மௌனி தாத்தா ஒரு எழுத்தாளரா?/சாரு நிவேதிதா

‘புதுமைப்பித்தன் நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?’ கட்டுரை படித்தேன். நம் சமூகம் படைப்பாளிகளை அவரவர் காலத்தில் புறக்கணிப்பது தொடர்பாக மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

காந்தி சென்னைக்கு வந்தபோது பாரதி அவரைச் சந்திக்கிறார். அப்போது உடனிருந்த ராஜாஜியிடம் காந்தி சொல்கிறார், “இவர் உங்கள் மொழியின் சொத்து. இவரைக் கவனமாகப் பராமரியுங்கள்!”

இவ்வளவுக்கும் பாரதி அவரிடம் பேசியது ஒரே வாக்கியம். காந்திக்கு ஒரு இலக்கிய மேதையைக் கண்டுகொள்ளும் உள்ளுணர்வு இருந்தது. ஏனென்றால், அவர் டால்ஸ்டாய், ஹென்றி டேவிட் தோரோ, தாகூர் போன்ற மேதைகளோடு உறவாடியவர். தாகூரை குருதேவ் என்று அழைத்தார். ஆனால், பாரதி அவர் காலத்தில் வாழ்ந்த முக்கியஸ்தர்களால் அப்படிக் கவனிக்கப்பட்டாரா? உ.வே.சாமிநாத அய்யரே பாரதியைப் பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை. புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ கதைக்காக ராஜாஜி அவரைத் தாக்கி எழுதியதோடு அல்லாமல், அவருக்கு அறிவுரையெல்லாம் சொல்லி எழுதினார். இவை தனிப்பட்ட மனிதர்களின் தவறு அல்ல. எழுத்தாளர்களைப் பற்றி அறிந்துகொள்ளாத ஒரு சமூகத்தின் அவலம்.

அடிப்படையில் எழுத்தாளர்களுக்குத் தமிழ்ச் சமூகத்தில் எந்த அடையாளமும் இல்லை. நம் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ஒரு எழுத்தாளருக்கு அந்த மாநிலத்தின் உயர்ந்தபட்ச விருதைக் கொடுத்தது அரசு. அதை எப்படிக் கொடுத்தது? எழுத்தாளரின் வீடு தேடிப் போய்க் கொடுத்தார் மாநில முதல்வர். காரணம், எழுத்தாளன் என்றால் அங்கே ஆசான்! மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் இந்திய மரபு. அப்படிப்பட்ட குரு ஸ்தானத்தில் இருப்பவர் எழுத்தாளர். தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது நிலைமை?

எழுத்தாளர்களில் பல குழுக்கள் உண்டு. அதெல்லாம் அவர்களின் கொள்கை, கோட்பாடு சம்பந்தமானது. அவர்களுக்குள் பல கடுமையான கருத்து மோதல்களும் உண்டு. ஆனால், எல்லா குழுக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சிகர சாதனையாளர்கள் சிலர் இங்கே உண்டு. அசோகமித்திரன் நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று அநேகமாக எழுத்தாளர்கள் அனைவருமே எழுதிவிட்டார்கள். எழுதி என்ன பயன்? சமகாலத் தமிழ்ப் பொதுச் சமூகத்தில் அசோகமித்திரனை எத்தனை பேருக்குத் தெரியும்?

என்னுடைய நண்பர்களில் ஒருவர் ஸ்ரீராம். நாய்கள் நலம் பேணுவதில் நாங்கள் ஒன்று சேருவோம். நான் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய முன்னோடிகள் குறித்த கட்டுரைக்காக ஒருமுறை அவரோடு பேச வேண்டியிருந்தது. அவர் மௌனியின் பேரன். அப்போது குறுக்கிட்ட ஸ்ரீராமின் புதல்வி (பள்ளி மாணவி) “நம் தாத்தா ஒரு எழுத்தாளரா?” என்று கேட்டாள். மௌனி யார்? புதுமைப்பித்தனால் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று குறிப்பிடப்பட்டவர். இப்படிப்பட்ட சூழலுக்கு அந்தச் சிறுமியை நான் குறைகாண முடியாது. ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் இந்தச் சூழலுக்காகப் பொறுப்பேற்க வேண்டும்!

  • சாரு நிவேதிதா, எழுத்தாளர். தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

நன்றி: இந்து தமிழ் திசை