அந்த நாள் ஞாபகமாக.!

ஆர்க்கே

பல வருடங்களுக்கு முன் தூர்தர்ஷன் தொடர் ஒன்றில் நான் தியாகையராக நடித்தேன்.

காட்சிப்படி நான் சிஷ்யர்களுக்கு சொல்லித் தரும் இரண்டு கீர்த்தனைகளுக்கு( எந்தரோ மகானுபாவுலு, மனசு நில்ப பக்தி) பின்னணி பாடிய இரண்டு greats சேஷகோபாலன் அவர்களும் (அவர் சிஷ்யர்) நெய்வேலி சந்தானம் அவர்களும். இந்த மூன்று வாரத் தொடரில்–funded programme- வி கோபாலகிருஷ்ணன், ஒரு விரல் கிருஷ்ணா ராவ், T. ராஜேந்தரின் “தங்கைக்கோர் கீதம்” நாயகன் கங்கா, ஜி. சீனிவாசன்(புலியூர் சரோஜாவின் கணவர்,குணசித்திர நடிகர்) இன்னும் பலர் நடித்தனர். கங்கா கோபால கிருஷ்ண பாரதியாக நடித்தார். தொடரின் பெயரும் “கோபால கிருஷ்ண பாரதியார்”தான்.
Funded programme என்பதால் சில முறை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. காட்சியமைப்பின் படி என்னைச் சந்தித்து விட்டு-அதாகப்பட்டது தியாகையரை சந்தித்துவிட்டு சிதம்பரம் கோவிலுக்குச் செல்லும் கோபால கிருஷ்ண பாரதி தியாகையர் கேட்ட கேள்வியை(அதற்கு முன் தான் அந்த ஆபோகி ராக கீர்த்தனையான மனசு நில்ப பக்தி லேகபோத்தே-ஆபோகி ராகத்தில் சிஷ்யர்களுக்கு தியாகையர் பயிற்றுவிப்பதாக காட்சி வரும்)சிந்தித்தபடி ( “நீங்கள் ஆபோகியில் கீர்த்தனம் ஏதேனும் இயற்றியிருக்கிறீர்களா?”) இருக்கையில் சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் உருவான பாடலே “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா”. இந்த தொடருக்கு திரைக்கதை வசனம் நம் வில்லுப்பாட்டு வேந்தர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்கள்.

என் வங்கி சார்பாக வங்கிகளுக்கான நாடகப்போட்டிக்கு எழுத்தாளர் பிரபஞ்சனின் “முட்டை ” நாடகம் என் வடிவ,நடிப்பு இயக்கத்தில் (முட்டைக்காரனாக நான்) உரிய அனுமதி வாங்கித் தந்து என் சக ஊழியர்/நடிகர்களுக்கு இரண்டு நாள் நடிப்பு பயிற்சி கற்று தந்தார் என் நெடுநாள் நண்பர் பரீக் ஷா ஞாநி அவர்கள். அதற்காக நாங்கள் ஹபிபுல்லா ரோட்டில் நடிகர் சங்க கட்டிட மாடி அறை ஒன்றில் பயிலரங்கு நடத்தினோம். அவர் குழுவில் பங்கெடுத்துப் பணியாற்றிய காலங்கள். அப்போது ஒரு டீ பிரேக்கில் ஞாநியுடன் பேசிக்கொண்டிருந்தார் ஒரு விரல் கிருஷ்ணா ராவ் அவர்கள். நான் என் சற்று தள்ளி சேக்காளிகளுடன் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
என்னை பார்த்துவிட்ட ஒருவிரல் கிருஷ்ணா ராவ்(அதில் அவர் பிரிட்டிஷ் கால கெட்டப்பில் அரசுப்பணி ஹெட் கிளார்க்காக நடித்தார்)
“ஞாநி ஸார்!அந்தப் பையன் நடிப்பானா?” எனக் கேட்டு வைக்க
ஞாநி உடனே”ஆர்க்கே! இங்க வாங்க.” என அழைத்து அவரிடம்
அறிமுகப்படுத்தி வைத்தார்.
“எங்க பரீக்ஷா நாடகக்குழு பிரதான நடிகர்ல ஒருத்தர். அவர் பேங்க் ட்ராமா போட்டிக்கு இவர்தான் டைரக்டர். அவர் டீமிற்கு பயிற்சிக்கு என்னை கூப்பிட்டார். அதான் ” என்றார்.

“பையன் காரெக்டருக்கு சரியா இருப்பான். நாளைக்கு டைரக்டர் கிட்ட அழைச்சுகிட்டு போறேன். “

என்னிடம் லேண்ட்லைன் தொலைபேசி எண் தந்தார்.

என் சேக்காளிகள் செமை குஷியாகிட்டாங்க.

கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் வீடு. மறுநாள் காலை எட்டு மணிக்கு அவர் வீட்டில் ஆஜரானேன். கற்பகம் ஸ்டுடியோவில் இரண்டு நாள் ஷூட். இயக்குநரிடம் எனக்கு முன்னாலேயே போனில் பேசினார். படப்பிடிப்பு தளத்திற்கு போகச்சொன்னார்.

“ஸார்! அங்க யாரையும் தெரியாதே எனக்கு? உள்ள விடலைன்னா?:”

“நீங்க போங்க தம்பி. நான்
புரொடக் ஷன் கிருஷ்ணமூர்த்தி கிட்ட சொல்லி வாசல்ல நிக்க சொல்றேன். நானே ஒரு ஒன் அவர்ல வந்துடறேன்”

சொன்னபடி செய்தார். தன் விரலால் என்னை இயக்குநருக்கு அடையாளம் காட்டி அறிமுகம் செய்தார்.

இந்த அபூர்வ வாய்ப்பு தந்தவர் இயக்குநர் என் எஸ் சுரேஷ் அவர்கள்.

நீங்கள் சொல்லுங்கள் சரிப்பட்டு வந்திருக்கிறேனா அன்று.?

இந்தப் படமும் இன்னும் அந்த நாளைய நினைவுகளும் மட்டுமே பகிர என்னிடம்.

உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மனத் திருப்தியும், அந்த நாள் ஞாபக சந்தோஷமும்.

2 Comments on “அந்த நாள் ஞாபகமாக.!”

  1. சுவாரஸ்யமான பதிவு. இன்னும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே!
    “சபாபதிக்கு ” எனக்கு மிகவும் பிடித்த பாடல். என் தாய் மிக அருமையாக ப் பாடுவார். அது உருவான விதம் அறிய மிக்க மகிழ்ச்சி.

Comments are closed.