
நேஹா வடநாட்டுப் பெண் , அவளுடைய அம்மா மலையாளி அப்பா குஜராத்தைச் சேர்ந்தவர் . அவள் பன்னிரண்டாம் வகுப்பு வரை குஜராத்தில் காந்திநகரில் படித்தாள் . படிப்பில் மிகவும் கெட்டிக்காரி , ஆனால் வாயே திறக்காத சாது . திடீரென்று ஒரு நாள் அவள் அப்பா மாரடைப்பால் மரணம் அடைந்தார் . அவள் அம்மா ஷர்மிளாவும் வேலைக்கு எங்கும் செல்லாததால் ,அவள் வருமானத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள் .
அப்பொழுது அவளுடைய அண்ணனின் துணிக் கடை சென்னையில் சௌகார்பேட் ஏரியாவில் இருப்பது நினைவிற்கு வந்தது. அவனிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டபோது , அவன் “ஷர்மிளா இதை நீ கேட்கத் தான் வேண்டுமா ? உடனே கிளம்பி வா , நான் உன் மகளுக்கும் இங்கேயே ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கி தருகிறேன் .” என்றார்
உடனே ஷர்மிளாவும் நேஹாவும் காந்திநகர் வீட்டை காலி செய்துவிட்டு , சென்னைக்கு வந்து சேர்ந்தாள் . அண்ணனின் உதவியால் நேஹாவை நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்த்தாள் .
முதல் நாள் கல்லூரிக்குச் செல்லும்போது , நேஹாவை பார்த்து அனைவரும் கிண்டலடித்தனர் . அவளிடம் நட்புணர்வோடு பழக யாரும் விரும்பவில்லை . நேஹாவும் அவளும் அவள் படிப்புமாக இருந்தாள் .
நேஹாவின் காது பட அனைவரும் அவளைத் தவறாகக் கேலி செய்தனர் . அவள் தூக்கியெடுத்து வாரிய தலை , ஒரு கட்டான முகம், காதில் பெரிய தோடு என்று சென்னை வாழ் பெண்களுக்கு விசித்திரமாகக் காணப்பட்டாள் .
அதனாலேயே தினமும் அவள் மாமாவிடம் வந்து வேறு கல்லூரி மற்ற சொல்லிக் கேட்பாள் , அவரும் “இதெல்லாம் ஒன்றும் இல்லை , நீ கவலைப் படாதே , படிப்பில் கவனம் செலுத்து “என்று அறிவுரை கூறி நகர்வார் .
ஒரு நாள் பாதி வகுப்பு நடந்துகொண்டிருக்கும் போது , பின்னால் உட்கார்ந்திருந்த சில பெண்கள் , அவள் தலை முடியை இழுத்து அவளிடம் பிரச்சனை செய்தனர் , அதைப் பார்த்துவிட்டு வகுப்பிற்கு வந்த ஆசிரியரும் வம்பிழுத்த பெண்களை மிகவும் கடிந்து கொண்டார் .
அன்று இரவு வீட்டிற்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் அழுதுகொண்டே தூங்கிவிட்டாள் . கல்லூரி தொடங்கி 3 மாதம் இருக்கும் ,அன்று வரை யாரிடமும் ஒரு தண்ணீர் கேட்கக் கூட அவள் வாய் திறந்ததே இல்லை .
எல்லாவற்றையும் அவள் அம்மாவிடம் கூறி வறுத்த பட்டபோது , அவள் அம்மா ,’’நேஹா , உனக்கு அவர்கள் கேலி செய்வது பிடிக்கவில்லை என்றால் , அதை நீ அவர்களுக்குத் தெரியப்படுத்தினாயா ?? என்று கேட்டாள் .
அதற்கு அவள் “இல்லை அம்மா” , என்றாள் . அங்கு தான் பிரச்சனையே ,ஒருவர் செய்யும் தவறுகளை நாம் தான் ஊக்குவிக்கிறோம் , நீ வேறு மாநிலத்திலிருந்து வந்திருக்கிறாய் , ஆனால் உனக்குத் தமிழ் தெரியும் என்றும் , அவர்கள் உன்னைக் கேலி செய்வது உனக்குப் புரிகிறது என்றும் அவர்களிடம் ஒரு முறை கூறி பார் ,பிறகு உன் வழியில் அவர்கள் வர மாட்டார்கள், அதையும் மீறி அவர்கள் உன்னிடம் வந்தாள் என்னிடம் கூறு ,நான் வேறு வழி கூறுகிறேன் “ என்றாள் .
நேஹாவும் அம்மா சொன்னது உண்மைதான் , எனக்கு இந்த செயல் வலிக்கிறது என்று நான் தெரிவிக்காமல் , அதை அவர்கள் செய்வதற்கு ஊக்குவித்த பிறகு ,அது எனக்கு வலிக்கிறது என்று புலம்பி பலன் இல்லை , எனவே நாளைக்கே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கட்டுகிறேன் ,”என்று கூறிவிட்டுப் படுக்கச் சென்றாள் .
அடுத்த நாள் காலை கல்லூரிக்குச் சென்றாள் . அங்கே கேலி செய்யும் குழு வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டிருந்தது . அதில் முக்கியமான பெண்ணை மட்டும் காணவில்லை , நேஹா அவளும் வரட்டும் பிறகு நாம் போய் பேசலாம் என்று காத்திருந்தாள் .
அப்பொழுது திடீரென்று யாரோ ஒரு பெண் கல்லூரி வாயிலில் , தண்ணி லாரி ஒன்றினால் அடிப்பட்டு மிகுந்த உதிரப்போக்கோடு கீழே விழுந்து கிடப்பதாக , வகுப்பிற்கு பொது அறிவிப்பு வந்தது . யாராக இருக்கும் என்று பதறி அடித்துக்கொண்டு போய் பார்த்தால் , அங்கே அடிப்பட்டு விழுந்து கிடப்பது , கேலி குழுவின் தலைமையான ஆள் தான் .
உடனே அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவளுக்கு மிகுந்த ரத்தப்போக்கு ஏற்பட்டதனால் ,புதிதாக ரத்தம் ஏற்ற வேண்டும் , அப்பொழுது தான் அவள் பிழைப்பாள் என்று மருத்துவர் கூற , அவளுடைய ரத்த வகை , “பி நெகடிவ் “ என்பதால் , மருத்துவர் கூறி முடித்த அடுத்த நொடி அவளுக்கு அவர் கூறியது புரிந்து “நான் ரத்தம் கொடுக்கிறேன் “ என்று முன் வந்தாள்
அவளுடைய உதவியை மற்ற நண்பர்கள் அன்றிலிருந்து மதிக்க ஆரம்பித்தனர். அவளுக்கு தங்களுடைய ஆத்மார்த்த நன்றியைத் தெரிவித்தனர் .
இந்த நிகழ்ச்சியின் மூலம் ,யாரையும் மனதாலும் வார்த்தைகளாலும் காயப் படுத்த கூடாது என்றும் , நம் மொழி வேற்று மாநிலத்தவர்க்குத் தெரியாமல் இருக்கக் கூடும் என்றும் நினைக்கக் கூடாது , என்று பாடம் கற்றனர் .
அன்றிலிருந்து தன்னை கேலி செய்த வட்டாரத்திற்குள் சக தோழியாக வலயம் வந்தாள் நேஹா . இதன் மூலம் வடக்கும் தெற்கும் நட்பில் சங்கமித்தது …..
