
பெண் சமத்துவம்
சேதுபதி தன்னுடைய டைரியை எடுத்து பார்த்தார். பார்த்தான் என்று கூட தாராளமாக சொல்லலாம்.
ஆனால் மரியாதைக்காக பார்த்தார் என்றே சொல்லுவோம்.
வைவாசி மாதம் முதல் தியதி.
காலை 7 மணிக்கு அன்பு பள்ளிக்கூட சிறுவர்களுக்கு காலை உணவு பரி மாறும் ஒரு முக்கிய புள்ளியுடன் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
10 மணி சுமாருக்கு
அடையார் கிளப்பில் ஒரு நிதி நிறுவன மேலதிகாரியுடன் சந்திப்பு.
பெரிய மீன்,அப்படியே அமுக்கிட வேண்டும்!
மீண்டும் மாலை 5 மணிக்கு மேடைப் பேச்சு.
சேதுபதி நல்ல மேடைப் பேச்சாளர்.
ஆரம்ப காலத்தில் அரசியல் வாதிகளுக்கு மேடையில் பேச எழுதிக் கொடுத்து முன்னுக்கு வந்தவர் .
இவர் எந்த கட்சியிலும் இல்லை ஆனால் எல்லா கட்சிக் காரர்களுக்கும் மிகவும் வேண்டிய நபர்.
அதனால் சற்று ஆணவம் கொண்டு அகம்பாவம் தலைக்கு ஏறி ஆட்டிக் கொண்டு இருந்தது.
இன்று பேச வேண்டிய தலைப்பு பெண் சமத்துவம்.
திறந்த வெளியில் மேடை போட்டு, ஸ்பீக்கர் செட் வைத்து அலங்காரம் ஜோடி க்கப் பட்டு கோலாகலமாக இருந்தது.
நல்ல கூட்டம்.ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நகராத மக்கள் கூட்டம்.
பாரதியார், பாரதிதாசன், மற்றும் கவிமணி போன்ற பெரும் கவிஞர்களும் சமூக சீர்திருத்த சிந்தனையாளர்களும், பெண் சுதந்திரத்திற்காக போராடியவர்களை மேற்கோள் காட்டி அருமையாக பெண் சமூகத்தில் ஆணுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று அடித்து, வெளுத்து பேசினார்.
கை தட்டல்கள் ஓய கொஞ்ச நேரம் ஆயிற்று.
சேதுபதி மனைவி வசந்தி ,B A வரையிலும் படித்துத் தேர்ந்தவள் . நல்ல குடும்பப் பாங்கு உள்ள பெண், . பொறுமைசாலி.
சொத்து சுகம் கண்டு தலைக் கீழாக ஆடுபவள் அல்ல.
நிதானம், எதிலும் நிதானம்.
மதியம் உணவுக்கு வீடு வந்த போது கூட சேதுபதி அதிகாரம் கொடிக் கட்டியது.
“சோறு கூழாகிப் போச்சு.இன்னும் சமையல் செய்ய தெரியலை?’
“இத்தனை வயசு ஆகியும் என்ன தான் வளர்ப்பு?”
என்று மனைவியோடு சேர்த்து அவள் பெற்றோரையும் சாடும் பக்குவம் இல்லாத பேச்சு.
தவிர இன்னும் கெட்ட வார்த்தைகள் அரசனைப் பூக்களாக உதிர்ந்தன.
சேதுபதியைத் திருப்பி கேட்க நேரமாகாது, ஆனால் அவள் அப்படிக் கேட்க தையிரியம் இல்லை. அவள் வந்த குடும்ப வழியும் பண்பும் அவளைக் கேட்க அனுமதிப்பது இல்லை.
மேடைப் பேச்சு முடிநது கரகோஷத்தின்
இடையில் இரு கை கூப்பி
“வணக்கம்”என்று சொல்லிய வண்ணம் ஒரு இள வயது பெண் மேடையில் வந்து நின்றாள்.
“இங்கு அமர்ந்து இருக்கும் அனைவருக்கும் நான் உங்கள் சகோதரி.
மற்றபடி நான் யார்,என்ன பெயர் என்று அறிமுகம் செய்து கொள்ள விரும்பவில்லை.
இங்கு வந்திருக்கும் சகோதரிகளின், தாய்மார்களின் பிரதிநிதியாக பேசப் போகிறேன்,”
“பெண் சமதுவத்தைப் பற்றியும், அதன் அவசியத்தைப் பற்றியும் விரிவாக அழகாக பேசினார் தலைவர். மிகவும் ரசித்தேன்.
சமத்துவத்தை வாயார பேசுபவர் மனதார அவ்விதம் செயலில் காட்டுகிறது உண்டா?
மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்.
எனக்குத் தெரியும்.
வீட்டில்,
குடும்பத்தில்,தாய்,மனைவி, மகள்,மருமகள்,
சகோதரிகள்,என்ற பெண் சொந்தங்களை சம நோக்கோடு பார்க்கிறார்களா?
இல்லை! இல்லை!!
ஆண் ஆதிக்கம் தலை விரித்து ஆடும் பொழுது,
பெண்ணுக்கு ஏது சமத்துவம்?
பேசுபவர்கள் முதலில் தங்கள் குடும்பப் பெண்களுக்கு சமத்துவமும் நீதியும் வழங்கட்டும்,பிறகு மேடை போட்டு பேசலாம் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.”
இப்பொழுது எல்லொரும் சேது பதியை ஒரு விதமாக பார்த்தார்கள்.
பெயர் சொல்லா பெண் பேச்சாளரை வாழ்த்தி மலர் மாலை அணிவித்து மகிழ்ந்தது மக்கள் கூட்டம்.
