முனைவர் ந.பாஸ்கரன்/தன்னந்தனி மூங்கில்   

நதியின் ஓட்டத்தில்
ஒரு துளி மட்டும்
தனித்து உருளுவதால் 
கரைகள் கலங்குகின்றன.

பசுமரத்தின் 
ஒரு கிளை மட்டும் 
பட்டுப் போனதில் 
மரங்கொத்திக் கூட மனம் தடுமாறி 
ஆணிவேரிடம்
அழுகின்றது.

இருட்டைத்  தின்னுகின்ற கண்கள் 
இன்னும் எத்தனை காலம்தான் 
இமை பிளந்தே டகிடப்பது… ?

ஈறு கொல்லியாய்..
அகப்பையாய்…
ஏணியாய் ..
கொடிமரமாய்…
புல்லாங்குழலாய் …
பாடையாய்…. 
பலப்பிறப்புக் கருக்கள் 
 மூங்கிக்கொத்தில் 
கோர்த்துக் கிடக்கின்றன.

ஒத்தை மூங்கிலில் 
முள்ளறுக்கக் கூட இனி
அலக்குகளை 
நீட்ட மாட்டீர்களா?

தன்னந்தனி மூங்கில்
ஒரு தன்னந்தனி மூங்கில்..
ஒற்றைக்கரமேந்தி ஓலமிடுவது
கேட்கவில்லையா?

அதை
உள்ளுக்குள் 
சேர்க்கா விட்டாலும் புறத்தைச் சுற்றி
வேலியாகும் வேட்கையுடன்
காத்திருக்கிறேன் என்பது கேட்கவில்லையா