்ந்து, அப்போது புழக்கத்திலிருந்த ‘கிரேட் ஜார்ஜ் ரயிவே’ போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்ததாம்! உல்லாசப் பயணிகள் கார்களில் வருவது அதிகரிக்க, நிதி நிலைமையும் குறைய, கிரேட் ஜார்ஜ் ரயில்வே போக்குவரத்து முற்றிலுமாக அழிந்ததாம்!

நீர் ஏன் பச்சை நிறத்தில் உள்ளது? ஆற்றின் மேல் செல்லும் ‘ஏரோ கார்’ வசதி, நீர் வாழ்ப் பிராணிகள், மீன்கள் பற்றியும், நயாகரா பள்ளத்தாக்கின் பாறைகள், அதிலிருக்கும் உப்புகளின் தன்மை பற்றியும், அங்கு வீர சாகசங்கள் புரிந்த வீரர்களைப் பற்றிய விபரங்களும் போஸ்டர்களாக மாட்டி வைத்துள்ளனர்.

அறுபது வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள், கையில் காமெராவுடனும், செல் ஸ்டிக்குகளுடனும் சுவாரஸ்யமாக நடந்துகொண்டிருந்தனர். இளம் ஜோடிகளுக்கும் குறைவில்லை. வாங்குகின்ற டாலர்களுக்கு, ஏமாற்றம் இல்லாமல் டூரிஸ்ட் இடங்களைப் பராமரிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

செல் நிரம்பப் படங்களுடன், வந்த வழியே திரும்பினோம். லிஃப்டில் ஏறி வெளியேறுமுன் இருந்த ‘சொவுனீர்’ ஸ்டோரில் விலைகளை மட்டும் பார்த்துவிட்டு, வெளியே வந்து, காரில் இரண்டு கி.மீ பயணித்து, நயாகரா நீர்வீழ்ச்சியின் பின் புறம் வந்தோம்.

கனடா பக்கம் இருக்கும் நயாகரா அருவி – ஹோஸ் ஷூ ஃபால்ஸ் (குதிரை லாட வடிவ அருவி) எனப்படுகிறது. அது மொத்த அருவியில் மூன்றில் இரண்டு பங்கு அளவுள்ளது. மீதி அமெரிக்கா பக்கம் இரண்டு அருவிகளாக விழுகின்றது.
56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது நீர்வீழ்ச்சி. அருவியின் 85% கனடாவிலும், மீதி அமெரிக்காவிலும் விழுகின்றது. நொடிக்கு சுமார் ஆறு மில்லியன் கனஅடி தண்ணீர் விழுகின்றது. நயாகராவில் அமெரிக்காவையும், கனடாவையும் இணைக்கும் பாலம் ‘வானவில் பாலம்’.

பிளாஸ்டிக் உடையில், நயாகராவின் சாரல் உடலையும் மனதையும் நனைக்க, படகில் அருவியின் அருகில் சென்று வருவது “மெயிட் ஆஃப் த மிஸ்ட்” எனப்படும். 167 அடி உயரத்திலிருந்து ஆர்பரித்துக் கீழே பாயும் அருவியின் அழகைப் பார்த்தபடி, கைகளும் கால்களும் சில்லிட, செல்போன் வழுக்கி விழுந்துவிடும் பயத்துடன் அந்தப் படகுகளில் பயணிப்பதும், கண்களை எடுக்காமல் அருவியைப் பார்த்தபடி நிற்க, படகு மிக அருகில் சென்று திரும்புவதும் மறக்க முடியாத அனுபவம்தான்!

இளம் வெயில் காய்ந்துகொண்டிருந்தது. நடந்து செல்கையில் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு நயாகராவின் சாரல் மேலே சில்லென்று விழுந்துகொண்டிருந்தது. அழகிய சாலைகள், வானளாவிய கட்டடங்கள், பச்சைப் புல்வெளிகள், பூச்செடிகள், சாரலினால் அந்தரத்தில் அருவியின் மேல் அழகிய வானவில் என மிகவும் ரம்யமான சூழல்!

நயாகராவின் பின்புறம் பாறைகளைக் குடைந்து பல கல் டன்னல்கள் அமைத்திருக்கிறார்கள்! பிளாடிக் உடையில், படிகளில் இறங்கி, டன்னல்களில் நடந்தால், நயாகராவின் பின்புறம் நாம் இருப்போம். கண் முன் புகை போல நீர்வீழ்ச்சி.
இதற்கு “Journey behind the falls” என்று பெயர் வைத்திருக்கிறார்கள் – பொருத்தமான பெயர்தான். டன்னல்களில் சுமார் 650 அடிகள் நயாகராவிற்குப் பின்னால் நடந்து செல்கிறோம், இது கனடா பக்கம். அமெரிக்காவின் ’Goat Island’ வரை செல்லும் இப்பாதை 2200 அடிகள் வரை நீள்கிறது!

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி, பிரிய மனமில்லாமல் நடந்து வந்தோம். உடைகளில் ஈரமும், மேலே தூவும் சாரலும், வானவில்லும் கூடவே வந்துகொண்டிருந்தன!

எத்தனை மனிதர்கள், எவ்வளவு மகிழ்ச்சி – இயற்கையைப் போற்றிப் போற்றி வியந்து விழும் மனிதர்கள்!

கனடா பக்கம் அருவியின் முன் தோற்றம் அற்புதமானது. அமெரிக்காவில் அருவியின் பக்கவாட்டுத் தோற்றம் தெரிகிறது. ஒரு எல்லைக் கோட்டினால் மனிதனால் பிரிக்கப்பட்டுள்ள நாடுகளின் மக்கள், இயற்கையின் நயாகரா நீர்விழுச்சியினால் மகிழ்ச்சியுடன் இணைந்திருப்பதை, இரண்டு பக்கங்களிலிருந்தும் காணலாம்!

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை முக்கால் மணிநேரப் பயணம் செய்து, அங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்றோம். எல்லா கோயில்களையும் போல அங்கும் பாபா ஆராதனை சிரத்தையுடன் செய்யப்படுகின்றது. வெளியே வந்து பார்த்தபோது, ISKON vedic educational and cultural centre (வேதம் குறித்த கல்வி கலாச்சார மையம்) – A.C.பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் தொடங்கியது என்ற குறிப்போடு இருந்தது. மேலும் பீல் ஆர்ய சமிதி (வேதக் கலாச்சார மையம்), ‘Yog Vedaant Seva Samiti, ஶ்ரீ மாரியம்மா மந்திர் (ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்), பதஞ்சலி ஸ்டோர் என அந்த வளாகம் நிரம்பியிருந்தது. வளாகத்திற்கு மிக அருகில், ஶ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம் – ஒரே கோயிலில் எல்லா சன்னதிகளும் – இருந்தது. நம்ம ஊர் வழக்கப்படி, கோயிலில் அர்ச்சனை ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அந்த ஞாயிறு காலை ஒரு மினி ஆன்மீக டூர் ஆக அமைந்தது!

இந்த தேவஸ்தானம், இலங்கைத் தமிழர்கள் அதிகமாக பங்கேற்கும் ஆன்மீகத் தலமாகத் தெரிகிறது. இங்கு, ‘உலகத்தமிழர்’, ‘உதயன்’ போன்ற வாரப் பத்திரிகைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. செய்திகள், இலக்கியக் கட்டுரைகள் என ஒரு பல்சுவை இதழாக, நிறைய விளம்பரங்களுடன் வெளிவருகின்றன. இது பற்றி பின்னொரு பதிவில் பார்க்கலாம்!

.