இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
செவ்வாய்க்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
திருமணம் ஆகி
வருடங்கள் ஐம்பது
திரும்பிப் பார்க்க
நேரமின்றி; நிற்காமல் ஓட்டம்
பிள்ளைகள் தனக்கு
தனி மனை ஆக்கிக் கொண்டனர்.
தம்பி தங்கையும் அவ்வாறே!
எவருக்குமே குறுஞ்செய்தி இடக் கூட
நேரமில்லை;
நாங்கள் ஓடிய ஓட்டம்
இன்று அவர்கள் ஓட
நாங்கள் ஒரு ஓய்ந்த
பார்வையாளர் மட்டுமே.
வாழ்வில்
மேடு பள்ளம்; ஏற்றம் இறக்கம் பார்த்தாகி விட்டது
சண்டை சச்சரவுக்கு குறைவில்லை!
கண்ணீர் மழையில் நனைந்தாயிற்று
மகிழ்வின் உச்சியை தொடாமலா!
ஆத்திரம், ஆற்றாமை;
இல்லாமை; இயலாமை;
எல்லாம் கடந்து,
வாழ்வின் மாலை நேரத்தில் இருக்க;
மெலிதாய் ஒரு அச்சம்;
எங்களுக்கே ஒரு ஆச்சரியமாய் எங்கள் முன்
ஒருவர் இல்லாமல்
இன்னொருவர் இருக்க இயலுமா?
இலக்கியத்தில் மட்டும் வாழ்ந்த அன்றில் பறவைகளா நாம்?
உயிர் போயும்
உடம்பு இருக்கும்.
உயிரோடு உற்ற
அறிவு மறைய காத்திருக்கும்.
காலம் சொல்லும்
பதிலுக்குக் காத்திருக்கோம்!
நாள் என்று;
என பார்த்திருக்கோம்!
மெலிதாய்
தயக்கத்துடனும்; அச்சத்துடனும்;
ஏற்றுக்கொள்ள சிறு வெட்கத்துடனும்.
19-12-2023
