
அந்த பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்கு அவள் சிறு வயதில் அப்பாவுடன் செல்வாள்
அந்த கடையை நடத்தி வந்தவர் ஆழ்வார்.அப்பா கேட்கும் புத்தகத்தை”என்கிட்ட இருக்கு..”என்று சொல்லிய படியே புத்தகக் குவியலிலிருந்து அதிகம் தேடாமல் எடுத்து கொடுப்பார்.
அப்பாவின் கையைப் பிடித்து சிறுமியாய் நிற்கும் அவளிடம்..”பாப்பா எந்த கிளாஸ் படிக்கறே..நல்லா படிக்கணும்.பெரிய..பெரிய படிப்பு படிக்கணும்.கற்றது கைம்மண் அளவு.காலத்துக்கும் படிக்கணும்”என்று சொல்லிய படியே..”இந்தா….குழந்தைகள் கார்ட்டூன் தொடர்..இதைப் படி” என ஒரு புத்தகத்தை தருவார்.
அப்பாவுடன் ,அவள் செல்லும் போதெல்லாம் ..அந்தந்த வயதிற்கு ஏற்றார் போல புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்வார்.
அப்படித்தான்..அவள் பள்ளி படிப்பை முடிக்கும் தறுவாயில்..ஒருநாள் அந்தக் கடைக்குச் சென்றாள்.
“மேல என்ன படிக்கப் போற?” என்றார் ஆழ்வார்.
“மருத்துவம்..”
என்றவளிடம்..
“உன்னோட புத்திசாலித்தனத்திற்கு இடம் கிடைக்கும்.இந்தா மருத்துவம் நுழைவுத் தேர்வுக்கான கேள்வி-பதில்..இந்த புத்தகத்தைப் படி”என ஒரு தடினமான புத்தகத்தை எடுத்துத் தந்தார்.
அவளுக்கு எய்ம்ஸில் தில்லியில் இடம் கிடைத்தது.
ஹாஸ்டல் வாழ்க்கை..எம் பி பிஎஸ் முடிந்து எம் எஸ் முடித்தாள்.ஆன்காலஜி ஸ்பஷலிஸ்ட் ஆனாள்.
ஆனாலும்..அவ்வப்போது அப்பாவிடம் பேசும் போது.ஆழ்வார் பற்றியும் பேசி..தான் விசாரித்ததாகச் சொல்லச் சொல்வாள்.படி..படி..என பெற்றோர் அறிவுரை சொல்வதைப் போல அவளை சின்ன வயதில் இருந்து படிப்பில் ஆர்வம் வரவழைத்தவர் அல்லவா அவர்.
ஒருநாள் அப்பா சொன்னார்..”அம்மா..ஆழ்வாருக்கு லங் கேன்சர்>.ரொம்ப கஷ்டப்படுறார்”
“அப்பா ..அவர் கிட்ட சொல்லுங்க..நான் சர்ஜன் ஆயிட்டேன்.எனக்குத் தெரிஞ்ச பெரிய..அனுபவமுள்ள மருத்துவரை வைச்சு..அவருக்கு அறுவை சிகிச்சை பண்ணிடலாம்னு” என்றாள்.
படிப்பு முடிந்து ஒரு ஆன்காலஜிஸ்டிடம் பணி புரிந்து வரும் அவள்..சென்னைக்கு வந்தாள்
அப்பா..ஆழ்வாரைப் பார்த்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது என்றார்.
ஒருநாள் மாலை..ஆழ்வாரைப் பார்த்து..அவருக்கான சிகிச்சைப் பற்றி பேசி ஏற்பாடு செய்ய ..புத்தகக் கடைக்குச் சென்றாள் அவள்
கடையில் ஒரு இளைஞன் உட்கரந்திருந்தான்.”ஆழ்வாராம்மா..என்னோட அப்பாதான்..நாலு மாசம் முன்னால தான் காலமானார்” என்றவன்..”உங்க பெயர்” என்றான்.
இவள் தன் பெயரைச் சொன்னாள்..
“நீங்க வந்தா இந்த புத்தகத்தை கொடுக்கச் சொன்னார்.கண்டிப்பா வாசிக்கச் சொன்னார்” என ஒரு புத்தகத்தை அவளிடம் தந்தான்.
புகழ் பெற்ற புற்றுநோய் வைத்தியர் ஒருவரின் அனுபவங்களைச் சொல்லும் நூல் அது.
