ஜஸ்டிஸ் திரு. டி. எஸ். அருணாச்சலம் அவர்களின் At The Holy Feet of My Master – Part 2

யோகி ராம்சுரத்குமார்

ஜய குரு ராயா

பகிர்வு 137

புத்தகத்திலிருந்து :

தமிழாக்கம் : பானுமதி கிருஷ்ணஸ்வாமி

அவதார குரு மஹராஜ் அறியாதது எதுவும் உண்டோ?

————————————————————

1994 ஆம் ஆண்டு மே மாதம். நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை. சில நாட்கள் நான் பகவானுடன் இருந்து அவரது கருணை மழையில் நனைவதற்கு பகவான் என்னை அனுமதிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு திருவண்ணாமலை சென்றுவிட்டேன். நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைகள் எப்போதும் நிறைவேறும். அதனால் 6 நாட்கள் அக்னி ஷேத்திரத்தில் இருந்து பகவானின் அருளை பெற்றேன். அந்த 6 நாட்களும் என்னால் மறக்க முடியாதவை. அந்த 6 நாட்களும் பலவிதமான அனுபவங்கள். பகவானை வெவ்வேறு மனநிலையில் , வேறுபட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகளில் கண்டேன். “பகவான் பற்றிய சிந்தனை மட்டுமே ! வேறு எதுவும் இல்லை ” என்கிற எண்ணத்தில் நான் பின்னிப் பிணைந்திருந்தேன். அது என்னிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த நாட்களில் பெரும்பாலும் பகவானின் தரிசன அமர்வுகள் சுதாமாவில் தான் இருக்கும். எப்போதாவது தர்ஷன் மந்திரில், கூடியிருக்கும் பக்தர்களுக்கு ஆசிகள் அளிப்பார். சிலர் தர்ஷன் மந்திருக்கு வெளியே காத்திருப்பார்கள். 1994, மே 11 ஆம் தேதி சுதாமாவில் நான் அதிகாலையிலிருந்தே பகவான் அருகில் அமர்ந்திருந்தேன். வெளியே பக்தர்கள் கூட்டம். தொடர்ந்து அவர்கள் வரிசையில் வந்து பகவானிடம் ஆசியும் பிரசாதமும் பெற்று சென்று கொண்டிருந்தார்கள் . சகோதரி தேவகி தலைமையில் நாம சங்கீர்த்தனம் நடந்து கொண்டிருந்தது .

சிறிது நேரத்தில் ஒரு இளம் பெண் வந்தார். அவர் பெயர் ரஜினி என்பது தெரிய வந்தது. பகவான் என்னிடம் “ஜஸ்டிஸ் அருணாச்சலம் உங்களுக்கு ரஜினியைத் தெரியுமா?” என்று கேட்டார். தெரியாது என்று பதிலளித்தேன். பகவான் ” சென்னையில் இருக்கும் பிரபல சிற்பி கலாசாகரம் ஸ்ரீ ராஜகோபாலின் சிஷ்யை தான் ரஜினி. நேற்று அவரது ஆசானின் பிறந்த நாள். ரஜினி அதற்காக இந்தப் பிச்சைக்காரனுக்கு ஒரு “ஓவியத்தை ” பரிசளித்தார். ” என்று சொன்னார். பின்னர் ரஜினியைப் பார்த்து “ஜஸ்டிஸ் அருணாச்சலத்தை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர் ” எப்போதோ ஒரு முறை அவரை பார்த்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

பகவான் என்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் இப்படி பகவான் என்னை உற்று நோக்குகிறார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பின்னர் பகவான் சகோதரி தேவகியிடம் “தேவகி, நேற்று ரஜினி இந்த பிச்சைக்காரனுக்கு கொடுத்த படத்தை எடுத்து வா” என்று சொன்னார். சகோதரி தேவகி உள்ளே சென்று ஒரு வெள்ளை பேப்பரில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை எடுத்து வந்தார். அதை கையில் வாங்கிக் கொண்ட பகவான், “இந்த தக்ஷிணாமூர்த்தி படம் ரஜினி வரைந்தது. ” என்று சொல்லி அதனை என்னிடம் கொடுத்தார்.

ஓவியம் பிரமாதமாக இருந்தது. எனது குருவின் தெய்வீக இருப்பில் நான் அந்தப் படத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த ஓவியரின் திறமையை எண்ணி வியந்தேன். படத்தை பார்த்த பிரமிப்பில் சூழ்நிலையையே மறந்து விட்டேன். கடைசியில் பகவான் என்னை பெயர் சொல்லி அழைத்தபோதுதான் சுய நினைவுக்கே வந்தேன். என்னை அழைத்த பகவான் படத்தை திருப்பிக் கேட்டார். கொடுத்துவிட்டேன்.

இப்போது பகவான் ரஜினியைப் பார்த்து சிரித்தபடி,” ரஜினி இந்தப் படத்தை இந்த பிச்சைக்காரனுக்கு கொடுத்தார் . அதனால் இந்த பிச்சைக்காரன் இதனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிச்சைக்காரனாக இருப்பதால் எந்த உடமையையும் வைத்துக் கொள்ளக்கூடாது. அதனால் இந்த பிச்சைக்காரன் இதனை ஜஸ்டிஸ் அருணாச்சலத்திற்கு கொடுக்கிறான்” என்றார்.

