லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

முன்னுரை

முதலில், ஆட்டிஸ நிலையாளர்களுடன் பணி புரிய இந்த ஜென்மத்தில் வாய்ப்பு
கொடுத்த அந்த பரம்பொருளுக்கு என் என் நமஸ்காரத்தையும் நன்றியையும் சொல்லிக் கொண்டு தொடங்குகிறேன்.
அது மட்டுமல்ல, ஆட்டிஸத்தை அறிவியல் வழியாக ஆராய்ச்சி செய்யாமல், ஆன்மீகம் வழியாக அனுபவிக்க வாய்ப்புக் கொடுத்த அனைத்து ஆட்டிஸ நிலையாளர்களுக்கும் என் நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறேன்.
ஆட்டிஸ நிலையாளர்களுடன் பணி புரிய ஆரம்பித்த நாளில், முதன் முதலில் எனக்குத் தோன்றிய கேள்வி, அவனுடைய “நான்” எங்கே?
என்னுடைய “நான்” பலமாக இருக்கிறதே!
நான் கண்ட பெரும்பாலான நிலையாளர்களின் ஆட்டிஸ வாயில் “நான்’ வருவதில்லை.
இது எனக்கு வியப்பைக் கொடுத்தது. ஒரு முறை ஒரு விபத்தில் என் கை ஒடிந்து விட்டது. கையில் கட்டுடன் இசை தெரபி கொடுக்கும் போது, சொல்லி வைத்தாற் போல் அத்தனைக் குழந்தைகளும் அந்தக் கையை தன் கை போல் பாவித்து தடவிக் கொடுப்பது கண்டு, நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
உணர்ச்சிகளை வெளிப் படுத்தத் தெரியாது என்ற குற்றச்சாட்டு உண்டுதான். ஆனால், தனக்கே அடி பட்டது போல் துடித்தனர்.
இது எப்படி சாத்தியம்? என்று எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன்.
தன்னுடைய “நான்” எதிரிலிருப்பவர்களிடமும் இருந்தால்தானே இத்தகைய வெளிப்பாடு இருக்கும்.
எனக்கு இந்த அனுபவம் புதிதானதாக மட்டுமல்ல. என் பல்வேறு தேடல்களுக்கு அஸ்திவாரமாய் இருந்தது.
இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு விட முடியாது. நமைச் சுற்றி எத்தனையோ அமானுஷ்யமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தெரிந்து நடப்பவை சில.
தெரியாமல் நடப்பவை பல.
“என்னை விட என் குழந்தையை நீங்கள் நல்லா புரிஞ்சுருக்கீங்க” என்று பெரும்பாலான பெற்றோர்கள் சொல்வதுண்டு.
‘உன்னைத் தெரிந்து கொள்” என்று சொல்லாமல் சொல்லி அதனைத் தேடி ஓட வித்திட்ட ஆட்டிஸ நிலையாளர்களே என் குரு என்றும் சொல்லலாம்.
அவர்களைப் பற்றி அவர்களே சொல்லிக் கொடுத்து உலகுக்கும் அறிமுகப் படுத்தச் சொல்லி, ஒரு தூதுவராக இங்கு பணியாற்ற வைத்திருக்கிறார்கள் என்னை என்றே நம்புகிறேன்.
இப்புத்தகத்தை எழுதும் போது குறிப்பிட்ட இடத்தில் இந்த வார்த்தையைப் பயன் படுத்தலாமா? என்று நினைத்துக் கொண்டிருப்பேன். எதிரிலிருக்கும் என் மாணவனின் வாயில் அந்த வார்த்தை வரும்.
இவர்களின் ஆசீர்வாதமே அது என்று உணர்ந்து அதே வார்த்தயைப் பயன் படுத்தி இருக்கிறேன்.
அது மட்டுமல்ல. சச்சிதானந்தம், ஜோதி, சின்மய், விபு, ஹம்ஸா, பூர்ணா, அத்வைதா, ஓம் போன்ற பெயர்களில் என் மாணவர்களைப் பார்க்கும் போது எப்படி முன் கூட்டியே உணர்ந்து பெயரிட்டு இருக்கிறார்கள் என்று ஆச்சரியப் படுகிறேன்.
இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் என் தோழி நந்தினியும் நான் கடந்து வந்த இதே பாதையை கடந்து வந்தவள்.
இவர்கள்மேல் அன்பும் மதிப்பும் வைத்திருப்பவள்.
அவள் இப்புத்தகத்தை மிக அழகாக மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறாள். என் மனப்பூர்வமான நன்றியை இங்கு உரித்தாக்குகிறேன்.
இப்புத்தகம் எழுதி முடித்தவுடன், முதலில் என் நினைவுக்கு வந்தவர் பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்தா ஸ்வாமிகள்தான்.
இப்புத்தகத்தைக் குறித்த நேரம் அவரது கருத்துக்களை கேட்ட போது, அவரது ஓயாத அலுவல்களுக்கிடையேயும் ஒதுக்கி ஆசீர்வாதத்துடன் மிக அற்புதமாகவும் ரத்தினச் சுருக்கமாகவும் தன் கருத்துக்களைத் தெரிவித்த ஸ்வாமிகளுக்கு என் நமஸ்காரத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்டிஸ நிலையாளர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இப்புத்தகத்திற்கு மிகப் பொருத்தமான அணிந்துரை அளித்திருக்கும் மதிப்பிற்குரிய திருமதி.மைதிலிசாரி மேடத்திற்கு என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
மேலும், மிகச் சிறந்த நரம்பியல் நிபுணரும் அது மட்டுமல்லாமல் ஆட்டிஸ நிலையாளர்களை மதித்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
டாக்டர். ஏ.வி.ஸ்ரீனிவாஸன் அவர்கள் தன் அயராத பணிகளுக்கிடையில், புத்தகத்தைப் படித்து சிறப்பாகக் கருத்து கொடுத்தமைக்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடையறாத அலுவல்களுக்கிடையே புத்தகத்தைப் படித்து அழகான தன் கருத்தை அளித்த ஆத்மார்த்தமாக மன நலனுக்காக உழைக்கும் மதிப்பிற்குரிய டாக்டர். லக்ஷ்மி சங்கரன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனமார்ந்த
இப்படிக்கு,
அன்புள்ள,
லெஷ்மி