மஞ்சுளா சுவாமிநாதன்/மர பைத்தியம்

இந்த மஞ்சள் நிற ராட்சசன் தனது இயந்திர கைகளால் என் மரங்களை எல்லாம் பிடுங்கி எரிகிறானே!”
கோகி அவள் சிறு வயதில் எழுதிய கவிதை கிறுக்கலை புல்டோசரை கண்டவுடன் நினைவு கூர்ந்தாள். ராமாயணத்தில் அரக்கர்களும் அரக்கிகளும் வனங்களை நாசம் செய்வதைக் கண்டு அதனை ஒப்பிட்டு அந்த கவிதையை எழுதியிருந்தாள். அந்த மஞ்சள் நிற புல்டோசர் அவள் ஆசை ஆசையாய் வளர்த்து, பாதுகாத்து, இப்போது இறந்து போன ஒரு வேப்ப மரத்தின் மிச்சத்தை எடுத்துக் கொண்டிருந்தது.
சுமார் 30 வருடங்களுக்கு முன் அந்த சாலை ஒரு வழி பாதையாக இருந்தது. பிரதான சாலையில் அவளது குடியிருப்பு இருந்தாலும் வாசலில் நிறைய நிழல் தரும் குளிர்ந்த மரங்கள் இருந்தன. இப்போது அந்த பிரதான சாலை அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. அந்த காலத்தில் புறநகர் பகுதியான அவ்விடத்தில் இப்போது ஒரு சதுர அடி பதினைந்தாயிரத்தை எட்டிவிட்டது. எண்ணற்ற மரங்கள் புது வீடுகள் மற்றும் கடைகள் கட்ட வெட்டி வீசப்பட்டது. சிறு வயதில் யாராவது அவள் குடியிருப்பின் வெளியில் இருந்த அந்த வேப்ப மரத்தின் அடியில் மூத்திரம் போனால் கூட யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்து கல்லால் அடித்து அவர்களை துரத்துவாள் கோகி .
“ஏண்டி கோகி, அந்த மாமா மரத்துக்கு உரம் தானே போடறார், அதை ஏன் தடுக்குற?” என்று அப்பா கேட்டால், “அப்பா, நமக்கு நிழல் தரும் மரத்துக்கு மரியாதையா உரம் போடணும், இந்த மாதிரி அவமானப்படுத்தக் கூடாது,” என்று கூறுவாள்.
நாளடைவில், அவள் வளர வளர, மரங்களில் ஆணி அடிப்பது, கேபிள் ஒயர்களை சுற்றுவது, மின்விளக்குகளை சுற்றுவது போன்ற அத்தனை அத்துமீறல்களையும் வன்மையாக கண்டித்தாள் . ஒரு சின்ன குழு ஒன்றை உருவாக்கி, மரங்களை சேதப்படுதுபவர்கள் மீது போலீசில் புகார்கள், மாநகராட்சியில் புகார்கள், தர்ணா, கண்டனங்கள் என்று மரங்களை அழிப்பவர்கள் மீது அவள் எதிர்ப்பு வலுவடைந்தது. அவள் பெற்றோர் அவளுக்கு வைத்த பெயர் கோகிலா என்றால், அவள் தெருவில் அவளது பெயர் மர பைத்த்தியம்.
அந்த வேப்ப மரத்து குப்பை அதிகம் விழுகிறது என்று அருகில் இருந்த கடைக்காரன் ஒருவன் அந்த மரத்தை வெட்டி எறிய பலமுறை முயற்சித்தான், ஆனால், கோகியின் குறுக்கீடால் அது முடியவில்லை. ஒருநாள் நள்ளிரவு அவன் ஏதோ ஒரு அமிலத்தை அதன் வேர்களில் ஊற்ற, அந்த மரம் பத்தே நாட்களில் கருகிப்போனது. 30 வருடம் நிழல் கொடுத்த அந்த மரம், பக்ஷிகளுக்கும் , அணில்களுக்கும் வீடாய் இருந்த அந்த மரம் மொட்டையாகிப் போனது. இதனை செய்தது அந்த கடைக்காரன்தான் என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் கனத்த மனதோடு ஆட்டோவில் ஏறி தனது பணியிடம் நோக்கி விரைந்தாள் கோக்கி.
அப்போது, டிரிங்… டிரிங்… என அவள் அலைபேசி அழைத்தது. “ கோகி, நம்ம பக்கத்து தெருல ஒரு மொட்டை மரம் இருந்ததே? புயல்ல முறிஞ்சு போச்சே? இப்போ அதுல துளிர் விட்டிருக்கு டீ, ஃபோட்டோ அனுப்பியிருக்கேன் பாரேன்!” என்று உற்சாகமாக கூறினாள் மரங்களை பாதுகாக்கும் குழுவை சேர்ந்த கலா,.
அந்த இளம் தளிர்களை பார்த்த கோகியின் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்த்தது. “ஏய் மரமே, நீ வீழ்ந்தாலும் எப்படி உயிர்த்து எழுகிறாய்!” என்று நினைத்த கோகி, மீண்டும் லட்சக்கணக்கான மரங்களை காக்க புத்துயிர் பெற்றாள்.