ஆர்க்கே/மெட்டி

மெட்டியைப் பற்றியொரு
பாட்டெழுத முடியுமா
எனக் கேட்டு வைத்தாய் நீ!

எட்டிப் பிடித்தாலும்
கட்டி இழுத்தாலும்
இந்த மெட்டி மட்டும்
சுட்டித்தனக் கெட்டியாய்
கட்டுப்பட மறுக்கிறது-
கவிதைக்குள்.

கால் கட்டை விரலின்
அடுத்த விரலின்
சிறு வெள்ளிக் கிரீடம் மெட்டி.

கால் விரலின்
நெளி மோதிரமே மெட்டி.

முன்பெலாம்
கல்யாணமான ஆடவரின்
காலடையாளம் மெட்டி.
காலப் பரிணாமத்தில்
கால் மாறிப் போனது
மெட்டியினிருப்பிட
அடையாளம்.

உன் பாத மென்மை போல
மெட்டியும் உன்
மௌனச் சம்மதம்
என்பதை அறிவாயா நீ?

கொலுசு, வளையல் ,ஜிமிக்கி
எல்லாம் மெல்லவேனும்
சிணுங்கி
உன்னுள்ளான
தன்னிருப்பைப் பிரகடனப்படுத்தும்.

பாவம் மெட்டி!
உன்னுடன் சேர்ந்து சேர்ந்து
உன்னைப் போலவே
இழைந்து இழைந்து
என்னுடனான ப்ரியத்தை
கால் திசைகாட்டியாய்
எனக்கு வழிகாட்டியபடியே
இருக்கிறது–
நமக்குள்ளான காதல் ராஜ்ஜியத்தை!


One Comment on “ஆர்க்கே/மெட்டி”

Comments are closed.