எல்.ரகோத்தமன்/சித்திரகுப்தனின் ஏடு


 
 
இரண்டு முறை
வாகன விபத்தில் சிக்கி
பிழைத்திருக்கிறேன்!
 
தேவை கருதி
நிறைய பொய்
சொல்லியிருக்கிறேன்!
 
பொய்யை
உண்மை போல்
சொல்லியிருக்கிறேன்!
 
சமயத்தில் உண்மையும்
உரைத்ததுண்டு!
அதையும் சிலர்
பொய்யென நினைத்ததுண்டு!
 
சந்தர்ப்பம்
கிடைத்த போதெல்லாம்
லஞ்சம் வாங்கியிருக்கிறேன்!
அதே போல்
லஞ்சம் கொடுத்திருக்கிறேன்!
 
அர்ப்ப விஷயங்களுக்கு
கோபப் பட்டிருக்கிறேன்!
 
கோபப்பட வேண்டியவற்றிற்கு
கோபப்படாமல் இருந்திருக்கிறேன்!
 
நிறைய கடன்
வாங்கியிருக்கிறேன்!
திருப்பிக் கொடுத்தது
கொஞ்சம்!
கொடுக்காமலே
போனதும் உண்டு!
 
ஏமாறியது போல்
ஏமாற்றியும் இருக்கிறேன்!
 
இவையெல்லாம்
சித்ரகுப்தனின்  கையேட்டில்
ஏறியிருக்குமோ!
 
 
என் தலைவிதி யாதென
சித்திரகுப்தனின் ஏட்டில் காண
ஒரு பேரவா மனதின் நுணியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது!
 
ஒரு நாள் சித்திரகுப்தன்
கனவில் வந்தான்!
தன் ஏட்டை என்னிடம்
தந்தான்!
 
ஆவலோடு
ஒவ்வொரு பக்கமாய்
புரட்டினேன்!
 
என்பதெட்டு லட்சம் பக்கங்களை
புரட்டிவிட்டேன்!
என் தலைவிதியை
சுமந்த  பக்கம்
இன்னும் வந்தபாடில்லை!
 
அதற்குள் விடிந்துவிட்டது!
கனவு ஏட்டில்
எனக்கும் மேலான
அண்ணன்களின் விதி கண்டு
திருப்தி கொண்டது  மனம்
               
                                                  *