வாசுதேவன்
மேற்கத்திய இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் இவரும் முக்கியமானவர்.
அவரிடம் நேரிடையாக கல்லூரியில் படிக்கவில்லையென்றாலும் வளாகத்திற்கு வெளியே எனக்கு பல ஆசிரியர்கள் உண்டு. அவர்களில் இவரும் ஒருவர்.
இவருடைய முதல் நாவல்” தருநிழல்” (காலச்சுவடு பதிப்பகம்) எந்தவித மேற்கத்திய தாக்கமும் இல்லாமல் எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளது.
அவர் நினைத்திருந்தால் சர்ரியலிசம், மாய எதார்த்தம் என உத்திகளோடு எழுதியிருக்க முடியும். எந்த பாசாங்கும் இல்லாததுதான் இந்த நாவலின் தனிச்சிறப்பு.
60 – 70 உலகளவில் ஒரு கொந்தளிப்பான காலக்கட்டம். தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. திராவிடம், மார்க்சியம், காந்தியம் என பல சித்தாந்தங்கள் இளைஞர்களிடம் தாக்கம் பெற்ற காலம்.
இந்த நாவலில் சந்திரன் என்ற இளைஞனின் வாழ்க்கையை சித்திரிக்கப்பட்டுள்ளது.
சந்திரனின் தந்தை குடும்பத்தை காப்பாற்ற பட்ட பாடு, எளிய மத்தியதரவர்க்க கிராமப்புற குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், முதன்முறையாக பட்டதாரி ஆகும் இளைஞன், கல்லூரியில் இளைஞனின் நண்பர்கள், ஆசிரியர்கள், அரசாங்க வேலை என நேர்க்கோட்டு பாணியில் வாழ்வனுபவங்களை விவரித்தாலும் அடிநாதமாக அரசியல் இழையும் இந்த நாவலில் உண்டு.
காந்தியமும், மார்க்சியமும் சந்திரனை கவர்ந்து இழுக்கின்றன. கூடுதலாக இலக்கிய பரிச்சயம். கல்லூரி கால மார்க்சிய நண்
பன் இயக்கத்தில் இணைகிறார்.. மிக சுவாரஸ்யமான நாவல். ஒரு வகையில் சந்திரனாக என்னை உணர்ந்தேன். பல சம்பவங்கள் நான் எதிர்கொண்டமாதிரியே இருந்தன. தமிழ்நாட்டின் ஒரு காலக்கட்டத்தை எந்த பாசாங்கும் இல்லாமல் சித்திரித்துள்ளது சிறப்பு. எந்த இடத்திலும் மிகை உணர்ச்சி இல்லை. தள்ளி நின்று சம்பவங்களை விவரித்தது அழகு. கடந்த காலத்தின் மேல் ஏக்கமும், வருத்தமும் இல்லாமல்
எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. 70 -80 களில் கல்லூரி படித்தவர்களை இந்த நாவல் நிச்சயம் கவர்ந்திழுக்கும். வாசிக்கவேண்டிய சுவாரஸ்யமான நாவல்!