பகவான் அந்த படத்தை எனக்கு கொடுப்பதாக ரஜினியிடம் கூறியதும் அவர் முகத்தில் நாணம் கலந்த ஒரு புன்னகை தெரிந்தது. அதைக் கண்டு பகவானுக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே பகவான் அந்தப் படத்தை என்னிடம் கொடுத்தார். எனக்கு ஒரே பரவசம், உற்சாகம் , மகிழ்ச்சி, இனிமையான உணர்வுகள்! படத்தை வாங்கிக் கொண்ட எனக்கு எனது பணிவான நன்றியைக்கூட சொல்ல வாய் வரவில்லை. வார்த்தைகளின்றி தவித்து நின்றேன். உணர்ச்சிப் பெருக்கில் என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்படி ஒரு கலவையான மனநிலையிலும் எனக்குள் ஒரு விஷயம் தோன்றியது. பகவான் ஒரு லீலையை நடத்த சகோதரி தேவகியை தக்ஷிணாமூர்த்தி ஓவியத்தை கொண்டுவரச் சொல்லி அந்த திறமையான ஓவியரின் எதிரில் பகவான் என்னிடம் கொடுத்திருக்கிறார். இதன் அர்த்தம் என்ன? என்று நான் என்னையே கேட்டுக் கொண்டேன். ஏழு மாதங்களுக்கு இதற்கான அர்த்தம் எனக்கு விளங்கவில்லை.ஏழு மாத காலத்திற்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை கட்டுரையின் பிற்பகுதியில் சொல்கிறேன். இப்போது தக்ஷிணாமூர்த்தி படம் பற்றி பேசுவோம்.

தரிசனம் முடிந்து பெரும்பாலும் பக்தர்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள். நாங்கள் இரண்டு மூன்று பேர் மட்டுமே பகவானுடன் இருந்தோம். பகவான் சகோதரி தேவகியிடம் சுதாமாவில் இருப்பவர்களுக்கு மதிய நேர பிரசாதம் தயார் செய்யும்படி சொல்ல, அவர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்ய உள்ளே சென்றுவிட்டார். சகோதரி தேவகி உள்ளே சென்றதும் பகவான் என்னிடம் “இந்தப் படத்தை மடக்காமல், கசக்காமல் எப்படி சென்னைக்கு எடுத்துச் செல்வீர்கள்” என்று கேட்டார்.

நான், ” சர்க்யூட் ஹவுஸ் போனதும் , இரண்டு தடித்த அட்டைகளுக்கு இடையில் இந்தப் படத்தை வைத்து அதனை எனது பெட்டியின் அடியில் வைத்துவிடுவேன். அது பாதுகாப்பாக இருக்கும்” என்று சொன்னேன்.

பேக்கிங் குறித்த எனது திறமை பற்றி பகவானுக்கு ஒரு வேளை சந்தேகம் இருந்திருக்கலாம் பிரசாதத்திற்காக நாங்கள் பிரதான ஹாலுக்கு வந்த சமயத்திலும் படம் அவர் கையில்தான் இருந்தது. திடீரென்று சகோதரி தேவகியை அழைத்த பகவான் அவரிடம் ” ஜஸ்டிஸ் அருணாச்சலத்திற்கு நாம் இதனை பேக் செய்து கொடுக்க முடியாதா? எப்படி பேக் செய்வாய்? ” என்று கேட்டார்.

அதற்கு சகோதரி தேவகி “புடவைகள் வைக்கும் அட்டை பெட்டியில் வைத்து பேக் செய்து விடலாம் ” என்று சொல்லி அடுத்த அறைக்குச் சென்று அட்டை பெட்டியை எடுத்து வரப் போனார். ஆனால் பகவானோ , அந்த அட்டை பேட்டி பேக்கிங்கிற்கு சரிப்பட்டு வராது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். சகோதரி தேவகி அட்டைப் பெட்டியைக் கொண்டு வந்தார். ஆனால் பகவான் சொன்னபடி ஓவியம் வரையப்பட்ட பேப்பரைவிட அட்டைப்பெட்டி சிறியதாக இருந்தது.

அடுத்து பகவான் சகோதரி தேவகியிடம் ” சுதாமாவில் நீ ஃபைல் வைத்துக் கொள்ளவில்லை?” என்று கேட்டார். “இருக்கிறதே” என்று சொன்ன சகோதரி தேவகி உள்ளே சென்று ஒரு ஃபைலை எடுத்து வந்தார். அதை வாங்கி பகவான் “தக்ஷிணாமூர்த்தியை” அவரே அழகாக அந்த ஃபைலில் வைத்தார். அது தக்ஷிணாமூர்த்தியே கர்ப்பகிரகத்திற்குள் நுழைவது போலிருந்தது. பின்னர் அவரி டம் cello tape கொண்டு வரச் சொல்லி சகோதரி தேவகி உதவியுடன் பகவானே அதை நேர்த்தியாக ஒட்டி பேக் செய்தார். பகவானின் முக பாவங்கள் அவரது திருப்தியைக் காட்டின. “இப்போது இது பத்திரமாக ஜஸ்டிஸ் அருணாச்சலத்தால் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட முடியும்” என்று சொல்லி அந்த பேக்கை என்னிடம் கொடுத்து என் முதுகில் வாஞ்சையுடன் தட்டினார்.

பகவானே அனைத்து வேலையையும் செய்திருக்கிறார் என்பதால் அதற்கு காரணம் இல்லாமல் இருக்காது . ஆனால் அப்போது நான் அதை உணரவில்லை.

May be a doodle

Al